|
இந்த வாரமும் கிளிநொச்சிக்கான உணவு லொறிகளுக்கு ஓமந்தையில் அனுமதி வழங்கப்படவில்லை |
|
|
|
Tuesday, 23 September 2008 |
|
கிளிநொச்சி மாவடடத்திற்குத் தேவையான
அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள். மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கான
நிவாரண உணவுப் பொருட்கள் என்பவற்றை அனுப்பி வைப்பது குறித்து அரச உயரதிகாரிகள்
மட்டத்தில் ஆராயப்பட்டு செவ்வாய்க்கிழமை 20 லொறிகளில் அனுப்பி வைப்பது என
தீர்மானிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், பொருட்களை ஏற்றிச் சென்ற
லொறிகளுக்கு ஓமந்தை சோதனைச்சாவடியில் படையினர் அனுமதி வழங்கவில்லை என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சிக்கான உணவு லொறிகளை ஓமந்தை ஊடாக அனுமதிப்பதற்கான அனுமதி பாதுகாப்புப்
பிரிவினரிடமிருந்து தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று ஓமந்தையில் உள்ள படையினர்
தெரிவித்ததையடுத்து, நீண்டநேரம் காவலிருந்த லொறிகள் மீண்டும் வவுனியாவுக்கே
திரும்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு லொறிகள் திரும்பிச்
சென்றதன் பின்னர் ஐந்து லொறிகளுக்கு மாத்திரம் அனுமதி கிடைத்திருப்பதாகவும்,
அவற்றை அனுப்பி வைக்குமாறு படையினர் தெரிவித்த போதிலும் அந்த லொறிகளை
அனுப்புவதற்கு நேரம் போதாமை காரணமாக அவற்றை அனுப்ப முடியாமல் போனதாகவும்
கூறப்படுகின்றது.
கடந்த வாரம் முழுவதும் கிளிநொச்சிக்கான உணவு மற்றும்
அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகளுக்கு ஓமந்தை சோதனைச்சாவடியில்
அனுமதி வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இரண்டாவது
வாரமாக செவ்வாய்க்கிழமையும் கிளிநொச்சிக்கு உணவுப் பொருட்கள் போய்ச் சேரவில்லை
என்றும், கிளிநொச்சி மாவட்ட உணவுக் களஞ்சியங்கள் பெருமளவில்
வெறுமையாகியிருப்பதனால், இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணமும் வழங்கப்பட
முடியாத நிலையேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இடம்பெயர்ந்த
மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், வன்னிப்பிரதேசத்திற்கான அத்தியாவசிய பொருள் விநியோகம் ஓமந்தை
மற்றும் உயிலங்குளம் சோதனைச்சாவடிகளின் ஊடாக தொடர்ந்து மேற்தகொள்ளப்படுவதாகவும்,
செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 11 ஆம் திகதி வரையிலான
காலப்பகுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு 73 லொறிகளில்
பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத் தலைமையகம் தனது
இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
அரிசி, பருப்பு,
கருவாடு, உடைகள், எரிபொருள், பலசரக்குப் பொருட்கள்,, கட்டிடப் பொருட்கள். வாகன
உதிரிப்பாகங்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அந்தப் பிரதேசத்தில் உள்ள
மக்களுக்குரிய பொருட்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவ
தலைமையகம் வெளியிட்டுள்ள இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,
1228 பேர் இந்த சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் மேற்கொண்டதாகவும், 1119 வாகனங்கள்
வன்னிப்பகுதியில் இருந்து வவுனியாவுக்கு வந்ததாகவும் இராணுவத் தலைமையகம்
தெரிவித்துள்ளது,
நெருடல் இணையம்
|