பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow ஐரோப்பிய யூனியனின் பயணத்தடை: மெய்யாகவே தமிழர்களுக்கு ஒரு பின்னடைவா?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஐரோப்பிய யூனியனின் பயணத்தடை: மெய்யாகவே தமிழர்களுக்கு ஒரு பின்னடைவா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 October 2005

புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ய+னியன் எடுத்திருக்கும் முடிவு தமக்குக் கிடைத்த ஒரு ராஜீய வெற்றியாக சிங்களத்து ராஜதந்திர வட்டாரங்களில் கொண்டாடப்படுகிறது. கொழும்பில் உள்ள அநேகமான சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களிலும் இது கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் மத்தியில் சில வட்டாரங்களில் அது ஒரு ராஜதந்திர வீழ்ச்சியாக அல்லது பின்னடைவாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு மதிப்பீடுகளுமே மிகையானவை. உண்மையில் ஐரோப்பிய யூனியனின் முடிவு எனப்படுவது

சிங்கள ராஜதந்திரிகள் கொண்டாடுவது போல ஒரு மகத்தான வெற்றியுமல்ல சில தமிழ் வட்டாரங்களில் கூறப்படுவது போல பாரதூரமானதுமல்ல. மெய்யான வார்த்தைகளில் கூறின் இது ஒரு செல்லக் குட்டு மட்டுமே. புலிகளுக்கு பாதகமான ஒரு முடிவை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதேசமயம் அந்த நகர்வு புலிகளை சமாதான வழிவகைகளில் இருந்து தனிமைப்படுத்துவதாகவோ அல்லது புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதானத்துக்கான வலுச் சமநிலையை பாரதூரமான அளவுக்கு மாறிவிடாதபடிக்கோ பார்த்துக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. எனவே புலிகளுக்கு எதிராக ஏதோ ஒரு நடவடிக்கை எடுத்ததுபோலவும் இருக்கவேண்டும். அதேசமயம் அது புலி களுக்கு கடுமையாக நோகாமலும் இருக்க வேண்டும். இந்த அடிப்படை யிலேயே இது ஒரு செல்லக்குட்டு எனலாம்.

உண்மையில், கதிர்காமருக்குப் பின்பு கொழும்பிலும் மேற்கு நாடுகளின் தலைநகரங்களிலும் முடுக்கிவிடப்பட்டிருக்கும் ராஜதந்திர நடவடிக்கைகளை பொறுத்தவரை இது சிங்கள ராஜதந்திரிகள் எதிர்பார்ப்பதை விடவும் பெறுமதி குறைந்த ஒரு ''வெற்றி'' தான்.

கதிர்காமர் ஒரு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தயாரிப்பு. ஐரோப்பிய அறிவியல் பண்பாட்டில் மிகவும் மதிக்கப்படும் ஒரு அறிவியல் மையமான ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உருவாக்கமாகிய கதிர்காமரை மேற்கு நாடுகள் தமது பெருமைக்குரிய கறுப்பு வாரிசாகவே -ஆசிய வாரிசாகவே - கருதுகின்றன. இது முதலாவது.

இரண்டாவது, தற்சமயம் ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான தலைவர்கள், ராஜதந்திரிகள், கொள்கைவகுப்பாளர்கள் போன்றோருக்கு கதிர்காமரை நேரில் தெரியும். எனவே அவர் கொல்லப்பட்டபோது அதன் தாக்கத்தை அவர்கள் தனிப்பட்ட முறையில் உணர்ந்திருக்கக் கூடும். இந்த இரண்டு காரணங்களின் பின்னணியில் கதிர்காமர் கொல்லப்பட்டதால் உருவாகிய ஒருவித அனுதாபகரமான ராஜதந்திரச் சூழலை மிகவும் சமயோசிதமாகக் கையாள்வது என்று சிறிலங்கா அரசு முடிவெடுத்திருக்கிறது. கடந்த சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மேற்கத்திய ராஜதந்திர அரங்கில் புலிகளின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து வருவதை கவலையோடும் ஆத்திரத்தோடும் பார்த்துக்கொண்டிருந்த சிங்கள ராஜதந்திரிகள் கதிர்காமர் கொல்லப்பட்டதன் பின் உருவாகிய அனுதாபகரமான சூழலை முழு அளவு பயன்படுத்துவது என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

இந்த ராஜதந்திர முயற்சிகளின் உச்சமாக திருமதி சந்திரிகாவின் அண்மைக்கால மேற்கத்திய பயணங்கள் அமைந்திருக்கின்றன. மரபு ரீதியிலான அரசுகளுக்கிடையிலான ராஜிய உறவுகளின் அடிப்படையில் இது திருமதி சந்திரிகாவுக்கும், சிங்கள ராஜதந்திரிகளுக்கும் ஒப்பீட்டளவில் இலகுவானதாகக் காணப்படுகிறது. எனவே புலிகளுக்கு எதிராக முடிவெடுக்குமாறு ஐரோப்பிய ய+னியனை அவர்கள் வற்புறுத்தி வருகின்றார்கள்.

இது விசயத்தில் புலிகளை இப்போதும் தடைசெய்து வைத்திருக்கும் பிரிட்டன், ஐரோப்பிய ய+னியனின் தலைமைப் பொறுப்பில் இருப்பது அவர்களுக்கு மேலும் வசதியாகிவிட்டது. தவிர, பிரிட்டன் அண்மையில் அங்கு நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களால் தீவிரவாதத்திற்கு எதிராகக் கடும் கோபத்துடன் இருக்கிறது.

இவை எல்லாவற்றுடனும் சேர்த்து மற்றொரு விசயமும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். அது எதுவெனில் ... தமிழர் பகுதிகளில் ஒருவித யுத்தபீதி உருவாகிவருவது குறித்து மேற்கு நாடுகள் கவலைப்படுகின்றன. எனவே ஒரு யுத்தத்திற்குப் போகாமல் புலிகளைத் தடுக்கும் நோக்கமும் அதோடு முக்கியமாக, வரும் சனாதிபதித் தேர்தலில் தமிழர்களை வாக்களிக்கத் தூண்டும் ஒரு முடிவை நோக்கி புலிகளை ஊக்குவிக்கும் நோக்கமும் இந்தத் தடைக்குள் இருக்கமுடியும்.

எனவே இந்த எல்லாக் காரணிகளும் சேர்ந்து ஐரோப்பிய யூனியனை புலிகளுக்கு சாதகமற்ற ஒரு முடிவை நோக்கி இட்டுச்சென்றிருக்கமுடியும்.

ஆனால் தான் எடுக்கப்போகும் எந்த ஒரு முடிவும் சமாதானத்தின் வலுச் சமநிலையை பாரதூரமான அளவுக்கு பாதிக்காதிருக்கவேண்டும் என்ற கரிசனை மேற்படி தடைக்குள் பொதிந்து கிடக்கிறது.

சந்திரிகாவும் அவருடைய ராஜதந்திரிகளும் விரும்பியது புலிகள் இயக்கத்தை ஐரோப்பாவில் தடைசெய்ய வேண்டும் என்றே. ஆனால் அது நடக்கவில்லை. பதிலாக புலிகள் அந்த நாடுகளுக்குப் பயணம் செய்யமுடியாது என்ற ஒரு பயணத்தடையே விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட தற்காலிகமானது என்றே வியாக்கியானம் செய்யப்படுகின்றது. எனவே இத்தடை மூலம் சிங்கள ராஜதந்திரிகள் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. மாறாக இந்த பயணத்தடை மூலம் தமிழர்களுக்கு எதிராக அவர்கள் பெறக்கூடிய வெற்றிகளுக்கிருக்கும் வரையறைகளே உணர்த்தப்பட்டிருக்கின்றன. அதாவது புலிகளை ராஜதந்திர ரீதியாக எதுவரை முடக்கலாம் என்பதில் உள்ள வரையறைகள் உணர்த்தப்பட்டிருக்கின்றன.

இப்படிப் பார்த்தால் இதில் தமிழர்கள் கவலைப்படுவதை விடவும் உற்றுக்கவனித்துச் சிந்திக்கவேண்டிய ஒரு செய்தி இருக்கிறது. அது என்னவெனில் ஐரோப்பிய யூனியன் புலிகளை இன்னமும் தடை செய்யவில்லை என்பதே அது. அதாவது இந்த பயணத் தடைமூலம் சிங்கள ராஜதந்திரத்திற்கு இருக்கக்கூடிய வரையறைகள் உணர்த்தப்பட்டிருக்கின்றன. இதை மறுவளமாகச் சொன்னால் சர்வதேச அளவில் புலிகளின் பேரம் பேசும் சக்தி எந்த நிலையில் உள்ளது. என்பதை இது உணர்த்தியிருக்கிறது எனலாம்.

எனவே இதன்படி கூறின் சிங்கள ராஜதந்திரிகள் இந்த தடையையிட்டு அதிருப்திப் படவேண்டுமே தவிர வெற்றி கொண்டாட முடியாது. அது போலவே தமிழர்களும் பெரியளவில் மிரட்சியுறத்தேவையில்லை.

உண்மையில் இது விசயத்தில் அதிகம் விசனப்பட வேண்டியது மேற்கு நாடுகள்தான். ஏனெனில் இலங்கைத் தீவின் சமாதான முயற்சிகளில் அவர்களே அனுசரணையாளராகத் தொழிற்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சமாதானத்தில் ஈடுபடும் ஒரு தரப்பை ராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்தி வலுச் சமநிலையை தனக்குச் சாதகமாக மாற்றி விட வேண்டும் என்ற வேட்கையோடு மற்றொரு தரப்பு மேற்கொண்டு வரும் சகல முயற்சிகளும் ஒன்றை விளங்கிக்கொள்ள போதுமானவை. அது என்னவெனில் சமாதானத்தின் பெயரால் தமிழர்களை தோற்கடிக்கவே கொழும்பு விரும்புகிறது என்பதே. அதாவது யுத்தத்தின் போதிருந்த அதே மனோநிலைதான் சமாதானத்தின் போதும் தொடர்ந்தும் இருந்து வருகிறது என்பதே.

இது உண்மையில் சமாதானத்தின் இதயத்தையே தாக்கக்கூடிய ஒரு அம்சம். சுமாதானம் எனப்படுவது பரஸ்பரம் விட்டுக்கொடுத்து, பரஸ்பரம் நல்லெண்ணத்தையும் நம்பிக்கைகளையும் கட்டியெழுப்புவதே. இதில் யாரும் யாரிடமும் தோற்பது கிடையாது. மாறாக இருதரப்புமாகச் சேர்ந்து வெற்றிகளைப் பங்கிடுவதுதான் மெய்யான சமாதானம்.

ஆனால் இங்கேயோ ஒரு தரப்பை மற்றொரு தரப்பு தடைசெய்யுமாறு கூறுகிறது. இத் தடைமூலம் புலிகளை சமாதானம் செய்யும் நாடுகளுடன் முரண்பட வைப்பதே கொழும்பின் நீண்டகால நோக்கம். அதாவது சமாதானம் செய்ய வருபவர்களை ஒரு கட்டத்தில் தமிழர்களுடன் முரண்படவைத்து மோதவிடுவது. இதை இன்னும் தெளிவாகச் சொன்னால் .... ரெப்றியை அதாவது நடுவரை போட்டிக்குள் இழுத்து மோதும் ஒரு தரப்பாக மாற்றிவிடுவது.

முன்பு ஜெயவர்த்தன, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது இதைக் கனகச்சிதமாகச் செய்தார். அவர் வைத்த பொறிக்குள் அனுபவம் மிகக் குறைந்தவரும் உரிய ஆலோசகர்களை மதியாதவருமாகிய ராஜீவ்காந்தி இலகுவாய் வீழ்ந்தார்.

இப்பொழுது சந்திரிகாவின் முறை. சிலசமயம் ரணிலோ அல்லது மகிந்தவோ வந்தாலும் அவர்களும் கூட இதைத்தான் செய்ய முயல்வார்கள். நடுவரை விளையாட்டு வீரராக மாற்றி விடுவது.

ஆனால் கொழும்பு வைத்திருக்கும் இந்த ராஜதந்திரப் பொறிக்குள் ஐரோப்பிய ய+னியன் முற்று முழுதாகக் காலை வைக்கவில்லை என்றே தோன்றுகிறது. புலிகளைத் தடை செய்யாமல் பயணத்தடை மட்டும் விதித்ததன் மூலம் முன்பு இந்தியா விட்ட அதே பிழையை இம்முறை ஐரோப்பா விடத்தயாரில்லை என்பது சூசகமாக உணர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழர்களுக்கு ஒப்பீட்டளவில் சாதகமான ஒரு சமிக்ஞை. பயணத்தடை என்ற ஒரு எதிர்மறை அம்சத்துக்குள் பொதிந்து கிடக்கும் சாதகமான இந்த சமிக்ஞையில் இருந்தே தமிழர்கள் தமது பலத்தை மதிப்பிடவும் தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவும் வேண்டியிருக்கிறது.


நிலாந்தன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..