|
ஆரையம்பதியில் கடத்தப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்..!! |
|
|
|
Tuesday, 23 September 2008 |
|
மட்டக்களப்பு-ஆரையம்பதி பிரதேசத்தில் இருந்து காத்தான்குடிக்கு சென்ற இரண்டு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது-
கடந்த வாரம் ஆரையம்பதி பிரதேசத்திலிருந்து காத்தான்குடியை நோக்கிச் சென்ற இளைஞர்கள் இருவர் இன்னும் தமது வீடுகளுக்குத் திரும்பாததைத் தொடர்ந்து அவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரையம்பதியை வசிப்பிடமாகக் கொண்ட யோகநாதன் சுரேஸ் (வயது16) மற்றும் கணேசமுதலியார் உகந்தன் (22 வயது) ஆகியோரே காணாமல் போனவர்களாவர்.
ஆரையம்பதி பிரதேசத்திலிருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு செல்லும் வழியில் விசேட அதிரடிப்படை முகாம் ஒன்றும் அதன் அருகில் ரி.எம்.வி.பி. பிள்ளையான் குழுவினரின் ஆரையம்பதி அலுவலகமும். அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தெடர்ந்து இன்று மாலை ரி.எம்.வி.பி. பிள்ளையான் குழுவினரின் ஆரையம்பதி அலுவலகத்திற்கு முன்னால் திரண்ட சுமார் நூற்றுக்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
களுவாஞ்சிக்குடியில் கட்டடம் ஒன்றைத் திறந்து வைக்கச் சென்றிருந்த பிள்ளையான் திரும்பி வரும் வழியில் அவரது வாகனத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதுடன் அவரது வாகனங்களில் கல்வீச்சுத் தாக்குதல்களை நடாத்துவதற்கு மக்கள் தயாராகவிருந்தவேளை பிள்ளையான் மாற்று வழியால் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று மாலை களுவாஞ்சிக்குடி மற்றும் கல்முனை பிரதேசங்களுக்கான போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன.
ஆர்ப்பாட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை பிள்ளையானின் பிரத்தியோக செயலாளரான சீலன் தனது குழுவினருடன் அங்கு வந்து "தாம் இப்பொழுது ஜனநாயக வழிக்கு திரும்பி விட்டதாகவும். தாங்கள் இப்பொழுது எவரையும் கடத்துவதில்லை என்றும் இது தொடர்பாக தாம் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும். மக்களையும் அவ்வாறே பொலிஸில் சென்று முறையிடும்படியும்" கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வேறு வழியில்லாத மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
இதேவேளை இந்த காணாமல் போன சம்பவம் காரணமாக மீண்டும் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பநிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீனகன்
|