|
விடுதலைப் புலிகளை அவ்வளவு விரைவில் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க முடியாது என இந்திய மத்திய அரசாங்கம், இலங்கைக்குத் தெரிவித்துள்ளது.
அண்மையில் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும், ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷவிடம் இந்தச் செய்தியை இந்திய மத்திய அரசாங்கம் கூறியிருந்ததாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இந்தியத் தலைவர்கள் வலியுறுத்தாதபோதும், விடுதலைப் புலிகளை அவ்வளவு விரைவில் தோற்கடிக்க முடியாதெனக் கூறியுள்ளதாகத் தெரியவருகிறது.
புதுடில்லி சென்றிருந்த பசில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலேசாகர் எம்.கே. நாராயணன் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினையை சிறுபான்மையினருக்கு அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் தீர்க்கமுடியும் என்பதையும் புதுடில்லி வட்டாரங்கள், பசில் ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளன.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் உறுதியாக இருப்பதால் தற்பொழுது மூவினத்தவர்களும் வாழும் கிழக்கு மாகாணத்துக்கு விவசாயம், கல்வி, பொலிஸ் மற்றும் நிதி உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் முழு அளவில் பகிர்ந்தளிக்கும் வகையில் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பது பற்றி இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பசில் ராஜபக்ஷ இந்தியத் தலைவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.
கிழக்கு மாத்திரமன்றி சிறுபான்மை இனத்தவர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென இந்தியத் தலைவர்கள், பசில் ராஜபக்ஷவிடம் வலியுறுத்திக் கூறியதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அத்துடன், 13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டையும் புதுடில்லி தெரியப்படுத்தியுள்ளது.
அரசியல் ரீதியான தீர்வைத் தற்பொழுது தேடுவது விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கையைப் பாதித்துவிடுமெனவும், கிளிநொச்சி கைப்பற்றப்பட்டவுடன் அரசியல் தீர்வு உடனடியாக முன்வைக்கப்படுமெனவும் பசில் ராஜபக்ஷ, இந்தியத் தலைவர்களிடம் கூறியுள்ளார்.
அதேநேரம், பாதுகாப்பு எனும் பெயரில் கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் தமிழ் மக்கள் சிக்கல்களுக்கு உள்ளாவது குறித்து இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
நெருடல் இணையம்
|