பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow படையினரின் அடாவடி; மக்களின் கிளர்ச்சி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

படையினரின் அடாவடி; மக்களின் கிளர்ச்சி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 31 October 2005

புத்தூர்ப் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இரவில் தனித்திருந்த பெண்களின் வீட்டுக்குள் சென்று பாலியல் வல்லுறவிற்குள்ளாக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம், அதனையடுத்து பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மூண்ட கடும்மோதல், இதன்போது அப்பாவி இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை, பலர் காயமடைந்தமை ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்றநிலை யாழ். குடாநாட்டில் இன்னமும் தொடர்ந்து வருகிறது.

ஆத்திரமடைந்துள்ள பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே எந்நேரமும் எப்பகுதியிலும் மோதல் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை காணப்படுகிறது.

இராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு பழிக்குப் பழிவாங்கியே தீருவோம் என வெறி கொண்டு நிற்கும் அப்பகுதி இளைஞர்களால் இப்பகுதியில் எந்நேரமும், எதுவும் நடக்கலாம் என்ற அசாதாரண சூழல் காணப்படுகிறது. இதனால் இன்னுமொரு கலவரம் மூளலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

கலவரத்திற்குத் தூபமிடும் இராணுவத்தினரின் இத்தகைய செயல்கள் யாழ்.குடாநாட்டில் இது ஒன்றும் புதியதல்ல. அண்மைய சில மாதங்களிலேயே நீர்வேலியில் வயோதிபப் பெண் மீதான வல்லுறவு முயற்சி, வடமராட்சிப் பெண்கள் தனித்திருந்த வீட்டினுள் இராணுவத்தினர் இரவில் சென்றமை என இராணுவத்தினரின் இத்தகைய அடாவடிச் செயல்களால் ஏற்பட்ட கலவரங்களே அதிகமாக நடைபெறுகின்றன.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய அத்துமீறல் சம்பவங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அவர்களிடம் இல்லை. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடாத்துவதற்கோ, அல்லது சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவத்தினரைக் கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கோ இராணுவம் முன்வருவதில்லை.

மாறாக, இத்தகைய அநாகரிகமான செயல்களில் ஈடுபடும் இராணுவத்தினரைப் பாதுகாக்கும் செயற்பாட்டிலேயே அவர்கள் முனைப்புடன் செயற்படுகின்றனர்.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய அநீதிகளுக்கு நீதிகேட்டுப் போராடும் மக்கள் மீது ஆயுதமுனையில் அடக்குமுறையைப் பிரயோகிக்கும் அவர்களின் இத்தகைய வன்முறைப் போக்கினாலேயே இத்தகைய கலவரங்கள் கட்டுக்கடங்காமல் வெடிக்கும் சூழ்நிலைகள் ஏற்படுகின்றன.

வழமைபோன்று தம்மீதான தவறை மறைத்து, அந்தத் தவறிற்காக நீதிகேட்டு வந்த மக்கள் மீது வன்முறையைப் பிரயோகித்து, ஆயுதமுனையில் அவர்களை அடக்க முனைந்த இராணுவத்தினரின் அடக்குமுறைப் போக்கு புத்தூரில் இடம்பெற்ற பெரும் கலவரத்திற்கும் அடித்தளமாக அமைந்தது. இனி, அன்றைய சம்பவத்தைச் சற்று மீட்டுப் பார்ப்போம்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியை ஒட்டி சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள இடம்தான் கலவரத்திற்குக் காரணமான சம்பவம் இடம்பெற்ற புத்தூர் கிழக்கு அன்னமார் கோவில் பகுதி.

வீதி அருகே அழகான அன்னமார் ஆலயம், நெருக்கமான மக்கள் குடியிருப்புகள் ,அந்த மக்களின் குடியிருப்புகளோடு நெருங்கியே அப்பகுதி மக்களின் நிம்மதியைக் குலைத்துக் கொண்டிருக்கும் இராணுவ முகாம். இதுதான் அந்தச் சூழல்.

கடந்த 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இருள்படர்ந்து அந்த ஊர் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அதிகாலை மூன்றுமணி. அந்தக் கணம்தான் அமைதியான அந்த ஊரைக் கலவர பூமியாக்கிய அந்தச் சம்பவம் இடம்பெற்றது. இப்போது அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுவதைப் பார்ப்போம்.

"குறித்த வீட்டில் நாம் மூன்று பெண்பிள்ளைகள் எமது தாய் என நான்கு பேர் வாழ்ந்து வருகிறோம். சம்பவதினம் அதிகாலை மூன்று மணிக்கு எமது வீட்டிற்கு வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் எங்களுடன் தவறாக நடக்க முயற்சித்தார். இதனால் அச்சமடைந்த நாங்கள் கூக்குரலிட்டு ஊரைக் கூட்டினோம். அங்கு திரண்டு வந்த ஊரவர்களுடன் இணைந்து குறித்த இராணுவச் சிப்பாயை விரட்டிச் சென்றோம். குறித்த இராணுவச் சிப்பாய் அருகேயுள்ள இராணுவ முகாமிற்குள் ஓடிச் சென்று மறைந்ததை நாம் கண்டோம்" என்கின்றனர்.

இந்தக் கருத்தை அந்த ஊர் மக்களும் உறுதிப்படுத்துகின்றனர். இவர்களின் கூற்றுக்கு ஆதாரமாக இராணுவத்தினர் பயன்படுத்தும் காலணியின் அடையாளமும் அந்த வீட்டின் முற்றத்தில் தெளிவாகக் காணப்படுகிறது. இதனைப் பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அப்பகுதி மக்கள் காண்பித்தனர். சம்பவத்திற்கு ஆதாரமாகப் பொலிஸாருக்கும், கண்காணிப்புக் குழுவினருக்கும் அதனைக் காண்பிக்க வேண்டுமென அவர்கள் பலமுறை முயன்றபோதும், பொலிஸாரோ, வேறு தரப்பினரோ அதனை நம்பவோ அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவோ முன்வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்களின் ஆவேசம் மேலும் தீவிரமடைந்தது.

தொடர்ந்து இச்சம்பவத்தைக் கண்டித்து காலை ஏழு மணி முதல் அங்கு திரண்ட மக்கள் இராணுவ முகாம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவத்தின் அராஜகங்களை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது எனக் கொதித்தெழுந்த மக்கள், இராணுவ முகாம் முன்பாகவுள்ள பாதைகளைத் தடுத்து மறியற் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வீதிகளுக்குக் குறுக்கே ரயர்களைப் போட்டு எரித்தும் தடைகளை ஏற்படுத்தியும் அப்பகுதி இராணுவ முகாமை உடன் அகற்றக் கோரி கோஷங்களை எழுப்பியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாயை இனங்கண்டு அவரைச் சட்டத்தின்முன் நிறுத்த வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், இதனை சற்றும் செவிமடுக்காத இராணுவத்தினர், தமது முகாமைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் எவரும் இரவுவேளை முகாமை விட்டு வெளியே செல்வதில்லை எனக் கூறினர். இதனால் மேலும், மேலும் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்திற்கு எதிராக பலத்த கோஷங்களை எழுப்பியதுடன், குறித்த சம்பவத்துக்கு நியாயமான நடவடிக்கை எடுக்காவிட்டால் விளைவு விபரீதமாகும் எனவும் எச்சரித்தனர்.

இதனையடுத்து, தமக்கெதிரான பொதுமக்களின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல் செல்வதைக் கண்டு அஞ்சிய இராணுவத்தினர், பொதுமக்களைக் கண்டப்படி தாக்கி துரத்தியடிக்க ஆரம்பித்தனர். பொல்லுகளாலும் துப்பாக்கி பிடிகளாலும் பொதுமக்களை இராணுவத்தினர் தாக்க ஆரம்பித்ததை அடுத்து, இராணுவத்தினரை நோக்கி கற்களாலும், தடிகளாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் திருப்பித் தாக்க ஆரம்பித்தனர். இதனால் அங்கு கடும்மோதல் இடம் பெற்றது.

நியாயம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை நோக்கி இராணுவத்தினர் நடாத்திய இந்தக் கண்மூடித்தனமான தாக்குதலில் 60 வயதான மூதாட்டி ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இராணுவத்தின் இந்தக் தாக்குதலையடுத்து அங்கிருந்து சிதறியோடிய மக்கள், மீண்டும் அப்பகுதியில் கூடி தமது போராட்டத்தை மேலும் விஸ்தரித்தனர். சுமார் 500 ற்கும் அதிகமான இளைஞர்கள், பெண்கள், வயோதிபர்கள் எனத் திரண்ட மக்களைக்கண்டு இராணுவத்தினர் கதிகலங்கிப் போயினர்.

இதனையடுத்து, அவசர அவசரமாக பொலிஸாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். பொதுமக்களின் கருத்துகளைப் பொலிஸாரும் ஏற்றுக் கொள்ளாமல் போகவே, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே கடும் தர்க்கம் நடந்தது. மேலும் மேலும் அங்கு ஆத்திரத்துடன் மக்கள் குவிவதைக் கண்ட பொலிஸாரும் நிலைமை விபரீதமாவதை உணர்ந்து அங்கிருந்து விலகிச் சென்றனர்.

இதற்கிடையில் அங்கு கூடிய பெருமளவான பொதுமக்கள் குறித்த இராணுவ வேலிக்கு தீ வைத்துக் கொளுத்தினர். தொடர்ந்து இராணுவ முகாமை நோக்கி கற்களால் தாக்க ஆரம்பித்தனர். இதனால் அச்சமடைந்த இராணுவத்தினர் துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்தவாறே முகாமை விட்டு பின்வாங்கி பின்வழியாகச் சென்றனர். மிகச் சில இராணுவச் சிப்பாய்களே முகாம் காவலில் ஈடுபட்டிருந்தனர்.

முகாமிற்குத் தீ வைக்கப்பட்டதையடுத்து ,இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டினால் சம்பவ தினம் பகல் 12 மணியளவில் புத்தூர்ப் பகுதியே ஒருமுறை அதிர்ந்தது. பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் வானத்தை நோக்கியே இராணுவத்தினர் துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்ததால் உயிர்ச்சேதங்கள் எவையும் அப்போது இடம்பெறவில்லை.

இச்சம்பவத்தை அடுத்து சற்று ஓய்ந்திருந்த பதற்றநிலை பிற்பகல் 2.30 மணியளவில் மேலும் அதிகரித்தது.

மீண்டும் அங்கு திரண்டிருந்த இளைஞர்களும் பொதுமக்களும் இராணுவ முகாமை நெருங்கிச் சென்று கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில் அங்கு நின்ற சிலர் இராணுவ முகாமை நோக்கிப் பொற்றோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த இராணுவத்தினர் பொதுமக்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டனர்.

இதனால் சுமார் 10 இற்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்தனர். இத்துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் ஒருவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு பலியானார். இச்சம்பவங்களால் அப்பகுதியில் மட்டுமல்ல, குடாநாடெங்கும் பதற்றநிலை நீடித்து வருகிறது. ஆவேசமடைந்துள்ள இளைஞர்களால் மேலும் ஒரு வன்முறை வெடித்து விடுமோ என்ற அச்சமுள்ளது.

இந்த அச்சம் காரணமாகவும், குறித்த முகாமருகே குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரால் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவும் அப்பகுதியில் இருந்து பெருமளவான மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வேறு பகுதிகளிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். இராணுவத்திற்கெதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ். வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பெண்கள் வகித்த பங்கு குறித்து இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இராணுவத்தின் அராஜகத்தைச் சகிக்க முடியாத இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கிளர்ந்தெழுந்து இராணுவ முகாமை, சுற்றிவளைத்து இராணுவத்தினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இராணுவத்தினரைச் சுற்றிவளைத்து வெளியேறு, வெளியேறு என உணர்ச்சிப் பிளம்புகளாகி இவர்கள் எழுப்பிய கோஷம், இராணுவத்தினரால் இவர்கள் எத்தகைய கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை நேரில் பார்த்தவர்களாலேயே நன்கு உணர முடியும். அதனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த கிராமத்தின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ள இந்த இராணுவ முகாமை அங்கிருந்து அகற்றுவதே மேலும் வன்முறைகள் நிகழ்வதைத் தடுக்க வழிவகுக்கும். மேலும், யாழ்ப்பாணத்தில் தொடரும் இத்தகைய அநாகரிகச் செயல்களைத் தடுக்க இராணுவத் தலைமை அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் ,நடக்கப் போபவை சொல்லித் தெரியவேண்டியதில்லை.


சுமதிபாலன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..