|
ஊடகவியலாளர்களுக்கு உயிராபத்தை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என்று பிறசல்லை தளமாகக்கொண்டு இயங்கும் அனைத்துலக செய்திகள் பாதுகாப்பு நிறுவனம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்துலக செய்திகள் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் றொட்னி பின்டெர் தெரிவித்துள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் தாமாவே அதிக வன்முறைகளைத் துண்டுகின்றனர் என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் அறிக்கை, ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக அமைந்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் "தேசத்தின் எதிரிகள்" என்ற வாசகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையானது ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை அதிகரிக்கும் சந்தர்ப்பத்தை அதிகரித்துள்ளது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளை ஆயுதக்குழுவினர் மேற்கொள்ளும் முன்னர் அரசாங்கம் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் கவனத்திற்கும் நான் கொண்டு வந்துள்ளேன் என்றார் அவர்.
கடந்த இரு வருடங்களில் 12 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதுடன் பல கடத்தல்கள், துன்புறுத்தல்கள், தடுத்து வைத்தல் என்பவவும் இடம்பெற்றுள்ளதாகவும் அனைத்துலக மன்னிபுச் சபை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|