|
கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களின் வரவுகள் பற்றி சிறீலங்கா புலனாய்வுக் குழுவொன்று நாளாந்தம் கண்காணித்து வருவதாக, கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பாடசாலைகளுக்கு நாளாந்தம் செல்லும் இந்தக் குழுவினர் தினவரவேட்டினை பரிசோதிப்பதுடன், அன்றைய நாள் பாடசாலைக்கு சமூகமளிக்காத தமிழ் மாணவர்கள் பற்றி விசாரணை செய்கின்றனர்.
சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் குறிப்பிட்ட மாணவர்களின் வீடுகளிற்கு செல்லும் புலனாய்வாளர்கள், பாடசாலைக்குச் மூகமளிக்காமைக்கான காரணத்தினை கேட்பதாகவும், பெற்றோர் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் கடுமையாக எச்சரித்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாணவர்களின் வரவுகள் பற்றியே சிறீலங்கா படைத்தரப்பு கூடிய அக்கறை காட்டுவதாகவும், நாளாந்தம் இவ்வாறு படையினர் வரவுப் பொத்தகத்தினை பரிசோதிப்பதற்கு பலமான காரணங்கள் இருக்கலாம் எனவும், கொழும்பின் பாடசாலை முதல்வர் ஒருவர் கூறினார்.
படைப் புலனாய்வாளர்களின் பிரசன்னங்களால் பாடசாலைகளில் நாளாந்தம் பதற்றம் நிலவுவதாகவும், பெற்றோர் மிகவும் அச்சத்துடன் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள், தென்னிலங்கையில் இடம்பெறும் கடத்தல் காரணமாக பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மீண்டும் வடக்கு கிழக்கிற்கு அழைத்துச் செல்ல தம்மிடம் விடுகைப்பத்திரம் கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பாடசாலை முதல்வர் கவலை வெளியிட்டுள்ளார்.
நெருடல் இணையம்
|