|
|
|
துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடு இலங்கை ஜனநாயகத்தை மோசமாகப் பாதிக்கும் - பிரித்தானிய மிலோச் பிறவு |
|
|
|
Saturday, 02 August 2008 |
|
இலங்கையில் ஜனநாயக முறைமை காணப்படுகின்ற போதிலும் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் அதனை வலுவிழக்கச் செய்துள்ளதாகப் பிரித்தானிய மிலோச் பிறவுண் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
20 வருடங்களுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டது எனினும் அவற்றின் நியாயத்தன்மை குறித்து சந்தேகம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது இந்த நிலைமைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர் போராளிகளைத் தமது இயக்கத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இணைத்துக் கொள்வது தொடர்பான பிரச்சினை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக வியூகத்திற்குள் பிரவேசித்ததன் பின்னர் அதற்கான அர்ப்பணிப்பை அனைத்துத் தரப்பினரும் வெளிப்படுத்த வேண்டியது இன்றியமையாததென அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் ஊடக அடக்குமுறை பெரும் கவலையளிப்பதாகப் பிறவுண் பிரபு தெரிவித்துள்ளார்.
மேலும் துணை இராணுவக் குழுக்களினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் கடத்தல்கள் காணாமல் போதல்கள் மற்றும் கொலைச் சம்பவங்கள் சிவிலியன்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான ஓர் சூழ்நிலையில் அனைத்துத் தரப்பு மக்களது நம்பிக்கையை ஏற்படுத்துவதென்பது சற்றுச் சவாலாக அமையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய ஓர் பொறிமுறையை அரசாங்கம் ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானதென பிரித்தானிய பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் மிலொச் பிறவுண் சுட்டிக் காட்டியுள்ளார்.
சில தசாப்தங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் இலங்கையின் இன முறுகலுக்குச் சர்வதேச சமூகம் ஓர் நல்ல தீர்வுத் திட்டத்தை முன்வைக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|
|