பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow எவர் ஜனாதிபதியாக வந்தாலும் ...
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

எவர் ஜனாதிபதியாக வந்தாலும் ... அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 October 2005

எவர் ஜனாதிபதியாக வந்தாலும் சமாதானமோ பொருளாதார சுபிட்சமோ ஏற்படப் போவதில்லை'கடந்த இருபத்தியேழு வருட கால நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் கீழ் இந்த நாடு எதிர்நோக்கிய எந்தவொரு பாரிய பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை. இன்றைய பிரதான பிரச்சினையான யுத்தமாக்கப்பட்ட தேசிய இனப் பிரச்சினைக்கோ அன்றி மக்கள் அனைவரும் எதிர்நோக்கி நிற்கும் அன்றாட வாழ்வுக்குரிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கோ உரிய தீர்வும் பரிகாரங்களும் தேடப்படவில்லை. இத்தனைக்கும் தொடர்ந்து ஜனாதிபதிக் கதிரையில் இருந்து ஆட்சி அதிகாரம் புரிந்து வந்த கட்சிகளே இன்றும் போட்டியில் இறங்கி நிற்கும் இரண்டு பிரதான கட்சிகளாகும். ஆட்கள் மாற்றப்பட்டு நிற்கிறார்களே தவிர, கட்சிகளும் கொள்கைகளும் கடந்த காலத்தின் தொடர்ச்சியாகவே உள்ளன.

இத்தகைய இரண்டு பிரதான கட்சிகளில் இருந்து எவர் ஜனாதிபதிப் பதவிக்கு வந்தாலும் மக்கள் எதிர்பார்க்கும் சமாதானமோ, ஜனநாயக வாழ்வுக்குரிய சூழலோ அன்றி பொருளாதார சுபிட்சமோ வந்து விடப் போவதில்லை. தொடர்ந்தும் இருபத்தியேழு வருடகால ஆட்சி அதிகாரப் பாதையில் தான் நாடு இழுத்துச் செல்லப்படும். இந்த உண்மை நிலைக்கு அப்பால் இக் கரைக்கு அக்கரை பச்சை என நம்பி மாறி மாறிப் புள்ளடி போட்டு ஏமாந்து வந்த அதே பாதையில் செல்வதால் நாட்டிற்கோ, மக்களுக்கோ ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கோ எவ்வித விடிவும் விமோசனமும் வந்து விடப்போவதில்லை. இதற்குரிய ஒரே மாற்று வழி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினையும் அதன் ஊடாக சமாதானத்தைச் சீர்குலைத்து யுத்தத்தை முன்னெடுத்து ஜனநாயக வாழ்வைச் சிதைத்து அந்நிய ஆதிக்க சக்திகளுக்கு நாட்டைத் தாரை வார்த்த இன்றைய அரசியலமைப்பையும் முற்றுமுழுதாக மாற்றி மக்களுக்குரிய அரசியலமைப்பாக மாற்றுமாறு கோரி மக்கள் எழுச்சி கொள்வதற்கு முன் வருவதேயாகும்.

மறைந்த பொதுவுடைமைவாதியும் மக்கள் சேவையாளனுமான சி. நவரட்ணத்தின் (நவம்) முதலாம் ஆண்டு நினைவு தினக் கூட்டம் கடந்த ஞாயிறன்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றபோது "இன்றைய சூழலில் சமாதானமும் ஜனநாயகமும்" என்னும் தலைப்பில் நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது புதிய - ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் கூறினார்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ.தம்பையா தலைமையில் நடைபெற்ற மேற்படி நினைவு தினக் கூட்டத்தில் செந்திவேல் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

இந்த நாட்டில் வயது வந்த அனைவருக்கும் 1931 ஆம் ஆண்டு வாக்களிக்கும் உரிமையாக சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. இரண்டு சட்டசபைகளுக்கு மக்கள் வாக்களித்தனர். 1947 இல் முதலாவது பாராளுமன்றத்திற்கு வாக்களித்தனர். இதுவரை பதின்மூன்று பாராளுமன்றத் தேர்தல்களில் மக்கள் வாக்களித்தனர். 1978 ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்று ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நான்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து வந்துள்ளனர். எதிர்வரும் தேர்தல் ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தலாகும். வாக்களிக்கும் தகுதிக்கான தற்போதைய வயதெல்லை பதினெட்டாகும். அவ்வாறு பார்க்கும் போது, இலங்கையின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்கின்றனர். இவ்விடத்திலே நாம் எழுப்பக் கூடிய மிக முக்கிய கேள்வி, ஜனநாயகம், சுதந்திரம் என்ற மகுடத்தின் கீழ் இடம் பெற்ற தேர்தல்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் வர்க்க தலைமைத்துவங்களாலும் இந்நாட்டின் எந்தவொரு பிரச்சினையாவது தீர்க்கப்பட்டதா? என்பதேயாகும். இது ஏன் என்பது அரசியல் ரீதியில் சிந்திக்கப்படாத வரை மக்கள் செக்கிழுத்த ஒரே பாதையில் பிரச்சினைகள், நெருக்கடிகள், யுத்தம் என்பனவற்றை அனுபவித்து துன்ப துயரங்களில் மூழ்கிச் செல்ல வேண்டியது தான்.

இந் நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் கீழ்தான் பேரினவாத ஒடுக்குமுறை யுத்தமாக வடக்கு, கிழக்கின் மீது திணிக்கப்பட்டது. அதனைத் தொடக்கி வைத்ததே ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் ஜனாதிபதியுமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவாகும். 17 வருட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் சமாதானமும் ஜனநாயகமும் சிதைத்து சின்னாபின்னப்படுத்தப்பட்டது. அதன் பின் பதவிக்கு வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதி சந்திரிகாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாதையிலேயே யுத்தத்தை முன்னெடுத்தனர். `சமாதானத்திற்கான யுத்தம்' என்ற பெயரில் வெற்றி பெறாத யுத்தத்தால் மேலும் வடக்கு, கிழக்கும் தமிழ் மக்களும் அழிக்கப்பட்டனர். இதுவரை ஒரு இலட்சம் வரையன வடக்கு, கிழக்குத் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் யுத்தத்தால் கொன்றழிக்கப்பட்டுள்ளனர். அங்கே மட்டுமல்ல, 1988 - 89 காலப்பகுதியில் இன்று சுகபோகங்களுடன் பாராளுமன்ற பேரினவாத அரசியல் நடாத்திவரும் ஜே.வி.பி. தலைமையின் தவறான வழிகாட்டலால் அறுபதினாயிரத்திற்கு மேலான சிங்கள இளைஞர், யுவதிகள், மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் பொருளாதார நெருக்கடி, வேலை இன்மையின் விரக்தியாலேயே அவ்வாறு ஜே.வி.பி.யின் பின்னால் சென்று மடிந்தனர்.

இவ்வாறு ஒடுக்குமுறைகளையும் யுத்தத்தையும் கடந்த 27 வருடகால ஜனாதிபதி ஆட்சிமுறையே தலைமை தாங்கி முன்னெடுத்து வந்துள்ளது. அதே நேரம் தாராள மயம், தனியார் மயம் என்பவற்றை யுத்தத்தின் மறைவிலே கொண்டு வந்து நாட்டை மறுகொலனியாக்கிக் கொள்வதற்கு அமெரிக்க, மேற்குலக, ஜப்பானிய முதலாளித்துவ சக்திகளுக்கு இரண்டு பிரதான கட்சிகளும் ஆதரவும் அரவணைப்பும் கொடுத்தும் வந்துள்ளன. இரண்டு கட்சிகளின் ஆட்சிகளின் கீழ் இதுவரை நூறு வரையான அரசாங்க கூட்டுத்தாபன பொது நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பல்தேசியக் கம்பெனிகளுக்கு நாட்டின் பொருளாதாரம் இரையாக்கப்பட்டதுடன் மனித உழைப்பும் வளங்களும் கொள்ளையிட்டுச் செல்லப்பட வழிவகை காணப்பட்டது. மேல் கொத்மலை நீர்மின் திட்டமும் நுரைச்சோலை அனல் மின் திட்டமும் அழிவுதரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட உள்ளன.

சேது சமுத்திரத் திட்டத்தினால் ஏற்படப் போகின்ற அழிவுகள் பற்றி மௌனம் சாதிக்கப்படுகிறது. இந் நிலையில் அமெரிக்க, இந்திய ஆதிக்கப் போட்டி வலுவடைந்து கொண்டுள்ளது. இரண்டு பிரதான கட்சி வேட்பாளர்களின் பின்னாலும் அமெரிக்காவும் இந்தியாவும் இருந்து வருவதைக் காண முடிகிறது. இத்தகைய சூழலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த முகத்தோடு சென்று இவர்களில் ஒருவருக்கு வாக்களிக்க முடியும். எனவே, இந்த ஜனாதிபதித் தேர்தலை நிராகரிப்பதைத் தவிர, வேறு வழி இருக்க முடியாது என்பதே நியாயமான முடிவாக முடியும். இதனையே புதிய - ஜனநாயக கட்சி தீர்மானமாக வற்புறுத்துகின்றது. இக் கூட்டத்தில் தலைமையுரை நிகழ்த்திய சட்டத்தரணி இ.தம்பையா நாட்டில் சமாதானமும் ஜனநாயகமும் நிலை நிறுத்தப்பட வேண்டுமாயின், தேசிய இனப்பிரச்சினைக்கு சுய நிர்ணய உரிமை அடிப்படையில் சுயாட்சித் தீர்வு காணப்பட வேண்டும். அத்தகைய தீர்வுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷவோ அன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்காவோ தயாராக இல்லை. ரணில் சமஷ்டி பற்றி உச்சரிக்கிறாரே தவிர, அதன் விபரங்களைக் கூறத்தயாராக இல்லை. எனவே, சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் ஜனநாயகப் பண்புகளுடன் மக்கள் மயப்படுத்தப்படுவதுடன் முன்னெடுக்க வேண்டும். வெறுமனே அமெரிக்காவையோ அன்றி மேற்குலகத்தையோ நம்பி சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது.


thinakkural
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..