பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

ஜானக இலக்கு வைக்கப்பட்டது ஏன்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 12 October 2008

 வடக்கில் யுத்தம் தீவிரமடைகிறது. யுத்தத்தின் பலாபலன்களைப் பெறுவதில் பெரும் போட்டி நிலவுகிறது. இந்த யுத்தம் அரசியலுக்கு எந்தளவு தூரம் பயன்படுகிறதோ அந்தளவு தூரம் அரசியலில் எதிரிகளைப் பழிவாங்கவும் பயன்படுகிறது. இதன் உண்மை நிலையை அறியாது மக்கள் குழப்பமடைகையில், இடம்பெறும் சம்பவங்களுக்கு எவர் மீது குற்றஞ் சுமத்துவதென்பது எவருக்குமே தெரியாதுள்ளது.

இதனால்தான், நடைபெறும் படுகொலைகளுக்கான சூத்திரதாரிகள் யாரென்பது தெரியாது மக்கள் குழம்புகையில் அடுத்த கொலை நடந்துவிடுகிறது. முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரியும்

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் வடமத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் படுகொலை ஏற்படுத்திய வெற்றிடத்தை விட அவர் ஏன் கொல்லப்பட்டார், எதற்காக கொல்லப்பட்டார், அவரைக் கொன்றவர்கள் யாரென்ற கேள்வி பூதாகரமாகியுள்ளது. விடுதலைப் புலிகளே கொன்றதாக அரசும் அதனைச் சார்ந்தவர்களும் கூறுகையில் அதனை ஏற்கமறுக்கும் எதிர்க்கட்சிகள் இந்தக் கொலைக்கு அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டுமெனக் கூறுகின்றன.

இந்தளவுக்கு மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் கொலை தெற்கில் பெரும் உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. யுத்தமே இன்று அரசியலாகி விட்டது. எல்லாமே யுத்தத்திற்காக, எல்லாமே பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக என்ற நிலையில் யுத்தத்தின் வெற்றியும் தோல்வியுமே இலங்கையில் அரசியலைத் தீர்மானிப்பதுடன் இனியும் அரசியலைத் தீர்மானிக்கவும் போகிறது.

இதனால்தான் யுத்த வெற்றியும், அரசியல் படுகொலைகளும், ஆட்கடத்தல்களும், ஆட்கள் காணாமல் போதலும் நாட்டு மக்களின் நன்மைக்காகவே என்றதொரு நிலையை உருவாக்கிவிட்டது. இதுவே நாட்டில் தினமும் நடைபெறும் அனைத்துக் கொடுமைகள் குறித்தும் குரலெழுப்பாது மக்களை மௌனிகளாக்கி வாய்மூட வைத்துள்ளது.

கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கெதிரான வெற்றி, வடக்கில் விடுதலைப் புலிகளுக்கெதிராகப் பெறப்போகும் வெற்றிக்கான படிக்கல்லென அரசு கூறியது. கிழக்கை கைப்பற்றியதும், வடக்கில் கிடைக்கப் போகும் வெற்றி முழு நாட்டுக்குமான வெற்றியென்றனர். இதனால்தான் தெற்கில் நடைபெறும் எந்தத் தேர்தலிலும் ஏன் எதற்கெனக் கேட்காது யுத்த வெற்றிக்காக மக்கள் வாக்களித்தனர்.

ஆனால், அது மக்களை எங்குகொண்டு சென்றுவிடப் போகின்றதென்ற கவலையை இன்று அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றிவிட்டால் அடுத்த வருட முற்பகுதியில் அரசு பொதுத் தேர்தலுக்குச் செல்லப் போகிறது. யுத்தம் மூலம் கிடைத்த வெற்றியும் எதிர்க் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட பெரும் பிளவுகளும் யுத்தத்தில் அடுத்த வெற்றியுடன் அரசைப் பொதுத் தேர்தலுக்குச் செல்ல வைத்து விடும். இதனால்தான் இந்த வருட இறுதிக்குள் கிளிநொச்சியையும் கைப்பற்றி அதற்கப்பாலான பகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டுமென அரசு துடிக்கிறது.

இதற்கான யுத்தத்திற்காக அதிகளவு நிதி ஒதுக்கீடும் செய்யப்படுவதுடன் படையினரை உரமூட்டும் வகையில் பல்வேறு நாடுகளிடமிருந்தும் ஆயுதங்களும் வாங்கிக் குவிக்கப்படுகிறது. யுத்தம்தான் எல்லாமே, எல்லாமே யுத்ததிற்காக என்ற அடிப்படையில்தான் இன்றைய அரசியல் இருக்கிறது. ஆட்சிக்கான பெரும்பான்மைப் பலத்தை சேகரிப்பதற்கு யுத்தம் மிக அவசியமாகிவிட்டது. ஆளும் தரப்பால் மட்டுமே இந்த வெற்றிகரமான யுத்தத்தை நடத்த முடியுமென்பதால் எதிர்க்கட்சிகளால் எதுவுமே செய்ய முடியாத நிலையுள்ளது.

இராணுவம் வெற்றிபெற வேண்டும், புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டுமென விரும்பிய எதிர்க்கட்சிகளெல்லாம் புலிகளின் வெற்றியில்தான் தங்களின் எதிர்காலம் தங்கியுள்ளதென்பதை உணரத் தொடங்கிவிட்டதால் படையினருக்கான தோல்வி அரசுக்கான தோல்வியாக மட்டுமல்லாது தங்களுக்கான வெற்றியாகவே கருதத் தொடங்கியுள்ளன.

புலிகளுக்கிடையிலான பிளவால் தோன்றிய கருணாவும், ஐ.தே.க.வுக்கிடையில் தோன்றிய பிளவால் தோன்றிய கரு ஜெயசூரிய கோஷ்டியும், ஜே.வி.பி.யை பிளவுபடுத்திய போது தோன்றிய விமல் வீரவன்சவும் அரசின் யுத்தத்திற்கு தீவிர ஆதரவளிப்பதால், யுத்தப் பிரியர்களைக் களமிறக்கினால்தான் தாங்களும் வெற்றிபெற முடியுமென்ற நிலையில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை ஐ.தே.க. களமிறக்கியது. ஆனாலும், வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் அவர்கள் தோல்வியுற்றாலும், அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் தரப்பை விட அவர் அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றமை அரசுக்கு பலத்த அடியான அதேநேரம் துவண்டு கிடந்த ஐ.தே.க.வுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.

முன்னாள் வடபிராந்தியத் தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவுக்கு அடுத்து புலிகளுக்கெதிரான போரில் தென்பகுதி மக்கள் மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை பெரிதும் நம்பினர். அந்தளவுக்கு அவரது நடவடிக்கைகள் தெற்கில் யுத்தவாதிகளிடையே புகழ்பெற்றிருந்தன. தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புக்குள்ளாகியிருந்த இவர் மிக மோசமான மனித உரிமை மீறலுக்காக சர்வதேச ரீதியிலும் குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தார்.

யுத்த முனையில் சர்வதேச விதிமுறைகளை மீறிய ஒருவரென்பதை முழு உலகமும் அறிந்திருந்தது. இதனால் இவர் பதவியிலிருந்த காலத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அரசியல் காரணங்களுக்காக இவர் ஒதுக்கப்படவே யுத்தமுனையிலிருந்து ஓய்வுபெற்றார்.

யுத்த களத்திலிருந்து விலகியதால் அனைவரது கவனத்திலிருந்தும் சிறிது காலம் விலகியிருந்த இவர் ஐ.தே.க. ஊடாக அரசியலில் களமிறங்கியதால் மீண்டும் புகழ்பெறத் தொடங்கினார். வடக்கில் யுத்த வெற்றிகளால் அரசியல் லாபங்களை அரசு சம்பாதித்து வருகையில் அதற்கு இணையாக முன்னாள் யுத்த தளபதியை ஐ.தே.க. களமிறக்கியதால் அக்கட்சிக்கும் ஆதரவு பெருகியது.

உட்கட்சிப்பூசல், தலைமைக்கான போட்டியென பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவினதும் நடிகர் ரஞ்சன் ராமநாயக்காவினதும் வருகை பெரும் பலமூட்டியது. கட்சிக்குள் மீண்டும் தனது பிடியை வலுப்படுத்த இது ரணிலுக்கு வழிவகுத்தது.

அவருடன் முட்டி மோதியவர்கள் எட்டி ஒதுங்கிய அதேநேரம் இது ஆளும் தரப்புக்குப் பலத்த நெருக்கடியைக் கொடுத்தது. ஜானக பெரேராவின் வருகை யுத்த விரும்பிகளை ஐ.தே.க. பக்கம் திசைதிருப்பத் தொடங்கியது. இந்த நிலையில் தான் இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மூலம் இவர் கொலையுண்டதால் உடனடியாகவே இவரை விடுதலைப் புலிகளே கொன்று விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், இதனை ஏற்றுக்கொள்ள ஐ.தே.க. தயாரில்லை. அரசே இவரைக் கொன்றதாக அவர்கள் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருவதுடன் அதற்கான காரணங்களையும் முன்வைக்கின்றனர்.

இந்தக் காரணங்கள் தென்பகுதி மக்களிடையே பெரும் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. புலிகளாலும் இலக்கு வைக்கப்படக்கூடியவருக்கு வேறு எவராவது இலக்கு வைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் இன்று வலுப்பட்டு வருகிறது. இதற்கேற்ப எதிர்க்கட்சிகள் மேலும் மேலும் அரசு மீது குற்றஞ் சுமத்தி வருகின்றன.

இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலென்பது விடுதலைப் புலிகளால் மட்டுமே மேற்கொள்ளப்படுவது. எனினும், இவ்வாறானதொரு தாக்குதலுக்குக்கூட விடுதலைப் புலிகளை விடுத்து அரசு மீதும் குற்றஞ்சாட்டுமளவுக்கு எதிர்க்கட்சிகளைத் தள்ளியுள்ளதென்றால் அதற்கு என்ன காரணமிருக்குமென்ற கேள்வியும் எழுகிறது.

விடுதலைப் புலிகளுடனிருந்து பிரிந்த கருணா, புலிகளுடனிருந்த காலத்தில் பல தற்கொலைக் குண்டுத் தாக்குதலை வழிநடத்தியவரென்பதால் அரசு அவரது அல்லது பிள்ளையானது உதவியுடன் இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்கலாமென்பது ஐ.தே.க.வின் வாதம்.

அதற்கேற்பவே அவர்களும் பெரும் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதால் தென்பகுதி மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் அநுராதபுரத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு முதல்நாள்தான் அங்கு இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சரத்பொன்சேகாவும் பல சிரேஷ்ட படைத் தளபதிகளும் வந்து சென்றதால் அநுராதபுரம் முழுவதும் சல்லடை போடப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதால் அநுராதபுரத்திற்கு எந்த வழியாலும் புலிகளால் நுழைந்திருக்க முடியாதென்பதும் அந்தக் கட்சியினரது வாதம்.

சம்பவம் நடைபெற்ற பகுதி நகருக்குள்ளிருந்தாலும் அது சற்று ஒதுக்குப் புறமாயிருப்பதால் அந்த இடதிற்கு சந்தேகமின்றி விடுதலைப் புலிகளால் நுழைவதென்பது சாத்தியப்படாத ஒன்றெனவும் அத்துடன் தற்கொலைக் குண்டுதாரி ஊனமுற்ற ஒருவரென்பதால் அவரை எல்லோரும் சுலபமாக அடையாளம் கண்டுவிடுவரென்பதால் புலிகள் அவ்வாறான ஒருவரை இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்க மாட்டார்களெனவும் ஐ.தே.க.கூறுகிறது. தற்கொலைக் குண்டுதாரி எவரென்றாலும் ஜெனரல் ஜானக பெரேராவை இலக்கு வைப்பது மிகவும் சுலபமாயிருந்தது. அவரது பாதுகாப்பு மிக மிகக் குறைவாகவேயிருந்தது.

பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலுள்ள ஒருவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாததால் அவரை எவருமே மிக இலகுவாக நெருங்கக் கூடியதாயிருந்தது. இதனால் தற்கொலை குண்டுதாரியாலும் அன்றைய தினம் இவரை மிக இலகுவாக நெருங்க முடிந்துள்ளது.

அதேநேரம், அந்தத் தற்கொலைக் குண்டுதாரி அங்கு நீண்டநேரம் இருந்து திறப்புவிழாவின் பின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே ஜானக பெரேராவை நெருங்கியுள்ளார்.

குண்டுவெடிக்கும் வரை அவர் சந்தேகத்திற்கிடமின்றி இருந்துள்ளாரென்றால் அவர் புலிகளாக இருப்பதற்கு வாய்ப்பில்லையென்பதே ஐ.தே.க.வினரின் வாதம்.

இலக்கு எப்படியாவது அழிக்கப்படவேண்டுமென்பதில் தற்கொலைக் குண்டுதாரியை அங்கு அனுப்பியவர்கள் குறியாக இருந்துள்ளனர்.

(தொடர்ச்சி பாதுகாப்பு நிலைவரம் பக்கம் பார்க்க)


விதுரன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..