பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத்தடை ஓர் ஐரோப்பிய பார்வை.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத்தடை ஓர் ஐரோப்பிய பார்வை. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 15 October 2005

புலிகள் மீதான ஐரோப்பிய பயணத்தடை குறித்து இதுவரை வரவேண்டிய எல்லாப் பக்கங்களின் ஆய்வுக் கண்ணோட்டங்களும் வெளியாகிவிட்டன. பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், அரசியலாளர் என்று பல தரப்பினரும் தமது பக்க கருத்துக்களை வைத்துள்ளனர். இந்தத் தடை குறித்து சிங்களத் தரப்பு மகிழ்வும், தமிழ் தரப்பு கவலையும் வெளியிட்டுள்ளன. வெளிவந்த அனைத்துவிதமான கருத்துக்களையும் அவ்வவ் கருத்துக்களாகவே வைத்துக் கொண்டு இக்கட்டுரை மற்றைய பக்கங்களிலும் ஒளி வீசிப் பார்க்கிறது.

ஐரோப்பிய மக்களிடையே பயணத்தடை குறித்த எண்ணம் எவ்வளவு தாக்கமுடையதாக இருந்தது என்பதை முதலில் நாம் அவதானிக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத்தடை வெளியானபோது அதை ஐரோப்பாவில் உள்ள ஊடகங்கள் பாரிய விடயமாக முதலாவது பக்கத்தில் செய்தி வெளியிடவில்லை. அல்லது பத்திரிகைகளில் எங்காவது சிறிய அளவிலாவது வெளியிட்டிருக்கிறார்களா என்று நாம் தேடிப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். பீ.பீ.சி ஒன்றைத்தவிர மற்றெந்த நாட்டு உள்ளுர் ஊடகங்களும் இந்த விவகாரத்தை வரவேற்று செய்திகள் எதையுமே வெளியிடவில்லை. எல்லோருக்குமே தெரியும் இது ஐரோப்பா யாரையோ திருப்திப்படுத்த செய்யும் வேலை என்ற உண்மை. அதனால்தான் அனைவருமே இதைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள் என்பது ஒரு முக்கிய உண்மையாகும்.

 இனி இந்தத் தகவலை எப்படி வெளியிட்டார்கள் என்பதை அடுத்ததாக நோக்க வேண்டும். கொழும்பில் உள்ள இங்கிலாந்து துர்தரகத்தில் வைத்து கொழும்பில்தான் இது வெளியிடப்பட்டது. புறுக்சல்சில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இதை வெளியிட வேண்டிய தேவை இல்லாமல் போனது ஏன் ? இதை கொழும்பில் இருப்பவர்களுக்குக் காட்ட வேண்டிய தேவை இருந்ததால்தான் கொழும்பில் வைத்து வெளியிட்டார்கள். கொழும்பு பேரினவாத அரசியல் தலைமைகள் சிங்கள மக்களிடையே அரசியல் செய்ய வேண்டுமானால் இப்படி ஏதாவது ஊக்க மாத்திரைகள் இருந்தால்தான் மக்களிடையே இறங்கி அரசியல் கடை நடாத்த முடியும். ஒன்று பிரச்சனையைத் தீர்க்கப் போகிறோம் என்று மக்களுக்குக் குழை அடித்து தேர்தலை நடாத்த வேண்டும், அல்லது புலிகளை வென்றதாகக் காட்டி அரசியல் செய்ய வேண்டும். பேசித் தீர்ப்பதாக இனி புருடா விட இயலாது, போரிடவும் வழியில்லை எனவேதான் ஏதோ ஒரு தடை என்ற சான்றிதழைப் பெற்றிருக்கிறது அரசு.


 ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தடையால் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எதையும் தடை செய்யவில்லை. அப்படி தடைசெய்வதற்கான அவசியம் உண்டாவென ஆராய்கிறது என்பது தகவல். பயணத்தடை என்று பத்திரிகையில் பறை தட்டலாம், அதே செய்தியை புலிகளுக்கு தடை இல்லை என்று கொட்டை எழுத்தில் போட்டு, அடியில் பயணத்திற்கு மட்டும் தடை என்று சிறியதாகப் போடலாம். அனைத்தும் அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்ததே. கூர்ந்து பார்த்தால் இந்தப் பயணத்தடையானது விடுதலைப் புலிகளுக்கு செயற்படுவதற்கான உறுதியை எழுத்து மூலமாக வழங்கியிருக்கிறது என்பதை இந்தத் தடை அறிக்கையை பின்புறமாக வாசித்து புரிந்து கொள்ளலாம்.

இரு தரப்பும் சம அந்தஸ்த்துடன் பேசும்போது எப்படி ஒரு தரப்பிற்கு மட்டும் தடையொன்றை விதிக்கலாம்? ஆகவே இது ஒரு தரப்பிற்கு பாதகமான முடிவு என்று வாதிடுவது நியாயமானது. எதிர் காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தவறான தளத்தில் போகக் கூடாது என்பதற்காக இப்பொழுதே இதைச் சுட்டிக்காட்டுவது சரியானது. அதைத்தான் தமிழர் தரப்பில் இருந்து பலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆனால் இதற்கும் ஒரு மறுபக்கம் இருக்கிறது. ஐரோப்பாவில் புலிகளுக்கு வெளிப்படையான பயணத் தடையை விதித்த ஐரோப்பிய ஒன்றியம் இனப்பிரச்சனைத் தீர்வில் சரியான அடியெடுத்து வைக்க வேண்டும் என்ற எழுதப்படாத நெருக்குவாரத்தை சிறீலங்கா அரசின் மீது வைத்திருக்கிறது. உனது கடமையை ஒழுங்குபட செய்யாமல் அடுத்த கட்ட தடை வேண்டுமென நீ இங்கே வரக்கூடாது என்ற செய்தியை சிறீலங்கா அரசுக்கு இந்தத் தடைச் செய்தி தெளிவாகச் சொல்லியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புலிகள் மீது வெறுப்பிருந்தால் புலிகளுடைய பயணத்திற்கு தடை விதித்தது போல தமிழீழத்திற்கான தனது பயணத்தையும் நிறுத்துவதாக அது அறிவித்திருக்கும்.

 கதிர்காமர் படுகொலையை ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்திருக்கிறது என்பது அடுத்த முக்கிய விடயம். கண்டித்த அதேவேளை கதிர்காமர் கொலை விசாரணையில் உள்ளது, சிங்கள அரசியல்வாதிகள் நீதிபதியின் கடமையை கையில் எடுத்துத் தீர்ப்புக் கூற முடியாது என்பதையும் ஐரோப்பிய வட்டகை சுட்டிக் காட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய அறிக்கைக்கு பிழையான விளக்கத்தை சிங்கள பேரினவாதிகள் வெளியிட்டு, நோர்வேயைப் புறந்தள்ளிப் பேசியபோது அதை மறுத்து, நோர்வே முன்னெடுக்கும் பேச்சுக்களுக்கு தாம் என்றும் ஆதரவாக இருப்பதாக உறுதிபட தெரிவித்துள்ளது.

 மேலும் அந்தத் தடை அறிக்கையில் ஒரு நுட்பமான இடைவெளியையும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. பயணத்தடை இருந்தாலும் ஓர் ஐரோப்பிய ஒன்றிய நாடு புலிகளை பேச்சுக்களுக்கு வரும்படி அழைத்தால் அதையும் இந்த அறிக்கை தடுக்குமென ஐரோப்பிய ஒன்றியம் கூறவில்லை. இப்படியொரு நுட்பமான விளக்கம் இருப்பதை சுட்டிக் காட்டுவதற்காகவே புலிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனித்தனியாக முடிவுகளை எடுக்கலாம் என்று தடைக்கு முன்னதாகவே அறிக்கையொன்றையும் வெளியிட்டு வைத்துள்ளது.

இவ்வாறு விடுதலைப் புலிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அனைத்து அறிக்கைகளையும் ஒரே வரிசையில் வைத்துப் பார்த்தால் உண்மையை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தினார்களோ அதைவிட பெரிய ஏமாற்றத்தையும் பாதிப்பையும் சிறீலங்கா அரசுக்கும் செய்துள்ளார்கள் என்பதுதான் இதிலுள்ள இராஜதந்திரம்.

 சர்வதேச பயங்கரவாதத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் முடிச்சுப் போடும் அவலமான ஜே.வி.பியின் கொள்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஒரு போதும் கையில் எடுக்க நியாயமில்லை. தமிழ் மக்கள் இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணி வேரான உழைக்கும் வர்க்கமாக உள்ளார்கள். ஓர் இஸ்லாமிய புனிதப்போர் போல ஒரு புனிதப் போரை உலகத்தின் மீது நடாத்த வேண்டிய தேவை தமிழருக்கு இல்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும்.. சுனாமி நிவாரணத்தையே சரியாகப் பயன்படுத்தத் தெரியாத நாடு என்று சிறீலங்கா பற்றி ஏராளம் அறிக்கைகள் வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம் இனப்பிரச்சனையை அது எவ்வளவு தவறாகக் கையாண்டிருக்கும் என்பதை இலகுவாகப் புரிந்து வைத்திருக்கிறது.

 இவ்வளவு பின்னணிகளையும் வைத்துக் கொண்டு தமிழீழத்தை ஒரு தடவை நோக்க வேண்டும். தமிழீழத் தேசியத் தலைவர் நாடு நாடாக பயணங்களை மேற்கொண்டு, காரியமாற்ற வேண்டிய நிலையில் உள்ள தலைவரல்ல. அவர் பயணங்களை மேற்கொள்ளாமலே காரியமாற்றக் கூடிய தலைவர் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் நன்கு அறியும்.

 இந்த நிலையில், சென்ற வாரம் டென்மார்க்கில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வை இங்கு சுட்டிக் காட்டலாம். உலகத்தின் சிறந்த தலைமை என்றால் என்ன என்ற விவகாரம் பற்றி ஒரு ரெலி கொன்பிரன்ஸ் நடைபெற்றது. பில் கிளின்டன், மர்லின் ஓ பிறைட் அம்மையார் உட்பட அமெரிக்காவின் பிரபல தலைவர்கள் தொழில் நுட்ப வல்லுநர்கள்களை, ஜப்பானிய நிபுணர்களை எல்லாம் ஒன்றாக இணைத்து இந்த மாநாட்டை நிகழ்த்தினார்கள். எல்லோரும் தத்தம் நாடுகளில் இருந்தே பேசினார்கள். இனி உலகத்தின் முக்கியமான விடயங்களை பேச பயணங்கள் அவசியமில்லை என்பதை அந்த ரெலிகொன்பிரன்ஸ் தெளிவாக விளக்கியது. மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்கள் இரண்டாவது உலக யுத்தகால தடைகள் என்ற விவகாரத்தை செல்லுபடியற்ற ஒன்றாக மாற்றியிருக்கிறது. இதுவரை உலக சமுதாயத்தால் விதிக்கப்பட்ட எந்தவொரு தடையும் பூரண வெற்றிபெறவில்லை என்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரியும். ஐரோப்பிய ஒன்றியத்தில் எத்தனையோ கதவுகள் திறந்துதான் கிடக்கின்றன. ஏதோ ஓர் ஒப்பனைக்காக ஒரு கதவை பூட்டி சிறீலங்கா அரசை திருப்திப்படுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம் அவ்வளவுதான்.

 சர்வதேச சமுதாயமும், ஐரோப்பிய ஒன்றியமும் தமிழ் மக்கள் பக்கமே இருக்கின்றன. இந்த விவகாரத்தை உணர்ச்சிகரமான புள்ளிக்கு நகர்த்த யாதொரு முகாந்திரமும் இல்லை. இந்தத் தடையால் நிலை தடுமாறி ஈழத்தமிழினம் ஐரோப்பிய ஒன்றியத்தை பகைவனாக் கருதும் என்று சிங்கள அரசு கனவு காண்கிறது, அது பலிக்கும் என்று கூறமுடியாது.தன்னுடைய உலங்குவானூர்திகளை விடுதலைப் புலிகளின் பயணத்திற்கு ஏற்பாடு செய்துவரும் சிறீலங்கா அரசு அதே புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பயணத்தடை விதித்துவிட்டதாக பறை தட்டுகிறதென்றால், அதைவிடப் பெரிய முரண்பாடு வேறென்ன இருக்கப் போகிறது.

 விடுதலைப் புலிகள் சிறீலங்கா உலங்குவானூர்தியில் பயணிப்பதை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் பேரினவாதிகள் ஐரோப்பாவில் பயணத்தடை என்று மகிழ்கிறார்கள்.ஆபத்தில்லாமல் ஆபத்தைக் கடக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்தால் தமிழினம் இத்தடையால் இன்னுமொரு படி உயர்வடைய முடியும். இப்போது ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

15 ம் நுர்ற்றாண்டில் துருக்கியர் கொன்ஸ்தாந்தி நேப்பிள் வழியாக பயணத்டையை விதித்ததால் கப்பல்களில் பயணம் ஆரம்பமானது. பயணத்திற்கு தடையாக தென்னமரிக்கா இருந்தபோது பனாமா கால்வாய் பிறந்தது. உலகத்தில் நடைபெற்ற ஒவ்வொரு பயணத்தடையும் இன்னொரு புதுமையைக் கண்டதுதான் வரலாறு. இந்தப் பயணத்தடையும் இன்னொரு புது வழியை உருவாக்கும் என்பதே உண்மையாகும்.


கி.செ.துரை
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..