|
ஆயுதங்கள் வைத்திருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை சிவில் பாதுகாப்புப் படையில் இணையுமாறு அந்த அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கருணா அறிவித்துள்ளார்.
“சிவில் பாதுகாப்பு படையில் இணையுங்கள்; அல்லது ஆயுதங்களைக் கைவிட்டு வீடு செல்லுங்கள்’’ என்று கருணா தெரிவித்திருப்பதாக, கொழும்பு சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமது உறுப்பினர்களை சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமக்கு அனுமதி வழங்கியிருப்பதாக சண்டே டைம்ஸ் பத்திரிகையிடம் அவர் தெரிவித்திருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இன்னமும் ஆயுதங்களுடன் நடமாடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்பாக தென்னிலங்கை உட்பட ஏனைய இடங்களில் வெளியிடப்பட்டுவரும் சந்தேகங்களுக்குத் தீர்வு காண்பதற்காக இந்த முடிவு எடுக்க்பபட்டிருப்பதாகவும் கருணாவை மேற்கோள் காட்டி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து எழக்கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து அவர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதுடன், ஒரு சட்டபூர்வ அமைப்பில் அவர் பணியாற்றவும் முடியும் என்றும் அவர் அந்தப் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
“அதன்பின்னர் அவர்கள் தமது அர்ப்பணிப்பையும், ஒழுங்கையும் வெளிப்படுத்துவதுடன், ஜனநாயக நெறிமுறைகளின்படி அரசாங்கத்துக்குப் பணியாற்றமுடியும்’’ என்று கருணா அந்தப் பத்திரிகையிடம் தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஜானக பெரேராவுக்கே பாதுகாப்பில்லை - இனியபாரதி
இதேவேளை, தற்போதைய பாதுகாப்புச் சூழ்நிலைமையைக் கருத்தில் கொண்டு தாம் ஒருபோதும் ஆயுதங்களைக் கைவிடமுடியாதிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் இனியபாரதி தெரிவித்திருப்பதாக கொழும்பு சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
“ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவுக்கே போதிய பாதுகாப்பு வழங்கப்பட முடியாமலிருக்கிறது. இந்த நிலையில் நாம் ஆயுதங்களைக் கைவிட்டால் எமது பாதுகாப்பை யார் உத்தரவாதப்படுத்துவது?’’ என்று அவர் கேள்வி எழுப்பியதாக சண்டே லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் தமது அமைப்பின் அரசியல் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளதாகவும், கிழக்கு அபிவிருத்திக்காக இணைந்து பணியாற்றுவதற்கு கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் இது ஒரு சந்தர்ப்பம் என்றும் இனியபாரதி தெரிவித்ததாக சண்டே லீடர் செய்தி மேலும் குறிப்பிடுகிறது.
நெருடல் இணையம்
|