|
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குத் தொடர்ந்தும் வன்னியில் செயற்படவிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் மோதல்களால் வன்னியில் செயற்படும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு இல்லையெனக் கூறி அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்று வன்னியில் செயற்பட்டுவந்த ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்கள் வெளியேறியுள்ளபோதும், அங்கிருந்து தாம் வெளியேறப்போவதில்லையென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான தலைவர் ரூன் வன்டென்ஹோவ் கூறினார்.
“வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு அவர்களுக்கு அருகில் தங்கிருக்கவே நாங்கள் விரும்புகிறோம். இடம்பெயர்ந்தவர்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அல்லது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்க விரும்பினால் அதற்கான உதவிகளை நாங்கள் செய்துகொடுப்போம்” என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணரலாம்- ஐ.நா.
வன்னியிலிருந்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்கள் வெளியேறத் தீர்மானித்தமையானது தம்மை ஏமாற்றும் வகையிலான தீர்மானம் என வன்னியிலிருக்கும் மக்கள் கருதக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றபோதும், தமது பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ளவேண்டிய நிலை தோன்றியிருப்பதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்களின் பேச்சாளர் கோர்டன் வெயிஸ் பி.பி.சி.க்குத் தெரிவித்தார்.
தமது பணியாளர்களின் பாதுகாப்புக்கு இலங்கை அரசாங்கமே உத்தரவாதம் வழங்கியிருப்பதால் தற்பொழுது வெளியேறுமாறு அவர்கள் கூறியிருப்பதால் வெளியேறுவதைத் தவிர வேறுவழி இல்லையெனவும் அவர் கூறினார்.
வன்னியில் ஐந்து ஐக்கிய நாடு அலுவலகங்களில் சுமார் 70முதல் 80 பேர் பணியாற்றி வந்ததாகவும், வன்னியில் இடம்பெயர்ந்த 160,000ற்கும் அதிகமானவர்களுக்கு உணவு, நீர், கூடாரங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தாம் வழங்கிவந்ததாகவும் வெயிஸ் கூறினார்.
நெருடல் இணையம்
|