இன்று தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும் இராமேஸ்வரம் மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க மத்திய அரசின் வாயிலாகப் பாதுகாப்பு வழங்க ஆவன செய்வதாக முதலமைச்சர் வழங்கிய உறுதிமொழியினை அடுத்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.
|
இது தொடர்பாக இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு நாட்டுப்படகு மீனவர்கள் முதலமைச்சர் கருணாநிதியிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று முதலமைச்சர் எங்கள் மீனவ பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியதில் மீனவர்களுக்கு மீன்பிடிக்க மத்திய அரசின் வாயிலாக பாதுகாப்பு வழங்க ஆவன செய்வதாக அறிவித்தார்
இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர் குடும்பங்களுக்கும் ஆதரவற்ற குடும்பங்களுக்கும் நிவாரண நிதியாக முதல்வர் நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்குவதாகவும் சுடப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு இதுவரை 1 லட்சம் வழங்கப்பட்டதை 3 லட்சமாக உயர்த்துவதாகவும் இன்று எங்களைச் சந்தித்தபோது முதல்வர் அறிவித்துள்ளார்.
படுகாயமடைந்த மீனவர்களுக்குத் தலா ரூ.50 ஆயிரமும் சிறுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். துப்பாக்கிக் காயத்தில் தீவிர சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைச் செலவை அரசே ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்து இருக்கிறார். இதற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக அமைச்சர், கடலோரப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று மத்திய அரசிடம் நமது மீனவர் பிரச்சினைக்குத் தீர்வுக்காணப் பேசுவதாகவும் முதல்வர் அறிவித்தார்.
இத்தனையையும் எங்களுக்கு அறிவித்த முதல்வருக்கு எங்கள் அமைப்புகளின் சார்பாக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களது போராட்டங்களைத் திரும்பப்பெற்று வரும் சனிக்கிழமை (19-ந்தேதி) முதல் மீன்பிடிக்கச் செல்வது என்று முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|