|
விடுதலைப் புலிகளை கிழக்கில் இருந்து அகற்றி அதனை முற்றாக மீட்டுவிட்டதாக சிறீலங்கா கேக் வெட்டி பெரும் கொண்டாட்டங்களை நடத்தி முடித்துவிட்ட நிலையில்,
தற்போது கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சிறீலங்காவின் கிழக்கின் உதயம் பிரச்சாரத் திட்டத்தை நொருக்கும் வகையில் கிழக்கில் விடுதலைப் புலிகளின் உதயம் அதிகரித்துள்ளது.
தினந்தோறும் நடைபெறும் தாக்குதல்களால் சிறீலங்கா அரச படைகளும் அதன் துணை இராணுவக் குழுக்களும் பெரும் இழப்புக்களைச் சந்தித்து வருவதால் அச்சமடைந்துள்ளன. இந்நிலையில், சிறீலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ‘த பொட்டம்லைன்' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களால் வன்னியில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் படையினர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம் என்றும் அந்த இதழ் கூறியுள்ளது.
இனி கிழக்கில் கடந்த வாரம் இடம்பெற்ற சில தாக்குதல் சம்பவங்கள்...
- மட்டக்களப்பு கிளிவெட்டியிலுள்ள பிள்ளையான் துணை இராணுவக் குழு அலுவலகம் மீது கைக்குண்டு வீசப்பட்டதில், ஒருவர் பலியானதோடு, எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் சந்திரன் (வயது 18), ரி. கணேசன் (வயது 20), வி. அச்சுதன் (வயது 19) ஆகிய மூவரும் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதலையடுத்து அப்பகுதிக்கு செல்லும் சந்திவெளி வாவியினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் திகிலிவெட்டை பகுதி இராணுவத்தினராலும் பிள்ளையான் குழுவினராலும் சுற்றிவளைக்கப்பட்டு நீண்டநேரம் தேடுதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
- மட்டக்களப்பு, திகிலிவெட்டை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து அமைத்திருந்த மினி முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் காயங்களுடன் தப்பியோடி விட்டனர். ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட திகிலிவெட்டைப் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவினரும் மினி முகாம் அமைத்திருந்தனர்.
இம்முகாம் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர். முகாமை தமது கட்டுப்பாட்டில் 15 நிமிடம் வரை வைத்திருந்த விடுதலைப் புலிகள் அங்கிருந்தவற்றினை முழுமையாக அழித்துள்ளனர். இத்தாக்குதலின் போது சிறீலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர்.
இதில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்: பிகே எல்எம்ஜி - 01, ரி-56 ரக துப்பாக்கிகள் - 05, பிகே ரம் ரவைக்கூடு - 01, பிகே எல்எம்ஜி ரவைகள் - 100, ஏகே ரவைக்கூடு - 09, ஏகே ரவைகள் - 200, கோல்சர் - 01 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் பகுதியில் சிறீலங்கா படையினரின் காவலரண் மீது விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது, கந்தளாய் பிரதேசத்துக்குட்பட்ட சேரநாவ பகுதியில் சிறீலங்கா படையினரும் ஊர்காவல் படையினரும் சேர்ந்து அமைத்திருந்த காவலரண் மீது 29ம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணியளவில் விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் காவலரண் முற்றாக தாக்கியழிக்கப்பட்டது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். படையினரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி - 01, அதற்குரிய ரவைகள் - 30, சொட்கண் - 01 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காவலரணானது அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- மட்டக்களப்பில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பின் மேற்குப் பகுதி பட்டிப்பளை அரசடித்தீவில் திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த சனத் (20) என்பவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த சனத், மகிழடித்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
- மணலாற்று களமுனையில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட ஆறுமுனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். ‘லோ' உட்பட்ட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மணலாறு களமுனையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் பெருமெடுப்பில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் ஆறுமுனைகளில் சிறீலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர். இம்முன்னகர்வுகளுக்கு எதிராக செறிவான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர். இம்முறியடிப்புத் தாக்குதல்களையடுத்து இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கினர். படையினரிடமிருந்து டாங்கி எதிர்ப்பு படைக்கலமான லோ-01 உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நெருடல் இணையம்
|