|
வவுனியாவில் உள்ள சிறிலங்கா படைத்தளம் மீது தாக்குதல் மேற்கொள்ள வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அணியிலிருந்து மூவர், தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தப்பிச்சென்றுள்ளார்கள் என்று கொழும்பு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வவுனியா படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக அவை மேலும் தெரிவித்திருப்பதாவது:
சம்பவம் நடைபெற்ற அன்று அதிகாலை 3:00 மணியளவில் வவுனியா படைத்தளத்திற்குள் ஊடுருவிய புலிகளின் 14 பேர் கொண்ட அணி, தளத்தின் உட்பிரதேசத்தினுள் சென்று சிறிலங்கா இராணுவத்தின் இரண்டு பட்டாலியன் படைகள் தங்கியிருந்த மண்டபத்தை தாண்டி செல்லும்போதே புலிகளின் அணி மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டனர்.
சிறிலங்கா இராணுவத்தின் சீருடை அணிந்தவாறு படைத்தளத்தின் வாசலிலும் இராணுவத்துடன் சிங்களத்தில் பேசிவிட்டு உள்ளே நுழைந்த புலிகளை, படைத்தளத்தின் உள்ளே இருந்த படையினரே சந்தேகப்பட்டு தாக்குதல் நடத்தினர்.
தரைத்தாக்குதல் ஆரம்பான உடனேயே உள்ளே நுழைந்த புலிகளின் அணியிலிருந்த ஒரு சிலர் மரங்களின் மேல் ஏறியிருந்தவாறு, படைத்தளத்தின் சரியான இருப்பிடம் குறித்த அகலாங்கு நெட்டாங்கு புள்ளிகளை ஜி.பி.எஸ் மூலம் கணித்து செய்மதி தொலைபேசி மூலம் தமது ஆட்லறி ஏவுதளத்துக்கு அனுப்பினர்.
முதல் நாள் இரவு ஓமந்தைக்கு கிழக்கு பக்கமாக தமது ஆட்லறிகளை நகர்த்தியிருந்த புலிகளின் கிட்டு ஆட்லறிப் பிரிவினர் அந்த தகவல்களை பெற்று ஆறு ஏழு நிமிடங்களுக்குள்ளேயே தமது ஆட்லறி தாக்குதலை ஆரம்பித்தனர். புளியங்குளம் பகுதியிலிருந்து சுமார் இரண்டு 130 மில்லி மீற்றர் ஆட்லறிகள் மூலம் புலிகள் இத்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
சுமார் 60 முதல் 70 ஆட்லறிகள் படைத்தளத்திற்குள் வீழ்ந்து வெடித்தன. தாக்குதல் முடிவடைந்து படைத்தள சுற்றுப்புறங்கள் உட்பட வவுனியாவின் பல பிரதேசங்கள் படையினரால் தீவிர தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த சமயம் அன்று மாலையும் படைத்தளத்திற்குள் இரண்டு ஆட்லறி எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.
இத்தாக்குதலால் படைத்தளத்திலிருந்த கட்டடங்கள் சேதமடைந்தன. ட்றக், பவுசர்கள் உட்பட படையினரின் எட்டு வாகனங்கள் முற்றாக சேதமடைந்தன.
படைத்தளத்திற்குள் கரும்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம், திடீரென வந்த புலிகளின் வானூர்திகள் இரண்டு படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்திச்சென்றன.
இந்த வானூர்திகள் எட்டு குண்டுகள் வீசியதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவற்றில் மூன்று வெடிக்கவில்லை தெரிவிக்கப்பட்டது. இவை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாக்குதலில் உயிரிழந்த படையினரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இந்தியர்கள் உட்பட 42 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் உயிரிழந்ததாக 11 கரும்புலிகளின் உடலங்களை இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர். அன்றைய நாள் புலிகளின் 14 பேரின் உடலங்கள் ஒப்படைக்கப்பட்டபோதும் மிகுதி மூவரதும் உடலங்கள் மணலாறு பகுதியில் மீட்கப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்று அவை தெரிவித்துள்ளன.
நெருடல் இணையம்
|