 ஐரோப்பியர்கள் தமிழர்களுக்குத் தஞ்சம் கொடுத்ததற்காக அவர்கள் போடும், கூறும் யாவற்றுக்கும் தமிழர் தரப்பு செவிசாய்த்து வாலாட்டுவது நமது கடமையாக இருக்க முடியாது. எமது வாழ்வையும், வளர்ச்சியையும்- எதிர்கால அரசியலை முன்னெடுப்பதையும் நாமே தீர்மானிப்பது நமது ஜீவாதாரவுரிமை. இதையெந்தக் கொம்புவைத்த இனங்களும் எம்மிடமிருந்து பறித்தெடுக்க முடியாது. ஐரோப்பாவானது தனது கடந்த காலத்தை மறைத்துவிட்டு மற்றவர்களுக்கு ஆலோசனை செய்கிறது. இங்கே, இதே கடந்தகாலமானது புதிய பாணியிலான பொருளாதார வாதிக்கத்தோடு - பின்காலனித்துவப் பண்போடு, புதியதொரு பொருளாதார வியூகத்தை எம்மீது திணிக்கிறது. இதன் புட்சியானது ஈராக், அவ்கானிஸ்தான் படையெடுப்பாகவும்- அரசியல் வியூகமாகவும் பரிணாமிக்கின்றது.
ஐரோப்பியச் சந்தைப் பொருளாதாரமானது நாலுகால் பாச்சலினால் மீளவும் பெருமூலதனத்திரட்சியாகி, ஏகாதிபத்தியமாக விரிந்துள்ள இன்றைய நிலையில், அவர்களது அரசியல் வியூகமானது புதியதொரு தொடர்ச்சியை வலியுறுத்துகிறது. இது மூன்றாமுலகில் சுழலும் அவர்களது நிதிமூலதனப் பாதுகாப்புக்கும்- மூன்றாமுலகைக் கொள்ளை போடுவதிலும், அவர்களது வளர்ச்சியைத் திட்டமிட்டு நசுக்குவதிலும் கூடவே தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டி தமது மூலதனத்தைப் பெருக்குவதில் குறியாகவுள்ளது. கடந்த காலச் சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை. தமிழ்மக்களை அவர்களது பிரிவினைகளுக்கூடாகப் பிளந்து அரசியல் நடாத்தும் மேலாண்மைச் சமூதாயங்கள், தமது நாடுகளுக்குப் பரதேசிகளாக இடம்பெயர்ந்து, உயிர்த்திருக்க வந்த தமிழர்களுக்குச் `சும்மா` மனித நேயத்தோடு ஒரு மண்ணுஞ் செய்யவில்லை. இவர்களிட்ட பிச்சை நம் நாடுகளில் சுரண்டிய வளத்தில் ஒரு சிறு துளிக்குக் கூட நெருங்க முடியாது. நம்மிடமிருந்து திருடியதை நமக்கிட்டே, நமது வாழ்வைச் சூறையாடும் அரசியலைபுரியாதிருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள். இன்று தேக்கத்துள்ளாகும் ஐரோப்பியவொன்றியப் பொருளாதாரப் பொறிமுறையானது தனது உயிர்த்திருப்புக்காக உலகத்தை ஏப்பமிடக் காத்திருப்பதும் கூடவே ஐரோப்பியத் தொழிலாளிகளின் கμத்தில் சுருக்கிடவும் தயாராகிறது. உலக வங்கியினதும், உலக நாணய நிதியத்திடமுமிருந்து வரும் ஆலோசனையின் பேரில் தமது நாடுகளில் சமூகப்பாதுகாப்பைக் கருவறுக்கும் ஐரோப்பியவொன்றியமானது தனது நாடுகளில் தஞ்சம் கோரிய மக்களை நவீன அடிமைகளாக்கி ஒட்டச் சுரண்டியும் வருகிறது. இந்த அரசியலை மனித நேயப் பூச்சாண்டியூடாகப் பார்த்தோமானால் அது நமது அறிவைக் கிண்டலடிப்பதில் தாம் முடியும். தமிழரின் போராட்டமானது அடிப்படையில் இனவொடுக்குமுறைக்கெதிரானது. இது பொருளாதார, சமூகப் பண்பாட்டு ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாகும். இப்போராட்டமானது பற்பல வழிகளிலும், தந்திரத்தாலும் ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்தித்துள்ளது. ஒரு ஒμங்கமைந்த - நேரிய போராட்டச் செல்நெறியை வகுத்துக் கொள்ள முடியாத நமது பலவீனமானது, திட்டமிட்ட வெளிப்புறச் சக்திகளால் உள்தள்ளப்பட்ட சீரழிவாகும். நமது மக்களைத் தாண்டிய எந்தவொரு உலக நட்பும் நமக்கு உதவாது. நமது மக்களே நமது பலம். தமிழகத்துத் தமிழர்களே நமது பலத்தின் இருப்பாகவுமிருக்கும். இந்த ஆறுகோடி மக்களின் எழிச்சியை மட்டுப்படுத்தும் அரசியலே ஈழப்போராட்டத்தில் இந்தி இந்தியாவைச் சிங்கள அரசியலுக்குப் பக்கப்பலமாகச் செயற்பட வைத்திருக்கிறது. இதுள் இந்தி இந்தியாவினது பொருளியல் நலமானது சிங்களச் சமுதாயத்தோடு கை கோர்ப்பதில் நோக்கமாகவிருக்கிறது. எனவேதாம் தமிழகத்து மக்களின் அரசியல் விழிப்புணர்சி பற்பல வழிகளிலும் அடக்கியொடுக்கப் பட்டுள்ளது. இங்கிவை பற்பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. உதயன், விஜயன் முதல் சர்மா, மற்றும் அசீஸ் நந்தி போன்றஆய்வாளர்கள் நமக்கிதைச் சுட்டிக்காட்டி இரு பத்தாண்டுகள் கடந்துவிட்டது. நமக்கான அரசியல் அடிப்படைவுரிமையை நமக்கு யாரும் தரமுடியாது. அது நம்மால் நாமே எடுத்துக் கொள்வதாகும். எந்த அதிகாரம் நம்மிடமிருந்த உரிமையைப் பறித்ததோ அதே அதிகாரத்தூடாகப் பறித்தெடுப்பதுதாம் நமது போராட்டமாகவிருக்கும். இதில் மேற்குலகானுக்கோ அல்லது அமெரிக்க அடிவருடிகளுக்கோ நாம் மண்டியிடவேண்டுமென எவரும் கோரி நிற்க முடியாது. நாடிழந்து, ஊரிழந்து-வாழ்விழந்து நோகும் வலியும், வேதனையும் நமக்குத்தாம் தெரியும்! சும்மா மேற்குலகுக்கு விருந்தினர் தொழிலாளியாக வந்த கணினி விற்பனர்களுக்கு இது புரியாது. தமது தேசங்களாக இருக்கின்ற இன்றைய தேசங்கள் யாவும் நமது மூதாதையர்களிடமிருந்து பறிக்கப்பட்ட தேசங்கள் என்பதை அமெரிக்கர்களோ அல்லது அவுஸ்ரேலியர்களோ இன்னும் மறந்து விடவில்லை. அவர்களுக்கே அவ்வளவு உரிமையுண்டென்றால் பல ஆயிரமாண்டாய் ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் எப்படித் தமது தாயகத்தைச் சில பன்னாட்டு முகவர்களுக்காக விட்டுக்கொடுப்பது? எனது தாயகமானது எனது வாழ்வோடும், வரலாற்றோடும் உறுதிப்பட்டது. இது மேற்குலகானுக்கோ அல்லது வட இந்திய குடியேற்ற மக்களுக்கோ முகமன் செய்வதற்காக விட்டுக் கொடுக்க முடியாது. உலகத்துள் ஆறு கோடித் தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்தும் அவர்களுக்கானவொரு நாடு உருவாகாத கையாலாகாத அரசியல் வாழ்வு எப்படியுருவானது? இது குறித்துப் புதிய சந்ததி சிந்தித்தே ஆகவேண்டும்! அரசியல் வாழ்வானது மொழிவாரி-இனவாரியான பின்பு, அதன் பொருளாதார வாழ்வு மட்டும் எப்படி இன்னொரு இனத்தோடு சாத்தியமாக இருக்கிறது? இப்படியொர வாழ்வு கிட்டுவதற்கு நாம் சோஷலிசச் சமுதாயத்துள் வாழவில்லை. எனவே இந்த முதலாளியவுலகத்தின் கூற்றுக்குள் நின்றே அவர்கள் வகுத்த சட்டதிட்டப்படி போராடும் போராட்டத்தை யாருக்காக நாம் தாரை வார்ப்பது? குர்தீஸ் மக்களும், பாலஸ்தீனமும் மற்றும் ஐரிஸ் போராட்டங்களும் நமக்குப் பல படிப்பனைகளைத் தந்துள்ளார்கள்- தந்துள்ளது. நாம் யாருக்கும் குடிகளில்லை. நமக்கென்றொரு தேசம் வரலாற்றிலிருந்து இருந்தே வருகிறது. இதை மீளக்கையகப் படுத்துவதை ஐரோப்பியர்களுக்காக விட்டுவிட நாமென்ன அவர்களது அடிமைகளா? மக்களின் அழிவும், வாழ்வின் சிதைவும் நாளந்தம் நிகμமொரு நாடு தனது உரிமையை இதற்காக இழக்கும் பட்சத்தில் மீளவும் இதே அழிவை இன்னொரு வகையில் உறுதிப்படுத்தும். நான் உலக மக்களுள் ஒருவன், பூமியின் குழந்தை. எனினும், எனக்கென்றொரு வாழ்வும் வரலாறும் எனது தேசத்துள் இருக்கிறது. அதுவே எனது வேர்! இதிலிருந்துதாம் நான் பொது மனிதனாகிறேன். இதைவிட்ட மற்றெல்லாம் பொய்மையின் வெவ்வேறு வடிவங்கள்? இன்றைய முதலாளியச் சமுதாயத்துள்.
ப.வி.ஸ்ரீரங்கன்
|