|
சிறிலங்காப் படையினரிடம் உள்ள ஆயுதங்கள் குறித்த விபரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இலகுவில் கிடைப்பதாக அந்நாட்டு அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்காவில் நிலவும் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்க படையினர் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
படையினருக்கு தேவையான ஆயுதங்களை முன்னர் தனியார்துறை தரகர்களே ஆயுத வியாபாரிகளிடம் கொள்வனவு செய்து வழங்கினர். ஆனால் இன்று சிறிலங்கா அரசாங்கமே ஆயுதங்களை நேரடியாக ஆயுத வியாபாரிகளிடம் கொள்வனவு செய்கின்றது.
இதனால் தனியார்துறை ஆயுதத் தரகர்கள் அரசின் மீது விசனமுற்றுள்ளனர். அத்துடன் படையினரிடம் உள்ள ஆயுத விபரங்கள் குறித்த தகவல்களை இந்த ஆயுதத்தரகர்கள் ஊடகங்களுக்கு வழங்குகின்றனர்.
ஆயுத வியாபாரத்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதாலேயே அவர்கள் இப்படிச் செயற்படுகின்றனர்.
ஊடகங்கள் இந்த தகவல்களை பத்திரிகைகளில் கட்டுரைகளாக வெளியிடும் போது படையினரிடம் உள்ள ஆயுதங்கள் குறித்த தகவல்கள் புலிகளுக்கு இலகுவாகச் சென்று விடும்.
இதனால் இது குறித்து ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றோம்.
அடுத்த சில நாட்களில் ஊடகங்களின் இந்தப் பிரச்சினைக்குரிய செயற்பாடுகளுக்கு தீர்வு காணப்படும் என நம்புகின்றோம்.
இலங்கையில் ஊடகச் சுதந்திரம் இல்லை என்று கூறுவதனை விட பிரித்தானியாவிலும், அமெரிக்காவிலும் ஊடகச் சுதந்திரம் இல்லை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். அங்கு எதற்கு எடுத்தாலும் சட்டத்திற்குப் பதிலளிக்க வேண்டும்.
அங்குள்ள ஒருவர் 100 டொலர் பணத்தை வேறொரு நாட்டவருக்கு அனுப்ப வேண்டுமானால் அதற்கு காரணம் கூற வேண்டும். சிறிலங்காவில் அப்படி இல்லை. அதேபோன்று ஊடகங்கள் மீதும் அங்கு அடக்குமுறைகள் உள்ளன என்றார் அவர்.
நெருடல் இணையம்
|