பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow முடிவுக்கு வரப்போகும் நிழல் யுத்தம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

முடிவுக்கு வரப்போகும் நிழல் யுத்தம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 October 2005

சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான நாட்கள் அண்மித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் சிங்களப் படைப்புலனாய்வும், ஒட்டுப்படையும் தமிழ் மக்கள் மீதான தமது புலனாய்வு யுத்தத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். போர் நிறுத்தம் பலவீனப்பட்டு அது வலுவிழந்து, செயலிழந்து போவதற்கு ஒட்டுப்படைகளும் சிறிலங்கா புலனாய்வுப் படைப் பிரிவினருமே காரணம்.

எனவே தேசவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும். அத்துடன் வடக்குக் கிழக்கை விட்டு அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

இவ்விடயம் போர் நிறுத்த உடன்படிக்கையில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு முப்பது நாட்களுக்குள் இந்த நடவடிக்கை நடைபெற வேண்டும் எனவும் உடன்படிக்கை வலியுறுத்துகிறது.

ஆனால் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு மூன்றரை வருடங்களாகியும், இன்னும் அவை நடைமுறைக்குக் கொண்டு வராத அதேவேளை, தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதும் தமிழீழ விடுதலைப் போராளிகள் மீதும் தாக்குதல் நடத்துவது என்பது அரசு போர் நிறுத்த உடன்பாட்டை முழு அளவில் மீறி நிற்கின்றது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

நிழல் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதும், விடுதலைப்புலிகளைப் பொறுமையின் எல்லைக்குக் கொண்டு சென்றுள்ளது என்பன போன்ற விடயங்களை விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்துக்கும், சிறிலங்கா அரசுக்கும் பல முறை எடுத்துக் கூறியும் இதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

நாங்கள் எவ்வித ஆயுதக் குழுக்களையும் வைத்திருக்கவில்லை என அரச தரப்பும், படை அதிகாரிகளும் தெரிவித்தாலும் சிறிலங்கா அரசு ஆயுதக் குழுவொன்றை இயக்கி போர் நிறுத்த உடன்பாட்டைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது என்பதை சர்வதேச சமூகம் உணரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

 

ஏனெனில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் கடந்த மாதம் பொலநறுவை மாவட்டத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்த ஆயுதக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியதிலிருந்து இதை சர்வதேச சமூகம் அறியக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதியவர்கள் இவ்வாறான ஒரு ஆயுதக் குழுவை எங்கள் படை வைத்திருக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபால அவர்கள் ஒட்டுப்படைகள் என்ற ஒன்றில்லை. கருணாகுழுவே தாக்குதல் நடத்துகின்றது. அவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளே முகாமிட்டுள்ளதால் அவர்களது ஆயுதங்களைப் படைத்தரப்பினரால் களைய முடியாது என ஒரு போடு போட்டிருந்தார்.

இறுதியாக சிறிலங்காவின் படைத்தளபதி சாந்த கொட்டகொட அவர்கள் சிறிலங்காவின் இராணுவத்தின் 56ஆவது ஆண்டு நினைவை யொட்டி நடைபெற்ற நிகழ்வில் உரை நிகழ்த்துகையில் சிறிலங்காவின் அனைத்து துணைப்படைகளும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே களையப்பட்டு விட்டது.

அதேவேளை கருணா குழுவினருக்குப் பின்னால் சிறிலங்காப் படை புலனாய்வுத்துறை சம்பந்தப்படுகிறது என்ற குற்றாச்சாட்டையும் அவர் மறுத்திருந்தார். ஒட்டு மொத்தத்தில் தமிழர் தாயகம்மீது திணித்திருக்கும் நிழல் யுத்தத்திற்கு சிறிலங்கா அரசு பொறுப்பல்ல என்ற நிலைப்பாட்டிலுள்ளது.

அதேவேளை சாந்த கொட்டகொட தெரிவித்த அதேதினம் வவுணதீவில் நடைபெற்ற சம்பவமொன்றை பார்ப்போம். 2ம் லெப் மாலதியின் 18வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் கொக்கட்டிச்சோலை பொது மைதானத்தில் இரவு 11.00 மணி வரையும் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட விடுதலைப் புலிகள் கரடியனாறு நோக்கிச் சென்ற போது வவுணதீவு பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவியிருந்த சிறிலங்கா படைப்புலனாய்வு மற்றும் தேசவிரோதக் கும்பல்கள் விடுதலைப்புலிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். பதில் நடவடிக்கையில் இறங்கிய விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி கும்பலை துரத்திச் சென்ற போது அவர்கள் வவுணதீவு படை முகாமிற்குள் சென்று ஒழிந்து கொண்டனர்.

இந்த நேரத்தில் மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானுவுடன் தொடர்பு கொண்ட போராளிகள் அடுத்த நடவடிக்கை பற்றிக் கேட்டபோது:-

உடனடியாக திரும்பி வருமாறு உத்தரவிட்டிருந்தார். போர் நிறுத்தத்தை முறையாகக் கடைப்பிடித்து வரும் விடுதலைப்புலிகள் அதனை மதிக்கும் வகையில் அந்த இடத்திலிருந்து திரும்புமாறு கட்டளைத் தளபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் பேரினவாத ஊடகங்கள் சில மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு இந்தத் தாக்குதலில் உயிரிழந்து விட்டதான ஒரு செய்தியை பரப்பி மக்களிடையே குழப்பத்தையுருவாக்க முனைந்த போதும் பின்னர் உண்மை நிலைகள் தெளிவுபடுத்தப்பட்டன.

இச்சம்பவம் நடைபெற்ற மறுநாள் மயிலவட்டவான் சிவத்தப்பாலத்தில் படைப்புலனாய்வுப் பிரிவு மற்றும் ஒட்டுப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் தமிழீழ தேசிய துணைப் படை வீரர் ஒருவர் வீரச்சாவடைந்தார். தாக்குதலை நடத்திய கும்பலை விடுதலைப்புலிகள் துரத்திச் சென்ற போது அவர்கள் மாவடிவேம்பு படை முகாமிற்குள் புகுந்து கொண்டனர். இந்த இரு சம்பவங்களையும் சாந்த கொட்டகொட சொன்ன கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது அவர் எவ்வளவு கச்சிதமாக பொய் கூறுகிறார் என்பது.

சிறிலங்கா அரசு தொடுத்திருக்கும் புலனாய்வு யுத்தம் மூலம் விடுதலைப்புலிகளைப் பலவீனப்படுத்தவோ அல்லது வெற்றி கொள்வது என்பதோ முடியாத காரியம்.

ஏனெனில் "பலவீனம் என் து விடுதலைப் புலிகளது வரலாற்றில் இல்லை" இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் கடந்த கால போரியல் வரலாற்றை நினைவூட்டிப் பார்ப்பதன் மூலம் தெளிவாக உணர முடியும். அத்துடன் ஒட்டுப்படைகளை நீண்ட காலமாக சிங்கள அரசு தமது துணையாக வைத்து விடுதலைப் புலிகள் மீது தாக்குதலை, நெருக்கடிகளை ஏற்படுத்த முனைந்து வந்திருக்கின்றனர் இது வரலாறு.

இவை எல்லாவற்றையும் முறியடித்தே விடுதலைப் போராட்டம் இன்று உன்னத நிலை அடைந்திருக்கிறது. மாற்று இயக்கங்கள் விடுதலைப் போராட்டம் என்று குதித்து தமது இலட்சியத்தைக் கைவிட்டு தேசவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட போது விடுதலைப்புலிகள் அவர்களை நிராயுதபாணிகளாக்கி தடைசெய்தனர்.

இந்தச் சூழலில் அவர்கள் சிங்களப் படை தரப்புடன் இணைந்து தமிழ்த் தேசியத்துக்கு எதிரான துரோகத் தனங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்திய இலங்கை ஒப்பந்தத்தையடுத்து இந்திய புலனாய்வு அமைப்பான "றோ" வடக்குக் கிழக்கில் தமிழ் இளைஞர்களை பல வந்தமாகப் பிடித்து கட்டாய பயிற்சி அளித்தது. தமிழ்த் தேசிய இராணுவம் என்ற பெயரில் ஒரு ஆயுத அணியை உருவாக்கியது.

இந்திய இராணுவம் வெளியேறியதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இவர்களது ஆயுதங்களைக் களைந்து நிராயுதபாணிகளாக்கினர், இவர்கள் விடுதலைப்புலிகளை எதிர்த்து சண்டையிட முடியவில்லை.

இதன் பின்னர் கூட சிறிலங்கா அரசு ராசிக்குழு, வரதன் குழு, புளொட் மோகன் குழு என பல ஆயுதக் குழுக்களை கிழக்கில் உருவாக்கியது. இவ்வாறான குழுக்களின் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரச படைப் புலனாய்வுப் பிரிவு வழிநடத்திய போதும் இறுதியில் அக்குழுக்கள் இருந்த இடமேயில்லை.

ராசிக், வரதன், புளொட் மோகன் என அந்தக் குழுக்களை வழிநடத்தியவர்கள் இன்று உயிருடன் இல்லை என்பது வரலாறு தெளிவுபடுத்தும் உண்மை.

தற்போது சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரது இலக்கு தமிழ் மக்களுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்துவதாகும். மக்கள் வேறு புலிகள் வேறல்ல. மக்களே புலிகள், புலிகளே மக்கள் என்று பிரித்துப் பார்க்கமுடியாதளவிற்கு இறுக்கமடைந்திருக்கும் நிலையில், ஒட்டுப்படைகள் மற்றும் படைப்புலனாய்வு பிரிவினர் மூலம் தாக்குதலை நடத்துவதன் ஊடாக விடுதலைப் புலிகளுடனான மக்களின் நெருக்கத்தைப் பலவீனப்படுத்துவதும் இவர்களது நோக்கமாக இருக்கலாம்.

இந்நிலையில் போர் நிறுத்தம் பலவீனப்படுவதற்கும், இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலுக்கும் நிழல்யுத்தமே காரணம் என விடுதலைப் புலிகள் திரும்பத்திரும்பக் கூறிய போதும் அரசோ அல்லது சர்வதேச சமூகமோ அதுதொடர்பாக அக்கறை எடுக்காது இருக்கும் நிலையில், நிழல்யுத்தம் தொடர்வதையோ அல்லது படைப்புலனாய்வு மற்றும் ஒட்டுப் படைகளின் தேசவிரோத நடவடிக்கைகள் தாயகத்தில் அதிகரித்துச் செல்வதையோ இனியும் விடுதலைப் புலிகள் விரும்பமாட்டார்கள்.

விரைவாக புலனாய்வு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் அவர்கள் இனித் தீவிரமாக இறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழர் தாயகத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும் சக்திகளின் செயற்பாடுகளை முறியடித்து தமிழ் மக்களுக்கு நிம்மதியான சூழலை ஏற்படுத்த வேண்டிய தார்மீக கடமை விடுதலைப் புலிகளுக்குள்ளது. எனவே இதற்கான நடவடிக்கையினை விடுதலைப்புலிகள் தீவிரமாக்கும் போது அதனை சர்வதேச சமூகம் போர் நிறுத்த மீறல் என்ற வரையறைக்குள் கொண்டுவந்து விடுதலைப் புலிகள் மீது குற்றச் சாட்டுக்களை சுமத்த முனையக்கூடாது. ஏனெனில் சிறிலங்கா அரசு, சர்வதேச சமூகம் செய்யத் தவறியதை விடுதலைப் புலிகள் செய்யமுன்வந்தனர்.

எனவே தமிழர் தாயகப் போராட்டத்தில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக துரோகமிழைத்த துரோகிகளின் வரலாறு நிலைத்ததில்லை. அந்த வகையில் இன்றுள்ள நெருக்கடியான சூழ்நிலையும், விரைவாக முடிவுக்குவரும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். பலவீனம் என்பது புலிகளின் வரலாற்றிலில்லை என்பதை அவர்கள் நிலை நிறுத்தியே தீருவர்.


 


பிரவீனா
Comments (2) >>

vein(Tamil Eelam jf) said:

 
keep it up and do some think. LTTE should (must)have take a action ...... no no Peopel, because LTTE is People, People is LTTE so....
If it is possible
it is done!
If it is impossible
it will be done!
October 22, 2005

நாதன் said:

 
கட்டுரை படிக்க முதல் புலிகள் இதைத்தான் செய்வார்கள் என்று தொயும் இருந்தும் இதை கொஞ்சம் கெதியாய் செய்தால் நல்லது.
October 21, 2005
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..