|
இன்று காலை அம்பாறை மாவட்டத்தில் தமிழ்- முஸ்லிம் உறவை சீர்குலைத்து இரு இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்த அரசாங்கம் செய்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது-
மருதமுனை பிரதேசத்திலுள்ள கிராமசேவகரான தௌபீக் எனபவருக்கு இரு மனைவியர். ஒருவர் மருதமுனையைச் சேர்ந்தவர், மற்றவர் சாய்ந்தமருதுவைச் சேர்ந்தவர். மருதமுனையைச் சேர்ந்த இவருடைய முதல் மனைவிக்கும் இவருக்கும் கடந்த சில நாட்களாக தகராறு இடம்பெற்று வந்தது.
சிறிது புத்திசுவாதீனமற்றவரான முதல் மனைவியுடன் இடம்பெற்ற தகராற்றையடுத்து அவருடன் கோபித்துக் கொண்ட தௌபீக் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு தனது இரண்டாவது மனைவியின் ஊரான சாய்ந்தமருதுவுக்கு சென்றுவிட்டார்.
கடந்த இரண்டு நாட்களாக தௌபீக்கை காணாத முதல் மனைவியும் அவரது உறவினர்களும் அவரைத் தேடியலைந்திருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட அதாவுல்லாவும் அவரது ஆதரவாளர்களும். தௌபீக்கை தமிழர்கள் கடத்திவிட்டார்கள் என்ற வாந்தியைப் பரப்பி மருதமுனை மற்றும் கல்முனைப்பிரதேசங்களில் குழப்பங்களை உண்டு பண்ணுமுகமாக கடைகளை பூட்டச் செய்ததுடன் போக்குவரத்துக்களையும் தடைசெய்து கல்முனையிலுள்ள தமிழர்கள் மீது தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கான முயற்சியில் இன்று காலை இறங்கியுள்ளனர்.
விடையம் பாரதூரமாகிவருவதை அறிந்த மருதமுனை மற்றும் கல்முனை பள்ளிவாயல்களைச் சேர்ந்த மௌலவிகளும், கல்முனை பிரதேசசெயலாளரான அன்சாரும் சாய்ந்த மருதுவுக்குச் சென்று தௌபீக்கை உடன் அழைத்து வந்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்களும், அதாவுல்லாவில் ஆதரவாளர்களும் தமது தாக்குதல் முற்னேற்பாடுகளைக் கைவிட்டு திரும்பியுள்ளனர்.
இது இவ்வாறிருக்க இன்று மருதமுனையில் தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் கடத்தப்பட்டதாக அரசாங்கம் தனது ஊடகம் மூலம் பொய்யான வாந்தி ஒன்றைப் பரப்பி இரு சமூகங்களுக்கிடையே குழப்பநிலையை உண்டுபண்ண மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.
எனினும் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் இரு இனங்களுக்குமிடையே கலவரங்களை உண்டுபண்ணியது போல் கல்முனை மற்றும் மருதமுனை பிரதேசங்களிலும் அரசாங்கம் கலவரங்களை உண்டு பண்ண முயற்சியெடுத்து வருவதாக அப்பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பீதியுடன் தெரிவிக்கின்றனர். எந்த நேரத்தில்; என்ன நடக்குமோ என்ற பயப் பீதியுடன் தாம் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மீனகன்
|