|
இன்றைய அரசியல் நிலைவரங்கள் காரணமாக மக்கள் வெகுவாகக் குழம்பிப் போயுள்ளனர். அரசியல்வாதிகள் எதை எப்போது செய்வார்கள் என்பதை ஊகிக்கவோ, புரிந்து கொள்ளவோ முடியாத நிலைக்கு மக்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை இனவாதம் என்றுமில்லாதவாறு மோசமாக பேசப்பட்டு வருகின்றது. இதனால் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்ச உணர்வு மேலோங்கி வருகின்றது. எங்கே மீண்டும் "வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை' யாகி விடுமோ என்பதே அவர்களின் அச்சமாகும். எவ்வாறெனினும் அதிகரித்து வரும் இனவாதப் போக்குகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தை ஜனாதிபதி நன்குணர்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. தேர்தல் பிரசார மேடைகளில் கூட அவர், சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை எவரும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும், சமாதானத்தின் அவசியம் பற்றியும் வலியுறுத்தி வருவதை நன்கு காணமுடிகின்றது. ஜே.வி.பி. யினதும், ஹெல உறுமயவினதும் அரசியல் கொள்கைகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில் சிறுபான்மை மக்கள் மிகுந்த விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஜனாதிபதி குரல் கொடுத்து வருவது, தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தெம்பை அளிப்பதுடன், அவரது கருத்துக்களை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருவதையும் ஒருங்கே காண முடிகின்றது. இதேவேளை, சமாதான முயற்சி உட்பட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இணைந்து செயற்படுவதென ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் உடன்பாடொன்றுக்கு வந்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் இரு தலைவர்களும் நேற்று முன்தினம் மாலை சுமார் இரு மணிநேரம் சந்தித்து பேச்சு நடத்திய போதே சமாதான முயற்சி உட்பட நாட்டின் எதிர்காலம் தொடர்பான முக்கிய விடயங்களில் இணைந்து செயற்பட ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது, சமாதானம் குறித்து வலியுறுத்துவதும், சுதந்திரக் கட்சியை அரவணைத்துச் செல்லப் போவதாகக் கூறி வருவதுமே, ஜனாதிபதியின் பார்வை அவரது பக்கம் அதிகம் திரும்பியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது வேட்பாளராக ஏகமனதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நிறுத்தப்பட்டுள்ள போதிலும் அவர், சமாதான விடயம் உட்பட தேசிய பிரச்சினைகளில் ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவின் கொள்கைகளையே முழுக்க முழுக்க உள்வாங்கியுள்ளமை, சுதந்திரக் கட்சியின் சிருஷ்டிகளுக்கும் அபிமானிகளுக்கும் வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அதன் வெளிப்பாடுகளையே அவர்கள் ஒவ்வொரு முறைகளில் காட்டி வருவதாகவும் மக்கள் கருதுகின்றனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் அமைச்சர் அநுர பண்டாரநாயக்க தனது நிலைப்பாட்டை வலியுறுத்தி வருவதுடன், எங்கே சுதந்திரக் கட்சியின் செல்வாக்கு அஸ்தமனமாகிப் போகுமோ என்ற அச்சத்தில், சுதந்திரக் கட்சியின் அவசியத்தை அதன் ஆதரவாளர்களுக்கு அவர் உணர்த்தி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவின் நிலைப்பாடுகள் சிறுபான்மை மக்களை மாத்திரமல்ல சுதந்திரக் கட்சியையும் ஓரங்கட்டுவது போன்றதோர் போக்கிலேயே அமைந்திருப்பதாக அரசியல் அவதானிகள் பலரும் கருதுகின்றனர். இதன் காரணமாகவே ஜனாதிபதி சில விடயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் சமாதான முயற்சிகள் தொடர்பான அணுகு முறைக்கு இசைந்து செல்ல முயல்வதாகவும் கூறப்படுகின்றது. இதே வேளை, மற்றுமொரு விடயத்தையும் இங்கு அவதானிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதாவது "ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மாற்றியமைக்கப் போவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் செய்ய முற்பட்டால், உடன் படிக்கையின் வீழ்ச்சிக்கே அது வழிவகுக்கும் என புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இனவாதம் தலை தூக்கி வருவதன் காரணமாகவே, நாட்டில் மீண்டும் மோசமான சூழ்நிலை ஏற்படுமோ என்ற அச்சம் சகல மட்டங்களிலும் மேலோங்கி வருகின்றது. அதற்கு வழிவகுக்கும் வகையில் எவரும் செயற்படக் கூடாது என்பதே அøனவரதும் விருப்பமாகும். மாறாக அரசியல் இலாபம் தேட எவரும் முனைவார்களேயானால் நாடு குட்டிச் சுவராவதை எவராலும் தடுக்க முடியாது போகும். எனவே அநாவசிய சந்தேகங்களுக்கு துணை போகாத வகையில் அனைத்து தரப்பினரும் தங்கள் செயற்பாடுகளை தெளிந்த நோக்குடன் முன்னோக்கி நகர்த்துவதே தேர்தலில் வெற்றி வாய்ப்பை தனதாக்கிக் கொள்ள சரியான மார்க்கமாக அமையும் என்பதே யதார்த்தம்
virakesari
|