|
தமிழர்களின் இறைமைப் போராட்டத்தினை சர்வதேச சமூகம் அங்கிகரிக்க வேண்டும். தமிழர் தாயகத்திலிருந்து படையினர் வெளியேற வேண்டும் என திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள பயணத் தடைக்கும் எழுச்சி மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வட கிழக்கெங்கும் நடைபெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாடுகளில் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டே வருகின்றன. எதிர்வரும் 27 ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ள தமிழ் தேசிய எழுச்சி நிகழ்விலும் இக்கோரிக்கைகள் முன் வைக்கப்படப்போகின்றன. வட கிழக்கு தமிழர்களின் தாயகம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேசம் அங்கிகரிக்க வேண்டும். என்றெல்லாம் தமிழ் மக்கள் கோரி வருகின்ற நிலையில் தென் பகுதியில் இதற்கு எதிரான நிலைப்பாடு வலுப்பெற ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களான பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழர்களின் விவகாரத்தில் வெவ்வேறு விதமான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளனர். இரு வேட்பாளர்களும் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது தெளிவாகின்றது. வட கிழக்கிற்கு சமஷ்டி மூலமான அதிகாரப் பரவலாக்கல் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் ஜே. வி. பி., ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளுடன் கூட்டிணைந்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷவோ வட கிழக்கென்பது தமிழர்களின் தாயகமல்ல, வட கிழக்கிற்கு சுயநிர்ணய உரிமையில்லை என்ற பாணியில் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டுள்ளார். புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும். தனி நாட்டுக் கோரிக்கையினை கைவிட வேண்டும். இறுதி தீர்வு குறித்து பேச முன்வர வேண்டும். அப்படியானால் தான் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். குறித்த நேர அட்டவணைக்குள்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் ""மகிந்தவின் சிந்தனை'' எனும் தனது விஞ்ஞாபனத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜே. வி. பி., ஹெல உறுமயவுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கிணங்க இந்த விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கெங்கும் நடைபெற்று வரும் தமிழ் தேசிய எழுச்சி நிகழ்வு கோரிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையிலேயே பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடு அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலிய ரத்னதேரர் வட கிழக்கிற்கு சுயநிர்ணய உரிமையில்லை. அது தமிழர்களின் தாயகமுமல்ல என்று கூறியிருந்தார். பிரதமரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். ஜே. வி. பி. கட்சியினரும் இத்தகைய நிலைப்பாட்டினையே கொண்டுள்ளனர். வட கிழக்கு தமிழர்களின் அபிலாஷைகளை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் ஜே. வி. பி. மற்றும் ஹெல உறுமயவினரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமை வழங்கும் வகையில் செயற்பட முன்வந்துள்ளமை தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும் மனவருத்தத்துக்குரிய விடயமாகும். கடந்த 20 வருட காலத்துக்கு மேலாக யுத்தம் புரிந்த விடுதலைப் புலிகள் இன்று சமாதான பேச்சுக்களில் அக்கறை காட்டிவரும் நிலையில் தென்பகுதியில் சமாதான விரோத சக்திகளின் செயற்பாடுகள் முனைப்படையத் தொடங்கியுள்ளமை எதிர்கால சமாதான முயற்சிகளை கேள்விக்குறியாக்கி விடும் என்ற அச்சம் பரவலாக இன்று எழுந்துள்ளது. அதிகாரப் பரவலாக்கல் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற நிலைப்பாட்டில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டை பிரிக்கப் போவதாக இனவாதிகள் இன்று கூக்குரல் இடுகின்றனர். நாடு பிரியப்போவதாக பிரசாரம் செய்வதன் மூலம் சிங்கள மக்களை தமது பக்கம் இழுக்கும் முயற்சியிலேயே இத்தகைய சக்திகள் ஈடுபட்டுள்ளன. இதேவேளை ஐக்கிய இலங்கையா? பிரிவினையா? எது வேண்டும் என்பதை தென்பகுதி மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார் தான் ஜனாதிபதியானால் நாடு ஐக்கியப்படும் என்றும் இல்லையேல் யுத்தம் மீண்டும் ஏற்பட்டு நாடு பிரியும் எனும் தொனிப் பொருளிலேயே அவர் கருத்து தெரிவித்து வருகின்றார். தென்பகுதியில் உள்ள கட்சிகளுக்கிடையில் ஒருமித்த நிலைப்பாடு ஏற்படாத விடத்து இனப்பிரச்சினைக்கு தீர்வென்பது சாத்தியமில்லை. இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருந்தன. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் ஐ. தே. க. வினரும் இந்த நிலைப்பாட்டில் உள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள பெரும்பாலா÷னார் இந் நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளதாகவே தெரிகின்றது. எனவே அரசியல் சுயநலன்களுக்காக தென்பகுதி அரசியல் தலைமைகள் தமிழர் விவகாரத்தில் தமது நிலைப்பாடுகளை அடிக்கொரு தடவை மாற்றுவதனால் இனப்பிரச்சினைக்கு தீர்வெதனையும் காண முடியாது போகும் நிலையே ஏற்படும். எனவே தென்பகுதி அரசியல் தலைமைகள் இனியாவது சிந்தித்து செயற்பட முன்வர வேண்டும். இல்லையேல் நாடு அழிவுப்பாதையை நோக்கியே செல்லும் என்பது திண்மம். virakesari
|