|
இலங்கை தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை (02.10.08) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் நடத்தப்பட உள்ள உண்ணாநிலைப் போராட்டத்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விஜயகாந்த்தும் தனது ஆதரவை அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளர் தா.பாண்டியனுக்கு நேற்று திங்கட்கிழமை விஜயகாந்த் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் தாங்கள் அனுப்பிய இலங்கை தமிழர் இனப்பிரச்சினை சம்பந்தமாக 26.09.2008 திகதியிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றேன்.
இலங்கை தமிழ் மக்களின் உரிமைக்காக ஒக்ரோபர் 2 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதை தெரிந்துகொண்டேன்.
இலங்கை தமிழர்கள் சிங்கள அரசின் அடக்குமுறையால் படும் துயரம் சொல்லமுடியாத ஒன்றாகும். நான், சார்ந்திருக்கின்ற தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் அவைத் தலைவர் திரு.பண்டிருட்டி இராமச்சந்திரன் அவர்கள் சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குவார்.
இதர மாவட்ட தலைநகரங்களைப் பொறுத்தவரை, எங்களது இயக்கத் தோழர்கள், இளைஞர் அணி மாநாட்டின் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் கலந்துகொள்ள இயலவில்லை என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். தங்களது போராட்டம் வெற்றிபெற எங்களது உளமார்ந்த வாழ்த்துக்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|