|
யாழ்ப்பாண முற்றுகை அல்லது யாழ்ப்பாணத்திற்கான போர் என்பது கடந்த ஐந்து நூற்றாண்டுகளிலும் ஏறக்குறைய ஒரே அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.
படைநடவடிக்கை அல்லது போர்விதி என்பது பெரும்பாலும் புவியியல் அமைவுகளையும் பருவகாலங்களையும் தம் திட்டமிடலிற் கொண்டுள்ளன.
இந்த அடிப்படையைப் புறக்கணித்து விட்டு எந்தப் படை நடவடிக்கையையும் செய்ய முடியாது. எனவே யாழ்ப்பாணத்திற்கான முற்றுகையும், படை நடவடிக்கையும் புவியியல் சார்ந்தே முக்கியத்துவம் பெறுகின்றன. இப்போது வன்னியில் நடந்து கொண்டிருக்கும் போர் யாழ்ப்பாணத்திற்கான போரே. இதை இன்னும் சற்று விளக்கமாகவும், நேரடியாகவும் சொன்னால் இது ஆனையிறவுக்கான சமர் என்று சொல்லலாம்.
அதுவே உண்மையும் கூட. சிறீலங்கா இராணுவத்தினர் எட்டு மாதங்களுக்கு முன் மன்னார், பாப்பாமோட்டையில் நின்ற போது ஒரு நண்பர் சொன்னார் "இப்போது நடக்கும் சமர் ஆனையிறவுக்கான சமரே" என்று அருகில் நின்ற எவருக்கும் நண்பர் சொன்ன விடயம் பிடிபடவில்லை. "ஆனையிறவைக் கைப்பற்றுவதற்காகவே இராணுவத்தினர் புலிகளுடன் பாப்பாமோட்டையில் சண்டையிடுகிறார்கள். வேண்டுமானால் இருந்து பாருங்கள் இதன் உண்மை புரியும்" என்று நண்பர் மேலும் அழுத்தமாகச் சொன்னார்.
இந்த உண்மையை நாம் சமகால நிலமைகளோடும் வரலாற்று நிகழ்ச்சிகளோடும் இனிப் பார்க்கலாம். முதலில் யாழ்ப்பாணத்திற்கான சமர் எதற்காக மன்னாரில் நடத்தப்பட வேண்டும் என்று பார்ப்போம். யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏறக்குறைய நாற்பதாயிரம் படையினர் உள்ளனர் என்று சொல்லப்பட்டாலும் உண்மையான அர்த்தத்தில் அவர்கள் புலிகளின் முற்றுகைக்கு உட்பட்டேயிருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் பலாலி விமானத்தளம், காங்கோசன்துறைத் துறைமுகம் மற்றும் அதனோடு இணைந்த கடற்படைத்தளம், காரைநகர், நெடுந்தீவு கடற்படைத்தளங்கள், கிளாலி, நாகர்கோவில், முகமாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பலம் வாய்ந்த முன்னரண்கள் எதுவும் படையினரைப் பாதுகாக்கக் கூடியனவல்ல.
யாழ்ப்பாணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றால் ஆனையிறவும், பூநகரியும் படையினர் வசம் இருக்க வேண்டும். ஆனையிறவும் பூநகரியும் யாரிடம் இருக்கின்றதோ அவர்களிடமே யாழ்ப்பாணம் இருக்கின்றது எனலாம். உண்மையான அர்த்தத்தில் இப்போது யாழ்ப்பாணம் புலிகளிடமே உள்ளது எனலாம். அதாவது எப்போதும் யாழ்ப்பாணம் புலிகளிடம் விழலாம் என்ற நிலை. இதனை சற்று இன்னும் விரிவாக நோக்கினால் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் ஆனையிறவிலும், பூநகரியிலும் படையினர் நிலைகொண்டிருந்தனர்.
அப்போது புலிகளைக் குடாநாட்டிற்குள் முடக்கி வைத்தே அழிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டது. 1987இல் வடமராட்சியில் நடத்தப்பட்ட ‘ஒப்பரேசன் லிபரேசன்' இந்த வகையிலான முதல் நடவடிக்கை. வடமராட்சியில் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது சமநேரத்தில் மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ தலைமையிலான படையினர் ஆனையிறவில் இருந்து வெற்றிலைக்கேணி வரையான படைநகர்வை மேற்கொண்டிருந்தனர். யாழ்குடாநாட்டில் இருந்து புலிகள் வன்னி நோக்கி வெளியேறக்கூடாது அல்லது வன்னியில் இருந்து மேலதிக புலிகள் யாழ்ப்பாணத்துள் நுழைந்து படையினரைத் தாக்குவதைத் தடுப்பது என்ற நோக்கிலான ‘அடைப்பு' நடவடிக்கையைப் படையினர் மேற்கொண்டிருந்தனர்.
இரண்டாம் கட்டம் பூநகரியும், ஆனையிறவும் தமது கட்டுப்பாட்டில் இருந்த போது ஆனையிறவில் இருந்து கிளாலிக் கடற்கரையோரமாகக் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட யாழ்தேவிப்படை நடவடிக்கை. ஆனையிறவுக்கு வடகிழக்கிலுள்ள தரைப்பகுதியான இயக்கச்சி, கொம்படி வழியாக பொது மக்களும் புலிகளும் மேற்கொண்ட பயணத்தை 1991இல் முழுமையாகத் தடுத்தபின் கிளாலிக் கடல்நீரேரியூடாகவே மாற்றுப் பயணம் நடந்தது. அதனைத்தடுத்து முழுமையான முற்றுகைக்குள் குடாநாட்டைக் கொண்டு வருவதே படையினரின் நோக்கமாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன் பூநகரி, சங்குப்பிட்டி, கேரதீவுப் பாதையும் ஆனையிறவு ஏ-9 வீதியும் தடுக்கப்பட்டிருந்தன.
ஆக- மிஞ்சியிருக்கும் கடல்வழியைப் தடுத்து விடவே ‘யாழ்தேவி' நடவடிக்கை படைத்தரப்பினால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதைப் புலிகள் முறியடித்து விட்டனர். என்றபோதும், யாழ்ப்பாணத்தில் புலிகளைச் சூழ்ந்து இருந்த அபாயம் நீங்கவில்லை. தம்மைச் சூழ்ந்திருந்த அபாயவலையைத் தகர்த்தெறிவதற்காக 1990, 1991 காலப்பகுதிகளில் ஆனையிறவுத்தளம் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களையும் நாம் இங்கே நோக்க வேண்டும். அவை வெற்றியளிக்காத நிலையில் புலிகள் பூநகரித் தளத்தை 1993இல் தகர்த்தழித்தார்கள். ஆனால், படையினர் பூநகரியில் பின்னரும் நிலைகொண்டிருந்தனர்.
புலிகள் வன்னியில் பலமாகத் திரண்ட எதிர்பாராத சந்தர்ப்பத்தில் திடீரெனப் பூநகரியை விட்டுப் படையினர் பின்வாங்கி யாழ் தீவகத்தில் நிலை கொண்டனர். படையினரின் இந்தப் பின்வாங்குதல் படைத்தரப்புக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு என்று அப்போது படைத்துறை விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. பூநகரியும், ஆனையிறவும் படையினர் வசம் இருந்த காரணத்தினால்தான் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தாம் நடத்திய ஆட்சிப் பரிபாலனத்தை விட்டுப் புலிகள் 1995, 1996களில் வன்னிக்குச் செல்ல வேண்டியேற்பட்டது. இதே நிலைதான் பின்னர் படைத்தரப்பிற்கு ஏற்பட்டது.
யாழ்ப்பாணத்தை தமது பிடிக்குள் கொண்டு வந்திருந்த போது ஆனையிறவு படையினர் வசம் இருந்தது. ஆனால், பின்னர் புலிகளிடம் அதை இழந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள படையினரின் நிலை தளம்பலுக்குள்ளாகியது. இப்போது படைத்தரப்புக்குள்ள பெரும் சவால் யாழ்ப்பாணத்தின் மீதான புலிகளின் ஆபத்தில் இருந்து எப்படித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுவது, எவ்வாறு யாழ்ப்பாணத்தை தக்க வைத்திருப்பது என்பதே. புலிகள் பூநகரியில் இருந்து பலாலிக்கும், காங்கேசன்துறைக்கும் எறிகணையை வீசுகிறார்கள் என்பது படைத்தரப்புக்கு தொடர்ந்திருக்கும் மிகப் பெரும் நெருக்கடி. இந்தமாதிரியான அபாயவலையை தகர்ப்பதற்காகவே முன்னர் ஜெயசிக்குறு நடவடிக்கையை படைத்தரப்பு மேற்கொண்டது.
குடாநாட்டுப் படையினருக்கான விநியோகம் எப்போதும் சவால் நிறைந்தது. முற்றுகையிடப்பட்டிருக்கும் படையினருக்கான விநியோகம் சவால் நிறைந்ததாக இருக்க முடியாது. அப்படியிருந்தால் அதுவும் அபாயமானதே. கடற்புலிகள் அடுத்த கட்டத் தாக்குதல் முறையன்றில் வளர்ச்சியடைந்தால் இப்போது கடல்வழியாகத் தொடரும் படையினரின் விநியோகம் தடைப்பட்டு விடும். இது புலிகளுக்கு வாய்ப்பை இலகுவாக்கும். எனவே தான் மன்னார் மற்றும் மல்லாவி ஊடான படையெடுப்பு நடக்கிறது. இந்தப் படையெடுப்பின் மூலம் மிகமெதுவாக நகர்ந்து நகர்ந்து பூநகரியைக் கைப்பற்றி விட்டால் முதல் பாதி நெருக்கடியையும் ஆபத்தையும் கடந்து விடலாம் என்பதே படைதரப்பின் நிலைப்பாடு.
அத்துடன் தமிழகத்துடனான தமிழ் மக்களின் மற்றும் புலிகளின் தொடர்புகளும் துண்டிக்கப்படும் எனவும் நம்புகிறது. இதன் அடுத்த கட்டமாக பூநகரியில் இருந்தும் அக்கராயன் வழியாகவும் கிளிநொச்சியையும் கைப்பற்றி அதன் ஊடாக ஆனையிறவுக்கு சொல்லலாம் என்றும் படைத்தரப்பு கருதுகின்றது. யாழ்ப்பாணத்தைப் பாதுகாக்கும் இந்த நடவடிக்கை மிகச் சிரமம் என்றாலும் இதில் வெற்றி பெற்று விட்டால் பல நன்மைகள் தனக்குண்டு என்பது அரசாங்கத்தின் நம்பிக்கை. புலிகளை கணிசமான அளவிற்கு அழித்து விடலாம், அவர்களின் போரிடும் ஆற்றலை தணித்து விடலாம், வன்னியில் பெருமளவு நிலப்பரப்பை கைப்பற்றி விடலாம், கிளிநொச்சி நகரத்தை கைப்பற்றி விடலாம், மன்னார் மாவட்டத்தை தமது முழுமையான பிடிக்குள் கொண்டு வந்து விடலாம் என்றெல்லாம் இந்தக் கணக்கு விரிகின்றது.
இதற்கான சாத்தியங்கள் குறித்த கேள்விகள் தனியாக இருக்கின்றன. அதற்கு மேலும் சில விடயங்களை நோக்கலாம். கடந்த ஐந்து நூற்றாண்டுகளின் முன்னர் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முயன்ற வேளை நடந்த சம்பவங்களை ஒத்ததாகவே இப்போது நடக்கின்ற சில நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. குறிப்பாக போரியல் ரீதியாக ஒத்த தன்மையுடை நிகழ்சிகள் இவை. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக போர்த்துக்கேயப் படைகள் மன்னாரில் இருந்தே படையெடுப்பை மேற்கொண்டன. இப்போது சிங்களப் படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கையும் ஏறக்குறைய இதே போன்றதுதான். மன்னாரில் இருந்து படையெடுத்து வந்த போர்த்துக்கேயப் படையினரை யாழ்ப்பாணப் படைகள் சங்கிலியன் தலைமையில் எதிர்கொண்டன.
இதனை வெற்றி கரமாக முறியடிக்க மன்னாரில் ஒரு தரப்பு மக்களை போர்த்துக்கேயர் தம்வசப்படுத்தினர். இவ்வாறு போர்த்துக்கேயருக்கு ஆதரவளித்த மக்களை சங்கிலியன் பழிதீர்த்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எப்படியோ போர்த்துக்கேயர் அந்தப் படையெடுப்பில் வெற்றி பெற்று யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். ஆனால், பூநகரியும் ஆனையிறவும் அவர்கள் கையில் இல்லாத காரணத்தினால் ஒல்லாந்தப் படைகளிடம் யாழ்ப்பாணம் வீழ்ந்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் புத்திபூர்வமாக பூநகரியிலும், கிழக்கே இயக்கச்சி, ஆனையிறவு, வெற்றிலைக்கேணி ஆகிய இடங்களிலும் கோட்டைகளைக் கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தினார்கள்.
ஏனெனில் அப்போதும் வன்னி சுதந்திர இராச்சியப் பகுதியாகவே இயங்கி வந்தது. வன்னியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரக்கூடிய ஆபத்தைத் தடுப்பதே ஒல்லாந்தப் படைகளின் நோக்கம். ஆனால், பின்னர் பிரித்தானியப் படைகளிடம் யாழ்ப்பாணம் வீழ்ச்சி கண்டது. அப்போது இந்தக் கோட்டைகளை பிரித்தானியப் படைகள் தம்வசப்படுத்தியிருந்தன. பிரித்தானியர்கள் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் இந்தத் தளங்களில் சிங்களப் படைகள் நிலைகொண்டன. இப்போது பூநகரியிலும் சிங்களப் படைகள் இல்லை. ஆனையிறவிலும் இல்லை.
வெற்றிலைக்கேணி, இயக்கச்சியிலும் இல்லை. எனவே, யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினர் ஸ்திரமாக இல்லை என்பதே படையியல் மொழியில் கூறிப்படும் அர்த்தமாகும். இந்த நிலையை மாற்றுவதே இப்போது நடக்கும் தீவிர யுத்தம். இதற்காகவே இத்தனை இழப்புக்களும், இவ்வளவு பெருந்தொகையான விலைகொடுப்பும். இது இரண்டு தரப்புக்கும் இடையில் உள்ள மிகப்பெரும் சவால்.உண்மையில் யாழ்ப்பாணத்திற்கான சமர் அல்லது ஆனையிறவுக்கான சமர் இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
இந்தச் சமர் இப்போதைக்கு ஓயப்போவதில்லை. ஏனென்றால் இந்தப் போரின் வெற்றி தோல்விகள் இலங்கை இனப்பிரச்சனையை ஏதோ ஒரு புள்ளியை நோக்கியும் திசையை நோக்கியும் நகர்த்தக் கூடியது. அந்த முதிர்ச்சி நிலைக்கு போர் வந்தே விட்டது. வரலாறு திரும்பத் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியே சுற்றுகிறது என்று சொல்லுவதும் எவ்வளவு உண்மையானது
மனோகரன்
|