|
யாழ். வடபோர்முனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 105 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
முகமாலை கண்டல் பகுதி ஊடாக சிறிலங்கா படையினரின் 55 ஆவது டிவிசன் படையணியினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் பாரியளவில் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
பின்தளங்களிலிருந்து செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி மற்றும் கனரக போர்க்கலங்களின் சூட்டாதரவுடன் நகர்வினை மேற்கொண்ட சிறிலங்கா படையினர் மீது பிற்பகல் 12:30 நிமிடம் வரை விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல் நடத்தி படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்தனர்.
இதில் 15 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். 75 படையினர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த படையினரை பின்தளத்துக்கு பல தடவைகள் உலங்குவானூர்திகள் ஏற்றிச்சென்றுள்ளன.
இதனிடையே, முகமாலை கிளாலி பகுதியில் சிறிலங்கா படையினர் நேற்று முன்நாள் மேற்கொண்ட முன்நகர்வினை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.
கிளாலி, முகமாலை முன்னரங்க நிலைகள் ஊடாக சிறிலங்கா படையினரின் 53 ஆவது டிவிசன் படையணியினர் நேற்று முன்நாள் அதிகாலை 12:00 மணியளவில் செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை, கனரக போர்க்கலங்கள் மற்றும் வான்படையின் கிபீர் வானூர்திகள், உலங்குவானூர்திகள் ஆகியனவற்றின் சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் காலை 8:00 மணிவரை தாக்குதல் நடத்தி படையினரின் முயற்சியினை முறியடித்தனர்.
இதில் 10 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். 30 படையினர் படுகாயமடைந்தனர்.
களத்தில் காயமடைந்த படையினரை நான்கு தடவைகளுக்கு மேல் உலங்குவானூர்திகள் ஏற்றிச் சென்றுள்ளன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
நெருடல் இணையம்
|