|
மணலாறில் இரண்டு நாட்களாக மழையிலும் கடுஞ்சமர் தொடர்கிறது! நான்கு முனைகளில் இரவு பகலாக மோதல் |
|
|
|
Tuesday, 10 June 2008 |
|
மணலாறில் (வெலிஓயாவில்) கடந்த இரண்டு நாட்களாகக் கொட்டும் மழையின் மத்தியிலும், அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில், இரவு பகலாகக் கடுஞ்சமர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இருதரப்புக்களும் உத்வேகத்துடன் மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாக நேற்று நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் கிடைத்த களமுனைத் தகவல்கள் தெரிவித்தன.
நான்கு முனைகளில் பாரிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த அரசுப் படைகள், புலிகளின் முக்கிய படைத் தளமான "வன் போர்' மையத்தை முற்றுகையிட்டுள்ளன எனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.
முன்னேற முயலும் படையினருக்கு எதிராகக் கடும் தாக்குதலை நடத்தி அரசுத் துருப்புகளுக்குத் தாங்கள் பேரிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர் எனப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளின் மீது தாக்குதலை மேற்கொண்டவாறு முன்னேறிய படையினர் விடுதலைப் புலிகளின் முக்கிய தளத்தைச் சூழவுள்ள அவர்களது வலுவான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இதன்போது கடும் எதிர்த் தாக்குதல்களை மேற்கொண்டனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மோதல்களின் போது ஏழு படையினர் உயிரிழந்தனர் எனவும், 19 பேர் காயமடைந்தனர் எனவும் ஓர் இராணுவச் சிப்பாயைக் காணவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மணலாறு பகுதியில் நான்கு முனைகளில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் நகர்விற்கு எதிராகக் கடும் எதிர்த்தாக்குதல்களைத் தாங்கள் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், இதன்போது 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் எனவும் 25 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர் எனவும் மேலும் தெரிவித்தனர்.
கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை, நித்திகைக்குளம் உள்ளிட்ட நான்கு முனைகளிலிருந்தே இராணுவத்தினர் பாரிய முன்நகர்வை மேற்கொண்டுள்ளனர். கடுமையான ஆட்லறி மற்றும் பல்குழற் பீரங்கித் தாக்குதல்களும் இடம்பெறுகின்றன
கடும் மழைக்கு மத்தியிலும் தீவிரப் பதில் தாக்குதல் நடவடிக்கைகளைத் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
மணலாறுப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெரும் எடுப்பிலான முன்னகர்வுத் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தீவிரமாக நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் எதிர்தாக்குதலில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.
படையினரிடம் இருந்து படைக்கலங்கள் மற்றும் வெடிபொருள்கள் விடுலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நெருடல் இணையம்
|