|
சிறீலங்காவில் இடம்பெறும் கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு சிறீலங்கா அரசாங்கமே பொறுப்பு என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடத்தல்கள், காணாமல் போதல்களைக் கண்காணக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு, இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பெண்கள், மனிதநேய பணியாளர்கள் உட்பட, 22 கடத்திச் செல்லப்பட்டிருப்பதாகவும், மே மாதத்தில் மட்டும் 18 பேர் கடத்திச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடத்திச் செல்லப்பட்டவர்களின் பெண்களும், மனிதநேய பணியாளர்களும் உள்ளடங்குவது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை அதிக கவனம் செலுத்துவதாகவும், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பல கடத்தல்கள் இடம்பெறுகின்ற போதிலும், பழிவாங்கப்படுவார்கள் என்ற அச்சம் காரணமாக, அவை அனைத்தும் உரியவர்களால் முறைப்பாடு செய்யப்படுவதில்லை எனவும், ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டுகின்றது. கடத்தல்களை தடுப்பதற்கு அரசினால் சிறயளவு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது போதுமானது அல்ல எனவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இந்த அறிக்கை கூறுகின்றது. இவை தொடர்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களை விசாரணை செய்வதற்கும், உண்மையை கண்டறிவதற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் கடத்தல்கள், காணாமல் போதல்களைக் கண்காணிக்கும் செயற்குழு சிறீலங்கா செல்ல அரசு அனுமதியளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
நெருடல் இணையம்
|