|
வரலாறு, இயற்கை, இறைவன் என்று நாம் கூறிக் கொள்வதெல்லாம் எமது நல்வாழ்விற்கு அவசியமானவற்றினை நாமே தெரிவு செய்ய தரப்பட்டுள்ள வாய்ப்புகள் என்பதே நேர்மறை சிந்தனையாளர் கருத்து. வரலாற்றினையும் இயற்கையினையும் மக்களுக்கு இலகுவில் புரிய வைக்க கைக் கொள்ளப்பட்ட வழிமுறையே இறைவன் என்கிற வடிவமென்றும் இவர்கள் கருதுகின்றனர். மிகச் சரியான வேளையிலே அகப்புறச் சூழ்நிலைகள் பொருத்தமாக அமையும் போது வாய்ப்புகள் கிட்டும். இதனைப் புரிவதற்கு வரலாற்றின், இயற்கையின் போக்கினை அறிதல் வேண்டும். எமது தேசியத் தலைவரிடம் அவரது ஆற்றல், ஆளுமை பற்றி நாம் கேட்கும் வினாக்களுக்கு அவர் தரும் விடை வரலாற்றின் பட்டறிவு என்பதாகவிருக்கும்.
தற்போதைய சிங்கள அரசியலின் போக்கினை இப்பின்னணியிலேயே நாம் நோக்க வேண்டும். ஸ்ரீலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் அரங்க காண்பியம் இப்போது தெளிவாகி விட்டது. வரலாற்றின் பட்டறிவினை புறம்தள்ளும் நிகழ்வின் வெளிப்பாடாகவே இது அமைகின்றது. எதனைக் காரணம் காட்டி ஜே.வி.பி., ஜே.எச்.யூ. போன்றவை மகிந்தவுக்கு ஆதரவு காட்ட முனைந்தன? சிறுபான்மை மக்களென இவர்கள் கூறிக் கொள்வோரின் ஆதரவில்லாமல் பெரும்பான்மையினத்தவர் வெல்ல வேண்டும். பெரும்பான்மையினத்தவர் நலன்களை மட்டும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். ஆனால், இப்போது நடப்பதென்ன? மகிந்தரின் வெற்றியோ அல்லது ரணிலின் வெற்றியோ தமிழ் பேசும் மக்களின் கையில் தான் இன்றுள்ளது. ஸ்ரீலங்காவின் அரசியலில் தமிழ் பேசும் மக்களும் மலையகத் தமிழ் மக்களும் தீர்க்கமான பெறுமானமான குழுமமாகிவிட்டனர். அதேவேளை, மகிந்தரின் வெற்றியென்பதும் சந்திரிகாவின் தோல்வியென்பதும் ஒன்றாகி விட்டது. தமிழ் பேசும் மக்களுக்கு அநீதியை விளைவித்த பண்டா குடும்ப வீழ்ச்சி அக்குடும்பத்தின் கட்சியாலே அதற்கு நேரப் போவதென்பது வரலாற்றின் அற்புதமான தீர்ப்பு. எம்மக்கள் சிந்திய குருதியும், கண்ணீரும் என்றும் வீணாகப் போவதில்லை என்பதே இதன் பொருள். பேராசிரியர் சோ.சந்திரசேகரன் எழுதுகின்றார். "21 ஆம் நூற்றாண்டு அறிவுமைய நூற்றாண்டென்றும் தகவல் மைய நூற்றாண்டென்றும் வர்ணிக்கப்படுகின்றது. முன்னைய நூற்றாண்டுகளில் முன்னெப்போதுமில்லாதவாறு இன்று அறிவு துரித கதியில் பெருகி வருகின்றது. இதனை அறிவு வெள்ளம் பிரவாகம் எடுத்தோடும் காலமென்றும் கூறலாம். தற்போதைய அறிவுத் தொகுதி 5 ஆண்டுகளில் இரு மடங்காகின்றது என்றும் 20 ஆம் நூற்றாண்டின் 50 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அறிவுத் தொகுதி தற்போது 5 ஆண்டுகளில் உருவாக்கப்படுமென்பது எதிர்காலவியல் அறிஞர் கருத்து". (தினக்குரல் 02.08.2005). ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரையில் இதனை மாற்றியெழுத வேண்டும். "ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரையில் இந் நூற்றாண்டு மூடத்தனத்தினதும், மடமையினதும் நூற்றாண்டாகவே கணிக்கப்படும். முன்னெப்போதுமில்லாத அளவு பேரினவாதமும் அடக்குமுறைச் சிந்தனையும் துரித கதியில் பெருகி வருகின்றது. இனவாத வெள்ளம் பிரவாகமெடுத்து பெருகியோடும் காலமெனலாம். 50 ஆண்டுக்கான பேரினவாத செயற்பாடு இப்போது 5 ஆண்டுக்குள்ளே உருவாக்கப்படுகின்றது. (பேராசிரியர் மன்னிக்க வேண்டும்). இத்தகையதொரு நிலையில் எமது நிலைப்பாடு எவ்வாறிருக்க முடியும். கலாநிதி குணசிங்கம் குறிப்பிட்டது போலவே `செயற்கையாகவும் தந்திரமாகவும் நிகழ்த்தப்பட்ட திருமண பந்தமொன்றுள் சிக்கிய இவ்வாராய்ச்சி தீவிர மனவதிர்ச்சியை ஏற்படுத்திய விவகாரத்தில் முற்றுப் பெறுகின்றது". ஆகவே, வரலாற்றன்னை வழங்கிய அனைத்து வாய்ப்புகளையும் புறம் தள்ளும் சிங்கள அரசியலின் இன்றைய நிலை இவ்வாறு தானுள்ளது. வெளிறிப்போன, மலர்ச்சியில்லாத, வாடிப்போன அம்மையாரின் முகம் - அவமானத்தால் சிவந்து கன்றிப்போன மகிந்தர் முகம், எவ்வித வாய்ப்புமின்றி இருந்த தனக்கு இப்படியொரு வாய்ப்பு வந்ததே என்கிற மகிழச்சியை மறைக்க முடியாது கள்ளச் சிரிப்புக் காட்டி `போரா, சமாதானமா' எது வேண்டும் உங்களுக்கு" என சிங்களவரிடம் பேரம் பேசும் கழுவிய நீரில் நழுவிய மீனாக ரணிலின் முகம். இம்முகங்கள் யாவற்றினையும் எம்மக்கள் வினோதத்துடனும் மனக்கிலேசத்துடனும் காண்கின்றார்கள். அம்மையாரின் இறுதி நாட்கள் எண்ணப்படுவது அவர்கள் கண்முன்னே நடக்கின்றது. அவர் புழுப்போல துடிப்பதையும் அவர்கள் காண்கின்றார்கள். நம்பியவர்களெல்லாம் அவரை நட்டாற்றில் கைவிடுகின்றார்கள். மூழ்கும் கப்பலிலிருந்து தப்புவோர் போலவும் "அற்ற குளத்து அறுநீர்ப் பறவை" போலவும் ஒவ்வொருவராக அவரை விட்டகல்கின்றார்கள். மிகுந்த மனக் குழப்பத்தோடும் ஆற்றாமையால் விளையும் சீற்றத்தோடும் அவர் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பதிவாகி மக்கள் முன் வந்து சேர்கின்றன. "குடை நிழல் இருந்து குஞ்சரமூர்ந்தோர்" இறுதியில் ஓர் நாள் `நடைமெலிந்து' நடுவீதியில் நிற்பதையும் "ஆற்றங்கரை மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும்' வீழ்ந்துபடுவதையும் ஔவையின் வார்த்தைகளில் நாம் காண்கின்றோம். வரலாறு துயரத்துடன் இவற்றினை மீண்டுமொரு முறை பதிவாக்கிக் கொள்கின்றது. எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதியின் பின் மாண்புமிகு, மாட்சிமை தங்கிய பேரரசி சாதாரண `பெண்ணாகிவிடுவார்' சிறகுகள் அறுக்கப்பட்ட பறவை போலிருந்த மகிந்தரைக் கூட இறுதியில் மடக்க முடியாது அவரால் போய்விட்டது. பதினொரு வருட பரபரப்பான அதிகார ஆட்சிபீடம் படிப்படியாக அவரைக் கைவிட்டகல்கின்றது. அது ரணிலிடம் சென்றடைவதை விடவும் மகிந்தரிடம் அது சேர்வது அம்மையாருக்குத் தாங்க முடியாத அவமானமாகி விட்டது. இது எவ்விதம் நிகழ்ந்தது? இதன் படிப்பினையென்ன? எவரொருவர் மிக உச்சமாக பிறரை ஏய்க்கின்றாரோ அவர் இறுதியில் அந்தளவிற்கு தன்னைத் தானே ஏமாற்றுகின்றார் என்பது அனுபவமொழி. `தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்' வள்ளுவன் குறள் உயிர் பெறுகின்றது. அம்மையார் இவ்வளவு அவமானத்துடன் அகல வேண்டியிருக்குமென எவரும் எதிர்வுகூறவில்லை. மாறாக அவர் இவ்வாறு செய்வார் அவ்வாறு செய்வாரென செய்தியேடுகள் பரப்புரைகளை உருவாக்கின. இறுதியில் எல்லாமே பொய்த்துப் போகின்றன. சொந்த நாட்டில் சொந்தக் கட்சியின் வேட்பாளர் அருகிலிருப்பதும் அவருக்காக பரப்புரை செய்வதும் அவரால் தாங்கமுடியாத அவமானமாகிவிட்டது. இவரால் அவமானப்படுத்தப்பட்ட தமிழினத்தின் இனமானம் இப்போது நிம்மதி காண்கின்றது. வெவ்வேறுபட்ட முரண்பட்ட உணர்ச்சிக் கோலங்களைக் காட்டும் பகையாளிகளை அருகருகே வைத்து நிழற்படமெடுப்பதே ஒளிப்படக்காரருக்கு மிக உவப்பான பணி. இம் முகங்களில் தமிழினத்தின் இறந்த, எதிர்கால வரலாறுகளின் வரிகள் விளங்குகின்றன. வெறுப்பும், சினமும் இயலாமையும் கொண்ட முகம் - அதற்கருகில் அவமானமும் சோகமும் ஆற்றாமையும் கொண்ட இன்னொரு முகம். இம்முகங்களை எம்மக்கள் மிக அதிசயத்துடன் காண்கின்றார்கள். இங்குள்ள நகை முரணென்ன? வரலாற்றின் மிக அழுத்தம் பொதிந்த வரிகளை தமிழினத்தின் எதிரிகளே பேசவேண்டிய நிலையை வரலாறு உருவாக்கிவிட்டமைதான். (ரணில் பேசும் சந்தர்ப்பவாத பேச்சுக்களைத் தவிர்த்து) சென்றமாதம் 14 ஆம் திகதி நியூயோர்க்கில் ஆசிய சங்கத்தில் அம்மையாரின் பேச்சின் முக்கிய கருப்பொருள் இதுதான். "நான் பெருமையுடன் சொல்லிக் கொள்கின்றேன். அமைதி முயற்சியின் வேகத்தினை எவராலும் தடுக்கமுடியாது" அதாவது அம்மையாரின் இறுதியும் அறுதியுமான சாதனை இதுதான்? அப்படியானால் இவர் பெற்றதாகக் கூறப்படும் இராணுவ வெற்றிகள் என்ன வாயிற்று? அவர் தனது குடும்ப கட்சி அரசியலின் இருபெரும் நிலைப்பாடுகள் எனக் கூறப்படுவதென்ன? இனச் சிக்கலுக்கு இணைப்பாட்சி மூலம் தீர்வு - கடல்கோள் இயற்கைப் பேரழிவிற்கு பொதுக்கட்டமைப்பு மூலம் தீர்வு. அம்மையார் சென்றமாத நடுப்பகுதியில் மகிந்தருக்கு எழுதிய கடிதத்தில் இவற்றினைக் குறிப்பிட்டு இவையை மாற்றமுடியாது. அவ்வாறு மாற்றினால் கட்சி வேட்பாளரை மாற்ற நேரிடும். பாராளுமன்றை கலைக்க நேரிடும் என்றெழுதினார். கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதியில் அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தவை திரைப்பட கதைவசனம் போல வரிக்கு வரி இப்போது வெளிவந்துள்ளன. அம்மையாரின் இறுதி கல்லறையிலெழுதும் வசனங்களிவை. எமது கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை எமது வேட்பாளர் எவ்வாறு மாற்ற "முடியும்?" இது அம்மையார். "நான் கட்சியின் வேட்பாளன். ஆகவே என்னை என் போக்கில் செயற்பட விடுங்கள். நீங்கள் முன்னர் ஜே.வி.பி.யோடு உடன்பாடு செய்தபோது கட்சியின் அனுமதி கேட்கப்பட்டதா? மத்திய குழுவிற்கு அறிவிக்கப்பட்டதா?" இது மகிந்தரின் மடக்கல். "அப்போது தட்டிக்கேட்க முதுகெலும்பில்லையா?" அம்மையாரின் கேலிச் சீண்டல் இது. இச் சீண்டலுக்கு மகிந்தர் கொடுத்த பதில் வரலாற்றின் வரிகள் "எங்களுக்கெப்படி முதுகெலும்பிருக்க முடியும்? அதுதான் ஏற்கனவே உடைக்கப்பட்டு விட்டதே. அது எங்களுக்கிருப்பதுதான் உங்களுக்குப் பொறுக்காதே". இவர்கள் யாவரும் சேர்ந்து எம் மக்களின் முதுகெலும்பினை உடைக்க முற்பட்டவர்களல்லவா? இக் கட்டத்தில் இன்னொருவர் ஞாபகம் வருகின்றது. வேளைக்கொரு சீருடை தரித்து ஊரெல்லாம் அலைந்து (இப்போது நீதிமன்றில் அலையும்) திரிந்த அநுருத்தர் அம்மையாரைப் பார்த்து புத்திசொல்ல, அவரைப் பார்த்து "யார் நீ?" என்றாராம். கொதித்துப் போன ரத்வத்தை "நான் யாரா? நான்தானே கட்சிக்கு உம்மை கொண்டு வந்தவன்..." என்றாராம். இவர்களெல்லாம் தமிழ் மக்களைப் பார்த்து யார் நீங்கள்? உங்களுக்கு இங்கென்ன வேலை என்றவர்களல்லவா? பச்சை சந்தர்ப்பவாதியாக மாறி ஊழலை மறைக்க பதவியைப் பயன்படுத்தி கோடி கோடியாக பணத்தினை தேர்தல் பரப்புரைக்கு வாரியிறைத்து மிகு கீழ் நிலைக்கு இறங்கிவிட்ட மகிந்தரை பரிதாபத்தோடு எம் மக்கள் காண்கின்றார்கள். ஸ்ரீலங்காவின் எதிர்காலம் எவ்வாறிருக்கும்? மகிந்தர் வென்றால் அவர் ஜே.வி.பி., ஜே.எச்.யு.கையில் சிக்கி படப்போகும் பாடு - அதன் விளைவால் உருவாகப் போகும் பெரும் போர் - ரணில் வென்றால் உருவாகப்போகும் அரசியற் குழப்பம் - நாட்டின் தலைவர் ஒரு கட்சி பாராளுமன்றம் இன்னொரு கட்சி - இறுதியில் பாராளுமன்றக் கலைப்பு. இங்கு ஒரு ருசிகர விடயம், அப்படியொரு பாராளுமன்றத் தேர்தல் நடந்தால் அம்மையார் பிரதம மந்திரியாவாரா? எதிர்க்கட்சித் தலைவராவாரா? இதனை ஆய்வாளர் வேலைக்கு விட்டுவிடுகின்றோம். அவ்வாறன்றி அம்மையார் சனாதிபதித் தேர்தலுக்கு முன் பாராளுமன்றைக் கலைத்தால் அது அவர் மகிந்தருக்கு மட்டுமன்றி தனக்கும் மண்ணள்ளிப்போடும் வேலையாகக் போகும். முடிவற்றதும் குழப்பத்திற்கு மேல் குழப்பம் விளைவிக்கப்போகும் இச் சிங்கள அரசியற்சூழல் பற்றியும் வரலாற்றினை மறக்க முடியாமலும் இதிலிருந்து எதனையும் கற்க முடியாமல் அவதிப்படும் இவர்கள் பற்றி நாம் தொடர்ந்தெழுதுவதால் என்ன பயன்? பேராசிரியர் இந்திரபாலா அண்மையில் வெளியிட்ட "இன அடையாளத்துவத்தின் பரிணாம வளர்ச்சி" என்கிற நூலின் சமர்ப்பண வரியில் "வரலாற்று திரிபுகளின் விளைவால் உயிரிழந்த அப்பாவிகளுக்கு சமர்ப்பணம்" (தகவல் : பேராசிரியர் பொ.இரகுபதி) என்பதே இவர்களுக்கான கல்லறை வரிகள். வரலாறு தன்னை தனது இருகரம் நீட்டி தமிழ்பேசும் மக்களை அன்போடும் ஆதரவோடும் அரவணைக்கவரும் இவ்வேளையிலே எமது தேசியத் தலைமை ஒரு போதும் நெல்சன் மண்டேலா கூறிய இவ்வார்த்தைகளை (1993 ஆம் ஆண்டு தனக்கும் டிகிளார்க்கிற்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட பொழுது தனது முன்னைநாள் எதிரியான கிளார்க் பற்றி கூறியவை) உச்சரிக்க, வேளை கிட்டப்போவதில்லை என்பதை மட்டும் கூறி விடைபெறுகின்றோம். "நிறவெறிக் கட்டமைப்பினை திணித்ததன் மூலம் எங்கள் நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் நாசத்தினை விளைவித்தமையை ஏற்றுக் கொள்ளும் துணிவு அவரிடமிருந்தது. அதேவேளை சகல தென்னாபிரிக்க மக்களும் சமத்துவமான முறையில் சமபங்காளராக பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றி தமது எதிர்காலத்தினை வடிவமைக்க வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்ளும் தீர்க்க தரிசனமும் அவரிடமிருந்தது."
க.வே.பாலகுமாரன்
|