|
கொழும்பு தமிழர்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை: மாவை |
|
|
|
Saturday, 20 September 2008 |
|
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள தமிழ் மக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்களை பதிவு செய்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுப்பிரதி தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழர்களை காவல் நிலையங்களில் பதிவு செய்வது தவறானது சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த மனு ஒன்றின் பின்னரே அவ்வாறான தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது என்று மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டினார்.
ஆகவே, மீண்டும் காவல் நிலையங்களில் தமிழ் மக்களை பதிவு செய்யுமாறு கோரப்பட்டிருப்பது சட்டத்திற்கு மாறானது எனவும் எடுத்துக்கூறியுள்ள அவர், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்
அதேவேளை, தமிழர்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து வருட காலப்பகுதியில் கொழும்பில் தங்கியுள்ள வடபகுதியைச் சேர்ந்த தமிழர்கள் அனைவரும் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள சகல காவல் நிலையங்களிலும் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று மேல் மாகாண காவல்துறை அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|