|
வன்னியில் தரையிலும் கடலிலும் கடும் சமர். அதிகாரி உட்பட 10 இராணுவம் பலி. |
|
|
|
Wednesday, 01 October 2008 |
|
இலங்கையின் வடக்கே தரையிலும் கடற்பரப்பி்லும் விடுதலைப் புலிகளுடன் கடும் சண்டைகள் நடைபெற்று வருவதாகத் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட களமுனைகளில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் ஓர் அதிகாரி உட்பட 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த மோதல்களில் மேலும் 32 படையினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உக்கிர சண்டைகளை உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள் மணலாறு பகுதியில் 6 முனைகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சிகளை கடுமையான முறியடிப்பு தாக்குதல்களின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதல்களில் 6 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும்- மேலும் 20 பேர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் ரயில் நிலையத்திற்கு மேற்குப் பகுதியிலும் கடும் சண்டைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ள விடுதலைப் புலிகள், கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளத்திற்கு மேற்குக் களமுனைகளில் இராணுவத்தினருக்கு எதிரான கடுமையான முறியடிப்புத் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நெருடல் இணையம்
|