|
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை குறைப்பதற்கு
சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாக
முறையிடப்படுகின்றது.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் புறநகர்ப் பிரதேசங்களில் உள்ள
கிராமங்களில் நீண்டகாலமாக சிங்கள குடும்பங்கள் வாழ்ந்து வருவது போன்று
வாக்காளர் புத்தகங்களில் பதிவுகள் இடம்பெறுகின்றன. அத்துடன் தமிழ்
மக்களின் முன்னைய பதிவுகள் அழிக்கப்படுவதாக திருகோணமலை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள குடிசன மதிப்பீட்டு திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்
சிலர் இரகசியமான முறையில் இந்த திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக திருகோணமலை
தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மூத்த அமைச்சர்கள் சிலரும் துணைபுரிகின்றனர் என்றும்
திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் அரச செயலகங்களில் பணிபுரியும்
மூத்த தமிழ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்படுவதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
செயற்கையான முறையில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைக்கும்
அரசாங்கத்தின் இரகசிய திட்டத்திற்கு தடையாக இருக்கும் தமிழ் அதிகாரிகளே
இடமாற்றம் செய்யப்படுவதாகவும் வேறு சில அதிகாரிகள் கட்டாயமான முறையில்
ஓய்வு பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை சேருவில கிராமத்தில் இருந்து வடமத்திய மாகாணத்தில் உள்ள
பொலநறுவ வரை அமைக்கப்பட்டுள்ள புதிய வீதி ஓரமாக சிங்கள குடியேற்றங்கள்
இடம்பெற்று வருகின்றன. கூடுதலாக மாவிலாறு பிரதேசத்தை அண்மித்த
பகுதிகளிலேயே சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள்
தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உட்புறமாக உள்ள சில
தமிழ் கிராமங்களை மத்திய வடமத்திய மாகாண சபைகளுடன் இணைப்பதற்கு அரசாங்கம்
நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொழிலாளர்கள் என்ற பெயரில்
சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கினறனர்.
போர் நடடிக்கைகளினால் அதிகமான தமிழ் மக்கள் மட்டக்களப்பு திருகோணமலை
மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
அவர்களில் கூடுதலானேர் வேறு இடங்களில் குடியமர்ந்துள்ளதாலும் வேறு
சிலர் கொழும்புக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று வாழ்வதாலும் இவ்வாறான
செயற்கையான இன விகிதாசார குறைப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் திட்டமிட்டு
மேற்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண மக்கள் கவலை
தொவிக்கின்றனர்.
நெருடல் இணையம்
|