|
கொழும்பில் பொதுமக்கள் தேவைக்கதிகமான வகையில் வந்து குவிவதால் பெரும் பாதுகாப்பு நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாகவும், இந்த சமயத்தில் பயங்கரவாதிகள் கொழும்பில் உள்நுளைந்து பாரிய தாக்குதல்களை நடத்தலாம் எனவும், இவ்வாறு கொழும்புக்குள் அதிகமானோர் வருவதால் தேவையற்ற பாதுகாப்பு பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கடந்த ஓகஸ்ட் மாதம் எந்த வித தேவைகளும் இன்றி 6950 பேர் கொழும்பு வந்து விடுதிகளிலும் வீடுகளிலும் தங்கியிருந்ததாகவும், குறிப்பாக வடக்கு கிழக்கு பக்கங்களில் இருந்தே பெருமளவு மக்கள் தேவையில்லாமல் கொழும்பு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவையற்ற ரீதியில் கொழும்பில் இருப்பவர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு திரும்பி செல்லவேண்டும் எனவும் அவர் கருத்துவெளியட்டுள்ளார். இன்றைய நிலைமைகளில் இவ்வாறு கொழும்பை நோக்கி பலர் வருவது சாதாரணமான விடயமாக நோக்க முடியாது எனகவும், போர் முனைகளில் படையினரின் கவனத்தை திருப்ப விடுதலைப்புலிகள் இந்த நிலைமைகளை பயன்படுத்தி உள்நுளைந்து தாக்குதல்களை தொடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கண்டிப்பாக விரைவில் கொழும்பு வரும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினர் எடுக்கவுள்ளதாகவும், எந்தவித தேவையும் இன்றி, கொழும்பில் தங்கியிருக்கும் நபர்களும், காரணங்களை கூறமுடியாதவர்களும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி தேவையற்ற பிரச்சினைகைளை தவிர்த்துக்கொள்ளுமாறு மறைமுக எச்சரிக்கை ஒன்றையும் கோத்தபாய விடுத்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளரின் இந்த கருத்துக்கள் அவர் கொழும்பில் தமிழ் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளார் என்பதை கோடிட்டுக்காட்டியுள்ளதாகவும், வன்னியில் இருந்து மனிதநேய தொண்டு அமைப்புக்களை வெளியேற்றியதைத்தொடர்ந்து தற்போது கொழும்பில் குறிப்பாக தமிழர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட திட்டமிட்டுள்ளது அவரின் இத்தகைய கருத்துக்களில் இருந்து தெரியவருவதாகவும், தனி நபர் ஒருவர் நாட்டின் இறைமையுள்ள பிரஜைகளை குறிப்பிட்ட பகுதிகளுக்கு வரவேண்டாம் என ஆணையிட யார் இவருக்கு அதிகாரம் அளித்துள்ளதாகவும், இது முற்றுமுழுதாக கண்டிக்கப்படவேண்டிய அராஜக நடவடிக்கைகளின் எதிர்வுகூறலாகவே உள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Pathivu.com
|