|
ஈரானின் அணுசக்தி தொழில்நுட்பங்களை இலங்கையுடன் பகிரந்துகொள்ள தயாராகவிருப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் மனோச்சர் மொட்டாக்கி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற 15வது சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டதாக கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானும் இலங்கையும் நீண்டகால நட்பு நாடுகள் எனக்குறிப்பிட்ட அவர், யுரேனிய அபிவிருத்தி உள்ளிட்ட சகல துறைகளிலும் ஈரான் இலங்கைக்கு உதவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு உலகில் வேறெந்த நாடுகளுடனும் உறவுகள் இல்லை என்பதால்தான் இலங்கைக்கு உதவி செய்கிறது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்த அவர், இரு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே உறவுகளைப் பேணிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"இலங்கையின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்காக நாம் ஏற்கனவே 450 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான உதவியை வழங்கியுள்ளோம்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அபிவிருத்தித் திட்டம், உமா ஓயா நீர்ப்பாசனத் திட்டம் என்பனவும் இதில் அடங்கும்" என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் மனோச்சர் மொட்டாக்கி தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரான் சகல சார்க் அங்கத்துவ நாடுகளுடனும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைப் பேண விரும்புவதாகவும், சார்க் பிராந்தியத்தின் உணவு மற்றும் சக்தி வள அபிவிருத்திக்கும் தம்மால் உதவ முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் ஈரானுக்குமடையிலான உறவு வலுவடைவது தொடர்பில், அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன், இஸ்ரேல் இலங்கைக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|