பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow வலுவடையும் 'துணைப் படை' சொல்லும் அரசியல் செய்தி என்ன? : 'விடுதலைப் புலிகள்' ஏடு விளக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

வலுவடையும் 'துணைப் படை' சொல்லும் அரசியல் செய்தி என்ன? : 'விடுதலைப் புலிகள்' ஏடு விளக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 15 October 2005

தமிழர் தாயகத்தின் ஒட்டுமொத்த பகுதியிலும் வலுவடைந்து வரும் துணைப் படை சொல்லும் அரசியல் செய்தி என்ன என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான 'விடுதலைப் புலிகள்' ஏடு விளக்கியுள்ளது.விடுதலைப் புலிகள் ஏட்டின் புரட்டாதி-ஐப்பாசி மாதத்தின் 126 ஆவது குரல் இன்று சனிக்கிழமை வெளியானது.

அதில் 'அமைதி வழியிலான அரசியலில் விரக்தியடையும் தமிழ் மக்கள்' என்ற முகப்புப் பக்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:மூன்றரை வருடத்திற்கு முன்னர் போர்நிறுத்த உடன்பாடு காணப்பட்டபோது போருக்கு முடிவு நெருங்கிவிட்டது! சமாதானம் தளைத்தோங்கப்போகின்றது! என்று தமிழ் மக்கள் குதூகலித்தனர். சர்வதேசத்தின் நேரடிக் கண்காணிப்பில் மூன்றாந்தரப்பு நாடொன்றின் மத்தியத்துவப் பணியின் கீழ் நடைபெறுகின்ற சமாதான முயற்சிகள் வெற்றிகரமாக முன்னேற்றம் காணும் என்று தமிழ் மக்கள் நம்பியிருந்தனர்.

ஆனால், சர்வதேச சமூகத்தையும் மதிக்காத சிங்கள அரசின் கடும்போக்கால் சமாதான முயற்சிகள் பாரியநெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.

இதே சமயம், 'தமிழருக்கு உரிமை வழங்கக்கூடாது' என்ற அரசியல் கோசத்தை முன்வைத்து சிங்களத்தின் ஆளும் கட்சி ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு தற்போதய சமாதான முயற்சிகள் அவநம்பிக்கை தரும் வகையில் உள்ளன.

சர்வதேச மத்தியத்துவம் இலங்கைத் தீவின் சமாதான முயற்சிக்கு வலுச்சேர்க்கும் என்ற சமாதான விரும்பிகளின் எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகிவிட மறுபுறத்தில் போர்வெறியர்களும், பேரினவாதிகளும் ஒன்றிணைந்து பலம்பெறுகின்ற அரசியற் சூழலே சிங்களத்தில் இன்று காணப்படுகின்றது.

இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக நிகழ்ந்த போர்நிறுத்த உடன்பாட்டை சிங்கள அரசு ஒரு சமாதானத்தின் திறவுகோலாக இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்தும் அதை முடக்கியே வைத்திருக்கின்றது.

போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்டு புலிகளுடன் போரைத் தொடங்கும் எண்ணத்துடனேயே "வெளிநாட்டில் பேச்சுக்கள் இல்லை" என்ற அரசியல் நிலைப்பாட்டிற்கு சிங்கள அரசு வந்தது.

இவ்வாறு சர்வதேச சமூகத்தை ஏமாற்றி, திசை திருப்புவதற்காக சிங்கள அரசுகள் காலங்காலமாக சில காரணிகளை முன்வைத்து அமைதிவழி முயற்சிகளை முறியடித்து வருகின்றன.

சிங்கள அரசின் தொடர்ச்சியான இனவாத நிலைப்பாடும், ஏமாற்று அரசியலும் தமிழ் மக்களுக்கு சலிப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தி வருகின்றன. சிங்கள அரசு எவ்வகையான அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வந்தாலும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அவர்கள் பலவழிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பொங்குதமிழ் நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுதிரண்டு தமது அரசியல் அபிலாசைகளை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியிருந்தனர். இதேபோன்று தமிழர் தாயகம் எங்கும் எழுச்சிப் பிரகடணங்களையும், மாநாடுகளையும் - அரசியல் பேரணிகளையும் நடாத்தி சிங்கள அரசுக்கும் - உலக சமூகத்திற்கும் தமது மன உணர்வுகளை எடுத்துக்காட்டி வருகின்றனர்.

இரண்டு தசாப்தகால போரால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள்தான். இந்த வகையில் தமிழ் மக்கள் போரை விரும்பவில்லை. சமாதான வழிமூலம் இனப்பிரச்சனைக்கு அரசியல்தீர்வு காண்பதையே அவர்கள் விரும்புகின்றனர்.

ஆனால், தமிழரின் அமைதி வழி ஆர்வத்தை சிங்கள அரசு தவறாகக் கணித்து மீண்டும் போரைத் தொடங்க விரும்பினால் அதற்கு முகங்கொடுக்கவும் மக்கள் தயாராகி வருகின்றனர்.

ஆயுதப் பயிற்சிகள் பெற்று புலிகள் இயக்கத்தின் துணைப்படைக் கட்டமைப்பில் தமிழ் மக்கள் பெருமளவில் இணைந்து வருகின்றனர். ஆக்கிரமிப்புப் பகுதிகள் - விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் தமிழர் தாயக நிலப்பகுதிகள் எங்குமே இந்த துணைப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் இராணுவப் பயிற்சிகள் பெறுகின்றனர். தேவை ஏற்பட்டால் சிங்களப் படைகளுடன் போரிடவும் தயார் என்ற அரசியல் செய்தியை சிங்கள அரசிற்கும் தமிழ் மக்கள் தெரிவிக்க விரும்புகின்றனர். சிங்கள அரசு தொடர்பாகவும், சமாதான அரசியலை அது நடாத்த முனையும் வழிமுறை தொடர்பாகவும் தமிழ் மக்கள் எதிர்மறையான கருத்தையே வைத்துள்ளனர். இதை சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

தொடர்ந்தும் சமாதானத்தை ஒரு தந்திரோபாய அரசியலாக சிங்களம் பயன்படுத்தி தமிழரின் விடுதலை உணர்வை நசுக்கிவிடலாமென்று அது கனவு காணமுடியாது. அத்துடன் அது தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும் முடியாது என கூறப்பட்டுள்ளது.


thayagam
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..