|
சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரிக்கை |
|
|
|
Saturday, 12 July 2008 |
|
சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரித்துள்ளது. மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் ‘கெயன்’ நிறுவனமும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் செய்துகொண்ட உடன்படிக்கையை அடுத்தே சீனா இது தொடர்பில் இறுதி முடிவு எட்டும் வகையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ஈநியூஸி்ல் தெரிவித்துள்ளது.
சிறீலங்காவில் எண்ணெய் வள ஆய்வுப் பணிகளை சீனாவிடம் கையளிப்பதற்கே முன்னர் இலங்கை இணங்கியிருந்த நிலையில், இந்திய நிறுவனத்திடம் இந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதை அடுத்தே சீனா இந்த முடிவைத் தெரிவித்துள்ளது.
2007ஆம் ஆண்டு பீஜிங்கால் இலங்கைக்கு வழங்கப்பட்ட போர் உதவிகள் 37.6 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்தன. இதன்மூலம் இலங்கைக்கு அதிகளவான உதவிகளை வழங்கும் நாடான ஜப்பானைவிட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கூடுதலான உதவிகளை சீனா வழங்கியிருந்தது.
இதற்கும் மேலதிகமாக நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் உள்ளிட்ட பாரிய திட்டங்களையும் சீனா இலங்கையில் முன்னெடுத்துவருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு மன்னார் எண்ணெய் வள ஆய்வுகளை சீனாவுக்கு வழங்க இலங்கை தீர்மானித்திருந்தது.
இதனையடுத்து இந்தியா இதனைத் தடுத்து நிறுவத்துவற்காக அண்மையில் இந்திய அதியுயர் அதிகாரிகள் சிறீலங்காவுக்கு பயணம் செய்திந்ததை அடுத்தே எண்ணெய் வள ஆய்வு தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|