|
முகத்துவாரத்தில் விசாரணைக்கென சிறி லங்கா காவற்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்கள் தனித்தனியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டமை பாரதூரமான விடயம் என்று தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இது குறித்து சட்டமா அதிபர் இன்று செவ்வாய்க்கிழமை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் குழுவே இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் தமிழ் மக்கள் காரணமின்றி கைது செய்யப்படுகின்றமைக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமைமீறல் மனுமீதான விசாரணை நேற்று பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, நீதியரசர்களான நிமல் காமினி அமரதுங்க, கே.சிறிபவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போது மனுதாரரின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.கே.சுமந்திரன், முகத்துவாரம் பகுதியில் கடந்த 2ஆம் திகதி அதிகாலை தேடுதல் நடத்திய பொலிஸார் தமிழ் மக்களை விசாரணைக்கென அழைத்து வந்து மைதானத்தில் வைத்து தனித்தனியாக ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
சிறிலங்கா காவற்துறையினரின் இத்தகைய செயற்பாடு அரசியல் யாப்பில் தனிமனிதனுக்குள்ள அடிப்படை உரிமையினை மீறும் செயலாகும் என்று சுட்டிக்காட்டினார். முகத்துவாரம் காவற்துறையினர் முன்னரும் தமிழ் மக்களை கைது செய்யும்போது அவர்களின் வங்கிக்கணக்கு விரபங்களைக்கோரியிருந்தனர்.
இது குறித்தும் மன்றில் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். தற்போது தமிழ் மக்களை உடுத்த உடையுடன் அழைத்து வந்து தனித்தனியாக ஒளிப்பதிவினை காவற்துறையினர்; மேற்கொண்டுள்ளனர். இத்தகைய செயற்பாடு தொடரும் நிலையே காணப்படுகிறது. என்றும் சட்டத்தரணி சுமந்திரன் மன்றில் எடுத்துக் கூறியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவும், நீதியரசர் நிமல் காமினி அமரதுங்கவும், தமிழ் மக்களை விசாரணைக்கென அழைத்துச்சென்று ஒளிப்பதிவு செய்தமை பாரதூரமான விடயமாகும் என்று சுட்டிகாட்டினர்.
அத்துடன் தமிழ் மக்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டமை குறித்து பொலிஸாரின் நிலைப்பாட்டினை அறிந்து நாளை விளக்கமளிக்க வேண்டும் என்று சட்ட மா அதிபருக்கு நீதியரசர்கள் உத்தரவிட்டனர். சட்ட மா அதிபரின் விளக்கத்தையடுத்து இவ்விடயம் குறித்து பிரதம நீதியரசர் தலைமையிலான குழுவினர் இன்று தீர்ப்பளிக்கவுள்ளனர்.
கடந்த வருடம் இறுதிப்பகுதியில் கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் தமிழ் மக்கள் வகைதொகையின்றி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இ.தொ.கா. இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது காவற்துறையினரும் படையினரும் இரவு நேரங்களில் வீடுகளில் தேடுதல் நடத்தக்கூடாது எனவும் பொலிஸார் தமது பகுதிக்கு வெளியில் எவரையும் கைது செய்வதாயின் அந்தப் பகுதி காவற்துறைக்கு அறிவித்துவிட்டே செல்ல வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இ.தொ.கா.வின் அடிப்படை மனித உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.கே. சுமந்திரன் ஆஜராகியிருந்த போதிலும் அரசாங்க தரப்பில் வழமையாக ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆஜராகியிருக்கவில்லை. இதனையடுத்தே தமிழ் மக்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் சட்ட மா அதிபரை விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மனுமீதான விசாரணையினை பார்வையிடுவதற்காக இ.தொ.கா.வின் தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜன், உபதலைவர்களில் ஒருவரான மணிமுத்து ஆகியோர் மன்றுக்கு வந்திருந்தனர்.
நெருடல் இணையம்
|