|
தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மானமாமறவர்களான மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டு வருகின்றனர். இதில் விசுவமடுக் கோட்டத்திற்குட்பட்ட ஒருதொகுதி மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று மாவீரரின் சகோதரனான பகீரதன் தலைமையில் இடம்பெற்றது.
முன்னதாக மாவீரர்களின் பெற்றோர்கள், போராளிகள், போரெழுச்சிக்குழு உறுப்பினர்களால் வரவேற்கப்பட்டு சிறப்பாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் அமர்த்தப்பட்டனர். பின்னர் நிகழ்வில் பொதுச்சுடரினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா தமிழன்பன் ஏற்ற, தேசியக் கொடியினை வடபோர்முனைக் கட்டளைப் பணியகப் பொறுப்பாளர்களில் ஒருவரான மகேஸ் ஏற்றினார்.
மண்டபத்திலுள்ள மாவீரர்களின் பொதுப் படத்திற்கு விசுவமடுக் கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் செம்மணன் சுடரேற்றி, மாலை அணிவித்தார். தொடர்ந்து முதன்மை மாவீரர்களின் உருவப்படத்திற்கு சுடரேற்றி, மலர்மாலை அணிவிக்கப்பட்டது. கருத்துரைகளை சுதந்திரப்பறவைகள் ஏட்டின் ஆசிரியர் தமிழவளும் சிறப்புரையினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளரும் ஆற்றினர். பின்னர் சிறார்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் போரெழுச்சிக்குழு உறுப்பினர்கள், போராளிகள், பொறுப்பாளர்கள், மாவீரர்களின் பெற்றோரோடு கலந்துரையாடி அவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்தனர்.
இதேவேளை புதுக்குடியிருப்பு கிழக்கு வட்டத்திலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு நேற்றுகாலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய அதிபர் அன்ரன் குலதாஸ் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து முதன்மை மாவீரர்களின் உருவப்படத்திற்கு சுடரோற்றி மலர்மாலை அணிவித்த அதேநேரம் மாவீரர்கள் நினைவான சுடரினை மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் ஏற்றினர்.
தொடர்ந்து புதுக்குடியிருப்பு நுண்கலைக் கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்வு இடம்பெற்றது. அடுத்து கொள்கை முன்னெடுப்புப் பொறுப்பாளர் எழிலன், எள. மெற்றாஸ்மெயில், புதுக்குடியிருப்பு கோட்ட பெண்கள் மேம்பாட்டு அபிவிருத்திப் பொறுப்பாளர் காருணியா, புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சி. இளம்பரிதி ஆகியோர். நினைவுரையாற்றினர். சிறப்புரையினை விடுதலைப் பலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே பாலகுமாரன் ஆற்றினார். நிகழ்வில் தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பென்தியாகம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
வட்டக்கச்சி வட்டத்தில் கோட்ட தேசிய போரெழுச்சிக்குழு செயலாளர் க.கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை கரும்புலி கப்படன் கருவேந்தனின் பெற்றோர் ஏற்ற, தமிழீழ தேசயக் கொடியினை வட்டக்கச்சி அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சின்னண்ணா ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அடுத்து சிறப்புரையினை விடுதலைப் புலிகள் ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி, தமிழீழ மகளிர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழினி ஆகியோர் நிகழ்த்தினர். தொடர்ந்து இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலை இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலை மாணவிகளின் நடனமும் புதுவை அன்பனின் 'அழுதது போதும்" என்னும் தெருவெளி நாடகமும் இடம்பெற்றன.
நெருடல் இணையம்
|