பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலங்களில் வரும் ஞானம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலங்களில் வரும் ஞானம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 27 October 2005

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துச் சென்றுள்ளன. இதனால் மக்கள் சொல்லொணா கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மக்களின் வருமானம் எந்த வகையிலும், அதிகரித்துச் செல்லும் விலைவாசிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமையாததன் காரணமாக வறிய மற்றும் சாதாரண தர மக்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டின் பண வீக்கம் தாண்டவமாடுவதால் ""கூடையில்'' பணத்தைக் கொண்டு சென்று கைகளில் பொருட்களை வாங்கி வர வேண்டுமே என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் நிறைந்து போயுள்ளது.

இதேவேளை வாழ்க்கைச் செலவை குறைக்கக் கோரி நாட்டின் சில இடங்களில் கடந்த இரு தினங்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. கொழும்பு, கண்டி, கம்புறுபிட்டி போன்ற இடங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வாக்குறுதிகள் பல வழங்கி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் அவற்றில் ஒன்றையேனும் முறையாக நிறைவேற்றவில்லை எனக் கண்டித்தே மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பல சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பொருட்கள், சேவைகளது விலைவாசிகள் பன்மடங்கு உயர்ந்து சென்றபோது, மக்கள் அதற்கெதிராக குரல் கொடுத்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் வந்தனர். எனினும் அது குறித்து அரசாங்கம் பல்வேறு நியாயங்களைக் கற்பித்ததே தவிர அவற்றைக் குறைப்பதற்கு எந்தவிதமான முயற்சியும் மேற்கொண்டதாக இல்லை என மக்கள் புலம்புகின்றனர்.

பொருட்களின் விலைவாசிகள் உயர்ந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உலகில் எண்ணெய் விலை அதிகரித்ததாகவும் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்ததாகவும் அரசாங்கம் ஒரே பல்லவியையே மாறி மாறி பாடி வரு­கின்றது. உலகின் இதர நாடுகளிலுள்ள மக்கள் இவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்கள் வருமானங்களை உயர்த்திக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் இருகின்ற போதிலும் இலங்கை வாழ் மக்களுக்கு அவ்வாறான வாய்ப்­புக்கள் எதுவும் இல்லாதிருப்பதே விலையேற்­றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுவதற்கு பிரதான காரணமாகும்.

இதேவேளை விலைவாசிகள் உயர்ந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உலகின் எரிபொருள் விலையேற்றத்தைக் கூறி நியாயப்படுத்தி வந்த அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் தாங்கள் பதவிக்கு வந்தால் உணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பதாகவும் மக்களின் வருமானத்தை உயர்த்துவதாகவும் வாய் நிறைந்த வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றனர்.

ஆட்சியிலிருக்கும் போது விலைவாசிகளை குறைக்க முடியாத அரசியல்வாதிகளினால் தேர்தல் காலங்களில் மாத்திரம் எவ்வாறு விலைவாசிகளை குறைக்க முடியுமென மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் பிரசாரப் பின்னணியில் உரத்தை 350 ரூபாவுக்கு வழங்கு­வ­தாகவும் கர்ப்பிணித் தாய்மார்க்கு போஷாக்கு உணவுப் பொதி வழங்குவதாகவும் குழந்­தைகளுக்கு பால்மா வாங்குவதற்கு 200 ரூபா கொடுப்பனவு வழங்குவதாகவும் பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்­குவதாகவும் நீண்ட பட்டியல்களை முன்வைத்து அரசியல்வாதிகள் வாக்குப் பிச்சை கேட்­கின்றனர்.

தேர்தலின் போது மாத்திரம் முன்வரும் இந்த ஞானம் ஏன் தேர்லுக்கு முன்னர் வரக் கூடாது? என மக்கள் வினா எழுப்புகின்றனர். மக்களின் இந்த வகையான கேள்வியில் இருக்கும் நியாயத் தன்மையை புறக்கணித்து விடவும் முடியாது.

தேர்தல் காலங்களில் மாத்திரம் பொருட்களின் விலைவாசிகள் திடீரென குறைவதும் பின்னர் தேர்தலைத் தொடர்ந்து அவை விஷம் போல ஏறிவிடுவதும் இந்த நாட்டில் சர்வசாதாரண விடயமாகவே இருந்து வருகின்றது. அது மாத்திரமன்றி அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளும் தேர்தலுக்குப் பின்னர் காற்றில் பறந்து விடுவதையே பல்வேறு சந்தர்ப்பங்களில் காண முடிகிறது.

பதவியைக் கைப்பற்றுவதில் மாத்திரம் குறியாக இருக்கும் அரசியல்வாதிகள் மக்களை கவருவதற்காக தேர்தல் காலங்களில் பல்வேறு தந்திரோபாயங்களை மேற்கொள்வதும் பின்னர் மக்களை "அம்போ' என கைவிடுவதும் இந் நாட்டுக்கு புதிய விடயமல்ல.

ஜனாதிபதித் தேர்தலின் பிரசாரப் பின்னணியில் ஜனாதிபதி வேட்பாளர்களினால் முன்வைக்கப்படும் பல்வேறு திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை பன்மடங்கு உயர்த்துவதாகவும் நாட்டின்பொருளாதாரத்தை மிக உன்னத நிலைக்கு கொண்டு செல்வதாகவும் அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இவை யாவும் வெறுமனே ஏட்டளவில் அன்றி நடைமுறையில் சாத்தியப்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரதும் விருப்பமாகும். ஆனால் ஒவ்வொரு தடவையும் ஏமாற்றங்களே மிஞ்சுவதுடன் ""இலவு காத்த கிளி'' யின் நிலைக்கே மக்கள் கொண்டு செல்லப்படுகின்றனர். அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் இதே போக்கில் முன்பின் முரணாக தொடர்வதன் காரணமாக மக்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர்.

தேர்தல் காலங்களின்போது மாத்திரம் மக்கள் மீது அதீத அக்கறை அரசியல்வாதிகளுக்கு ஏற்படுவதும், பின்னர் அதே வீச்சில் மக்களை அவர்கள் மறந்து போவதும் மக்கள் அவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையீனத்துக்கும் அதிருப்திக்கும் காரணமாகும்.

இதனை அரசியல்வாதிகள் நன்குணர்ந்து செயற்படுவதுடன் உண்மையான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கவும் அவற்றை நிறைவேற்றவும் முன் வருவார்களேயானால் தேர்தல் வெற்றிக்காக எவரும் மக்கள் முன் மண்டியிடத் தேவையில்லை என்பதே யதார்த்­தம்.


thinakkural
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..