|
வன்னிக்கான இரண்டாவது தொகுதி உணவுப் பொருள்களை ஏற்றிச்சென்ற லொறிகள் பாதை சீரின்மையால் நடுவழியில் இடைநிறுத்தப்பட்டன.
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு 20 லொறிகள் மாங்குளம், ஒட்டுசுட்டான் பாதையூடாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை நோக்கி நேற்றுத் திங்கட்கிழமை புறப்பட்டிருந்தன.
இந்த வாகனத் தொடணி புளியங்குளம் பகுதியில் பாலமொன்றைக் கடக்க முற்பட்டபோது பாலத்தில் சேதம் ஏற்பட்டதால் வாகனங்கள் இடைவழியில் தரித்துநிற்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
வவுனியாவிலிருந்து புறப்பட்ட வாகனத் தொடரணியுடன் சென்ற அரசாங்க அதிபர் அலுவலகத்தைச் சேர்ந்த வாகனங்களும், உணவுப் பொருள்கள் ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகளும் பாலத்தைக் கடந்ததும், பாலம் இடிந்து வீழ்ந்ததாகவும், பாலம் வீழ்ந்தபோது அதனுடன் சேர்ந்து உணவுப் பொருள் ஏற்றப்பட்ட லொறியொன்றும் வீழ்ந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை காலமும் ஏ-9 வீதியூடாக உணவுப் பொருள்கள் அனுப்பப்பட்ட போதும், கடந்த மாதம் இரண்டாம் வாரத்தின் பின்னர் புளியங்குளம்-மாங்குளம், ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்பு ஊடான பாதைகளைப் பயன்படுத்தியே வன்னிக்கு உணவுப் பொருள்கள் அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் புளியங்குளம்-நெடுங்கேணி-ஒட்டுசுட்டான் ஊடான வீதியால் லொறிகளை அனுப்புமாறு கடந்த வாரம் இராணுவத்தினர், கிளிநொச்சி அரசாங்க அதிபர் அலுவலகத்துக்கு அறிவித்திருந்தனர்.
எனினும், இந்தப் பாதையூடாக உணவுப் பொருள்களை எடுத்துச்செல்ல உலக உணவுத் திட்டம் பின்னடித்தபோதும், அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய அவசர அவசரமாக 20 லொறிகளில் உணவுப் பொருள்கள் வன்னிக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ் பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறியிருந்தார்.
பாலம் திருத்தப்பட்ட பின்னரே வன்னிக்கான உணவுப் பொருள்கள் ஏற்றப்பட்ட வாகனத் தொடரணி தொடர்ந்தும் பயணிக்கும் எனத் தெரியவருகிறது.
நெருடல் இணையம்
|