|
புலிகளின் குரலின் செய்மதி ஒலிப்பினை நிறுத்த சிறிலங்கா அரசு முயற்சி |
|
|
|
Sunday, 15 June 2008 |
|
சேர்பிய நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் அனைத்துலக நாடுகளுக்கும் ஒலிபரப்புச் செய்யப்படும் புலிகளின் குரலின் ஒலிபரப்புச் சேவையினை நிறுத்தும் முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி:
ஜூன் மாதம் 1 ஆம் நாள் புலிகளின் குரலின் வானொலி சேவை தனது ஒலிபரப்புச் சேவையை சேர்பிய நாட்டில் இருந்து ஆரம்பித்துள்ளது. இதற்குரிய அனுமதியை சேர்பிய அரசாங்கம் வழங்கியிருந்தது.
இந்த ஒலிபரப்புச் சேவை ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேர்பியாவின் செய்மதி ஊடாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் புலிகளின் குரல் வானொலிச் சேவையானது விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலிச் சேவை என்று சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து சேர்பிய அரசாங்கம் அதன் ஒலிபரப்பினை நிறுத்தியுள்ளது.
முன்னர் புலிகளின் குரல் வானொலி சேவை மற்றும் தமிழீழத் தேசிய தொலைக்காட்சி சேவை என்பன அமெரிக்காவைத் தளமாக கொண்ட இன்ரெல்சற்-12 என்னும் செய்மதி நிறுவனம் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருந்தன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|