|
இலங்கை அரசு மீது ஐ நா அமைப்பு கடும் விமர்சனம் |
|
|
|
Friday, 13 June 2008 |
|
மக்கள் காணமல் போகும் சம்பவம் தொடர்பாக போதுமான நடவடிக்கை எடுக்காமல் உள்ளதற்காக ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த மனித உரிமை நிபுணர் குழு ஒன்று இலங்கை அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த பிரச்சனைக்கு முகம் கொடுக்க தயார் என்று இலங்கை அரசு கூறினாலும், இதில் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மனித நேயப் பணியாளர்கள், பெண்கள் உள்ளிட்டோர் காணமல் போனவர்களில் அடங்குவார்கள் என்றும் அந்தக் குழு கூறியுள்ளது.
இலங்கையின் ஒட்டுமொத்த மனித உரிமை நிலை குறித்து மறு ஆய்வு செய்வதற்காக தற்போது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் குழு கூடியுள்ளது. இக் கூட்டத்துக்கு முன்பாக இந்த அறிக்கை வந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையில் காணமல் போன 22 பேர்கள் குறித்து விபரங்களைக் கேட்டு தாம் இலங்கை அரசிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளதாக காணமல் போனவர்கள் குறித்த ஐ நாவின் செயற்குழு கூறியுள்ளது.
இந்த கோரிக்கை குறித்து தமக்கு மிகக் குறைந்த விபரங்களே கிடைத்துள்ளதாகவும், காணமல் போனோரின் நிலை குறித்து அறிவதற்காக நிபுணர்களுக்கு ஐ நா அங்கீகாரம் வழங்கியிருந்தாலும், அவர்கள் இலங்கைக்குச் செல்வதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை என்றும் இக்குழு கூறியுள்ளது.
இலங்கையின் உள்நாட்டுப் போரில் இடம்பெறும் மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச அளவில் அமைதியின்மை அதிகரித்துள்ள நிலையில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. மனித உரிமை குறித்த எழுந்துள்ள கவலைகள் காரணமாக - மனித உரிமை கவுன்சிலுக்கான தேர்தலில் இலங்கை தோற்றது.
இலங்கையின் மனித உரிமை சூழல் குறித்து ஐ நா வின் குழு மீள் ஆய்வு செய்யவுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் இலங்கைக்கு எதிராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெருடல் இணையம்
|