பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow 15 அவது சார்க் மாநாடு இன்று ஆரம்பமாகிறது
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

15 அவது சார்க் மாநாடு இன்று ஆரம்பமாகிறது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 26 July 2008

பதினைந்தாவது சார்க் உச்சிமாநாடு பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல்களுடன் இன்று காலை ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நடைபெற உள்ள உச்சி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கிறது.

இன்றும் நாளையும் சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளின் உயர் மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடைபெறும். ஜூலை 29ஆம் 30ஆம் திகதிகளில் வெளியுறவு செயலாளர்களின் மாநாடும், ஜூலை 31ஆம் திகதியும் ஆகஸ்ட் முதலாம் திகதியும் வெளி நாட்டமைச்சர்களின் மாநாடும் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் இரண்டாம் மூன்றாம் திகதிகளில் சார்க் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

எதிர்வரும் இரண்டாம் திகதி சனிக்கிழமை பதின் நான்காவது சார்க் உச்சி மாநாட்டின் போது சார்க் அமைப்பின் தலைவராக செயல்பட்ட இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் அந்த தலைவர் பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பார்.

இரண்டாம் திகதி காலை ஒன்பது மணிக்கு நடைபெற உள்ள பதவி பொறுப்பேற்பை அடுத்து நிகழ்ச்சி நிரல்கள் ஆரம்பமாகும்.

இம்முறை சார்க் மாநாட்டில் வறுமை ஒழிப்பு, அவசர நிலைமையை சமாளிக்க உணவு பொருட்களை சேமித்து வைத்தல், வலய நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பயங்கரவாதத்தை ஒழித்தல் ஆகிய நான்கு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதாக வெளிநாட்டமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இம்மாநட்டின் போது சார்க் வலய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் கூட்டாக நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளனர்.

இந்த மாநாட்டில், இந்தியா, இலங்கை பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.சார்க் மாநாட்டில் பார்வையாளர்களாக சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், மொரிசியஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் கொழும்பில் இன்று ஆரம்பமாக உள்ள பதினைந்தாவது சார்க் உச்சி மாநாட்டை முன்னிட்டு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், நாடாளுமன்றம், கட்டுநாயக்க பகுதி ஆகிய இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதியிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கடமைகளில் பன்னிரெண்டாயிரம் பொலிஸாரும் முப்படையினருமாக 19 ஆயிரம் பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் சகல வாகனங்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் மெதிவக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேலும் தெரிவித்ததாவது:

பொலிஸாருக்கும், முப்படையினருக்கும் புறம்பாக ஊர்காவல் படையினரும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த இடங்களில் இராணுவ, பொலிஸ் அதிரடிப்படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் செல்லும் வகானங்களை சோதனையிடும் நடவடிக்கைகளில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அப்பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு இலக்காக்கப்படும். தேவை ஏற்படும்போது நகரில் திடீர் சோதனைகளும், தேடுதல்களும் நடத்தப்படும். அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள அலுவலகங்களில் கடமையாற்றும் அரச, தனியார் ஊழியர்கள் தாங்கள் கடமையாற்றும் நிறுவனங்களினால் வழங்கப்படும் அடையாள அட்டையைக் காட்டி கடமைக்கு செல்ல முடியும்.

இதற்காக விசேட அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை.கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பம்பலப்பிட்டிவரை செல்ல விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரயில் டிக்கட்டுகளை பயன்படுத்தி இப்பஸ்களில் பயணிக்க முடியும்.

இதேவேளை சார்க் மாநாட்டை முன்னிட்டு நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடாக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..