|
திட்டமிட்டு தமிழர்களைக் களையெடுக்கும் அரசாங்கத்தின் மற்றுமொரு சதி நடவடிக்கை இன்று வெற்றிகரமாக பூர்த்தியாகியிருக்கிறது.
மேல்மாகாணத்திலுள்ள தமிழ்பிரதேசங்கள் அனைத்திலும் வடக்கிலிருந்து கொழும்பில் பல்வேறு காரணங்களுக்காககத் தங்கியிருக்கும் தமிழ் மக்கள் அனைவரும் பதிவுக்குட்படுத்தப்பட்டனர். சுமார் 15,000க்கும் அதிகமான மக்கள் கடந்த ஐந்து வருடங்களில் கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் குடியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பதிவினை முன்னிட்டு நேற்று இரவே அரசபோக்குவரத்து பஸ்களில் பெருந்தொகையான ஊர்காவல் படையினரும், பொலிஸாரும் வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை, வத்தளை, கொட்டகேனா, மோதர, மட்டக்குளி போன்றபிரதேசங்களிலுள்ள சில பாடசாலைகளில் கொண்டுவந்து தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இன்று விடுமுறை தினமாகையால் பெருமளவிலான தமிழ் மக்களை கொழும்பு நகர வீதிகளில் காணக்கூடியதாகவிருந்தது. மேலும் ஒவ்வொரு பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் அப்பிரதேசங்களிலுள்ள ஒரு பாடசாலையில் பதிவிற்குள்ளாக்கப்பட்டனர். அத்துடன் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த மக்கள் அல்லது ஒவ்வொரு வீதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் ஒவ்வொரு வகுப்பறைகள் இலக்கமிடப்பட்டு பிரிக்கப்பட்டிருந்ததுடன் பெருமளவான விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும், இராணுவத்தினரும் மற்றும் ஊர்காவல் படையினரும் கடமையிலீடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்களுடன் பெருமளவான சி.ஐ.டி யினரும் நின்றதை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.
பெருமளவில் தமிழ் மக்கள் வீதிகளிலும் பதிவு நிலையங்களிலும் திரண்டதால் பாதுகாப்புதரப்பு சற்று கலக்கமடைந்திருந்தாலும் தமிழ்;மக்கள் மீது வழமையான பாதுகாப்பு கெடுபிடிகள் சற்று குறைந்திருந்ததையே காணக்கூடியதாகவிருந்தது.
எனினும் சில இடங்களில் விசேட அதிரடிப்படை மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த சிலர் மதுபோதையில் இருந்ததுடன் தமிழ்மக்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்தவருடம் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டதைத்தொடர்ந்து கொழும்பிலுள்ள தமிழர்களை பதிவுசெய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து இன்றுவரைக்கும் கொழும்பிலுள்ள பெருமளவான தமிழ்மக்கள் கடத்தப்பட்டு காணாமல்போனதுடன் பலர் கொலைசெய்யப்பட்டுமுள்ளனர்.
அரசின் வெற்றிகரமான களையெடுப்பு நடவடிக்கையின் மற்றுமொரு அங்கமாக இன்று தமிழர்களை முற்பதிவு செய்யும் நடவடிக்கை நடைபெற்றுள்ளது. எனவே இனிவருங்காலங்களில் கொழும்பில் தமிழ்மக்கள் மீதான களையெடுப்பு நடவடிக்கை தீவிரமாகலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்.
அதாவது தமிழ் வர்த்தகர்கள் கப்பம் கேட்டு மிரட்டப்படவோ, தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்படவோ அல்லது கடத்தப்பட்டு கொலைசெய்யப்படவோ சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன். எனவே இனிவருங்காலங்களில் கொழும்புத் தமிழ்மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பது நல்லது.
மீனகன்
|