|
தப்புக் கணக்கு
சிங்களப் பிள்ளையள் கொடுக்கிற புலிச் சாவுக் கணக்கைப் பார்த்து உலகமும் ஒரு நாள் சிரிக்கும் எண்டது சரியாய்தான் போச்சுது. நாளுக்கு நாள் இவை கொல்லுற புலியளின்ரை சாவுக் கணக்கை பார்த்து சந்தோசப்பட்டவையும் இப்ப சலிப்படைஞ்சு போயிருக்கினம். சொன்ன கணக்குக்கு இப்ப புலியள் மட்டுமில்லை, தமிழரும் ஒட்டு மொத்தமாய் அழிஞ்சு போயிருக்க வேணும் எண்டதுதான் அவையளின்ரை கணக்கு.
இதிலை பிரபல சர்வதேச ஊடகமொன்று சரியாய்தான் அதிர்ச்சியடைஞ்சிருக்குது.
இவையள் சொல்லுற புலி அழிப்புக் கணக்கை நாளுக்கு நாள் போட்டு கூட்டிக்கொண்டு வந்த அந்த ஊடகம், இப்ப கூட்டின கணக்குத் தொகையைப் பார்த்து மிரண்டுபோய் நிக்குது. கடந்த ஜனவரியிலை இருந்து இவையள் கொன்ற புலியளின்ரை கணக்கு மட்டும் ஏழாயிரத்தை கடந்து நிக்குதெண்டு அந்த ஊடகம் சொல்லுது. இப்ப சிங்கள பாதுகாப்பு அமைச்சு வெளியிடுகிற புலியழிப்புக் கணக்கை அந்த ஊடகம் ஒரு நகைச்சுவையாய் தன்ரை செய்தியின்ரை கடைசியிலை சேர்த்துக்கொண்டு வருகுது.
அதாவது அவை சொல்லுற தொகைக்கு ஏற்ப தன்ரை கணக்கை அது கூட்டிக்கூட்டி பதிஞ்சுகொண்டு வருகுது. இந்தத் தொகை உலகத் தமிழரின் தொகையைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. சிங்கள அரசும் இராணுவமும் சொல்லுறதை கிளிப்பிள்ளையாட்டம் சர்வதேசத்திற்கு மொழிபெயர்த்து சொல்லிக்கொண்டுவந்த சில ஊடகங்களுக்கும் இவையளின்ரை கணக்கு இப்ப புளிச்சுப் போச்சுது.
இப்ப இவை சொல்லுற கணக்கை நம்ப முடியேலையெண்டும் வாய்விட்டுச் சொல்லவும் வெளிக்கிட்டுவிட்டினம்.
அதுசரி, ஒருத்தனை ஒரு நாளைக்கு ஏமாத்தலாம், பலரைப் பலநாள் எப்படி ஏமாத்திறது?
ஓட்டம் கூடப்போகுது
நாச்சிக்குடாவைப் பிடிச்சிட்டம், அக்கராயனிலை புலியைக் கலைச்சிட்டம், கிளிநொச்சியிலை கொடியை ஏத்தப்போறம் எண்டு நாளுக்கு நாள் அறிக்கை வெளியிடுகினம் சிறீலங்காக்காரர். தலையாலை கிடங்கு கிண்டியாவுதல் கிளிநொச்சியை எட்டித் தொட்டுப்போடவேணும் எண்டு உயிர்ப் பலி கொடுத்தும் படாதபாடு படுகினம். ஆனால் ஓணான் ஓட்டம் எவ்வளவு தூரத்திற்குப் புலியள் ஏன் இன்னும் பொறுமை காக்கினம் எண்டதை கொஞ்சம் நிண்டு நிதானமாய் யோசிச்சினமெண்டால் வில்லங்கங்கள் தலைக்கு வராதெண்டதுதான் ஆய்வாளர்களின்ரை கருத்து.
இன்னும் இன்னும் இடம்பிடிச்சுக்கொண்டு போறது ஆபத்து. திரும்பி ஓடப்போற தூரம் சிங்களப் பிள்ளையளுக்கு கூடப்போகுதெண்டதுதான் சிங்களத்தை நேசிக்கிறவையின்ரை அட்வைசாய் இருக்குது. ஜெயசிக்குறுவிலை வழிகாட்டின ரத்வத்தை கூட்டம் தப்பி இண்டைக்கும் உயிர் வாழுது. ஆனால் அவையளை நம்பி மாங்குளம் வரைக்கும் கால் வைச்ச அப்புஹாமிக்காரர்தான் கட்டையிலை போனதும் கை, கால் கழண்டுபோனதும் வரலாறு. இப்ப பொன்சேகாவின்ரையும் கோத்தபாயவின்ரையும் அட்வைசைக் கேட்டுக்கொண்டு, விசயம் தெரியாமல் காலை நல்லாய் உள்ளுக்கை விடுகினம்.
கோத்தபாயவும், பொன்சேகாவும் நாளைக்கு அமெரிக்காவுக்கு ஓடிப்போய் ஓய்வெடுத்துப் போடுவினம். கால் வைச்சவையின்ரை கதைதான் கந்தலாய்ப் போகும். உப்பைத் தின்றால் தண்ணி குடிக்கத்தான் வேணும், தப்பை செய்தால் தண்டனை அனுபவிக்கத்தானே வேணும்.
அதுசரி, விட்டில் பூச்சியாட்டாம் நெருப்புக்குள்ளை தலையைக் கொடுத்தால் வேறை என்ன வழி. சுருண்டு விழந்து உயிரை விடத்தானே வேணும்.
பிச்சைக்காரக் குண்டுகள்
சிறீலங்காவின்ரை பஸ்சுகளுக்கை குண்டுகள் வெடிக்கிற தொல்லையை விட, பிச்சைக்காரர்களின் தொல்லை பெரும் தொல்லையெண்டு கவலைப்படுகினமாம் பயணிகள். பயணிகளை விட இப்ப பஸ்சுக்குள்ளை பிச்சைக்காரர்கள்தானாம் சந்திக்கு சந்தி நிண்டு அதிகம் ஏறுகினம். போக வர விடுகினம் இல்லை, நிம்மதியாய் பயணம் செய்ய முடியேலையெண்டு பயணிகள் ரொம்பக் கவலைப்படுகினமாம்.
சிலர் கைக்குழந்தைகளுடனும், பிள்ளைகளுடனும் குடும்பமாக பஸ்களில் ஏறி பிச்சை கேக்கினமாம். மாத்தறை, காலி பகுதிகளில் இருந்து கொழும்பு மற்றும் தூர இடங்களுக்கு போற பஸ்களிலை தானாம் பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகளவுக்கு காணப்படுகுதாம். தொடருந்துகளிலை ஏறுறதுக்கு தடை விதிக்கப்பட்டதாலை பஸ்களிலை ஏறுகினம், இதையும் தடுக்க வேணும் எண்டும் பயணிகள் முறைப்பாடு செய்கினமாம். தமிழரை அழிக்கிறதுக்கெண்டு நாட்டுக்கு நாடு கடன்களை வாங்கி, சிங்கள மக்கள் எல்லாரையும் கடன்காரராக்கினது மட்டுமில்லை, பிச்சைக்காரராயும்தான் சிறீலங்கா அரசு ஆக்கியிருக்குது.
இதிலை பஸ்சிலை எடுக்கிறவை வெளிப்படையான பிச்சைக்காரர், மற்றவை வெளியிலை தெரியாத பிச்சைக்காரர்கள் அவ்வளவுதான். இப்ப அவையள் பிச்சைக்காரராய் மாறியிருக்கினம், சிறீலங்கா அரசு இப்படியோ போனால் இன்னும் கொஞ்ச நாளிலை ஒட்டுமொத்த சிங்களவரும் பிச்சைதான் எடுக்கவேணும். ஆனால் அப்ப யார் யாரிட்டை பிச்சையெடுக்கிறது எண்டதுதான் பிரச்சனை.
அதுசரி, பேய் நாட்டை ஆண்டால் பிணங்களைத்தானே தின்னவேணும்.
கனவும், கற்பனையும்
கோழிக்கு கனவிலையும் ஏதோ சிந்தனையாம். சிங்கள இனவாதியளுக்கும் கனவிலை மட்டுமில்லை கற்பனையிலையும் தமிழரை சாவடிக்கிறதும், தமிழற்றை மண்ணைப் பறிக்கிறதும்தானே சிந்தனை. அது இராணுவத் தளபதியாய் இருந்தாலென்ன, பௌத்த மதத் தலைவராய் இருந்தலென்ன. எல்லாருக்கும் அதுதான் சிந்தனை, அதுதான் கனவு.
அந்தக் கனவைத்தான் சிறீலங்கா இராணுவத் தளபதியும் சொல்லியிருக்கிறார். போன கிழமைதான் வரலாறு தெரியாத தளர்பதியெண்டு சரத் பொன்சேகாவைச் சொன்ன ஞாபகம். அதற்கிடையிலை திரும்பவும் அதை அவர் நிரூபித்திருக்கிறார். இலங்கை சிங்களவருக்கு மட்டும்தான் சொந்தமானது என தமிழரெண்டால் நஞ்சைக் கக்குகிற "கனடா நஷனல்" போஸ்ட் சஞ்சிகைக்கு சொல்லியிருக்கிறார்.
சிறீலங்கா எள் எண்டால், தமிழருக்கு எதிராய் எண்ணையாய் நிக்கிற நசனல் போஸ்ட் அவர் சொன்னதை ஊதிப் பெருசாக்கிவிட, சிறீலங்காவின்ரை எதிர்க்கட்சிக்காரருக்கும் கடுப்பேறிப்போச்சுது. ஒட்டுமொத்த தமிழரையும் அழிக்காமல், அதுக்கிடையிலை அவசரப்பட்டு சொல்லிப்போட்டார் எண்டோ என்னவோ. கடும் சினம்கொண்டு அவையும் கருத்து வெளியிட்டிருக்கினம். அவர் சொன்னதுக்காக இல்லை, இந்தக் காலத்திலை இதைச் சொன்னதுக்காக.
அதுசரி, அப்பன் புளி தின்றால், பிள்ளைக்கு என்ன பல் கூசுமா?
நன்றி: ஈழமுரசு
|