|
நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாக முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இளம் வயதினர் பலர் இதற்கு அடிமையாவதால் அவர்களின் எதிர்காலமே சூனியமாகிவிடும் நிலைமைகளே மிஞ்சுவதாக இருக்கும். எனவே சகல தரப்பினரும் இவ் விடயத்தில் மிகவும் விழிப்பாக இருந்து போதைப் பொருள் பாவனையையும், அது நாட்டுக்குள் கொண்டுவரப்படும் மார்க்கங்களையும் தடுத்து நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
பெற்றோரும் தங்கள் இளம் வயதினர் மத்தியில் மிகுந்த எச்சரிக்கையுடனும், கண்காணிப்புடனும் இருப்பது இன்றியமையாதது. அவர்களின் கரங்களில் தேவைக்கதிகமாகப் பணம் இருப்பதற்கு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. அதேவேளை அவர்கள் பழகும் நண்பர்கள் விடயத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். போதைவஸ்து விற்பனையாளர்கள் மெதுவாக இளம் வயதினரை அணுகி இப் பழக்கத்துக்கு அவர்களை அடிமையாக்கி விடுகின்றனர். இதனால் தங்கள் எதிர்காலம் குறித்தோ, போதைவஸ்தின் தீமைகள் தொடர்பாகவோ அதிகம் சிந்திக்காத இளம் வயதினர் அதற்கு மிகவும் இலேசாக அடிமையாகி விடுகின்றனர். எனவே வீட்டில் பெற்றோரும், பாடசாலைகளில் ஆசிரியர்களும் கூட்டாக இணைந்து செயற்படுவதன் மூலமாகவே போதை வஸ்தின் பிடியில் அவர்களைச் சிக்க விடாது பாதுகாக்க முடியும். இதேவேளை, இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருட்கள் மன்னார் தீவுக்கூடாக கடத்தப்படுவது அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மூன்று வாரங்களுக்குள் மாத்திரம் பெருந்தொகையான ஹெரோயின் போதைப் பொருள் மன்னாரில் கைப்பற்றப்பட்டதாகவும், இதனையடுத்து படையினர் சோதனை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் இருந்தும் படகுகள் மூலம் போதைப்பொருட்கள் மன்னார் ஊடாக கடத்தி வரப்பட்டு பின்னர் அவை கொழும்புக்குக் கொண்டு வரப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இதன் பேராபத்தை உணர்ந்து போதைப்பொருட்கள் நாட்டுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க சகல தரப்பினரும் முன்வர வேண்டும். வெறுமனே பொலிஸாரினாலோ, படையினராலோ மாத்திரம் நாட்டுக்குள் போதைப் பொருட்கள் கொண்டுவரப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியாது. இவற்றின் பின்னணியில் அரசியல்வாதிகள் பணவலிமை படைத்தோர், பாதாளக் கோஷ்டியினர் என பல்வேறு தரப்பினரும் சம்பந்தப்பட்டுள்ளதனால் இதனை அவ்வளவு சுலபமாகத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதே யதார்த்தமாகும். எவ்வாறெனினும் நாட்டினதும், மக்களினதும் நலன் கருதி நாட்டுக்குள் போதைப் பொருட்கள் கொண்டு வரப்படுவதை முற்றாகத் தடுத்து நிறுத்த பரந்த அடிப்படையிலான நடவடிக்கைகள் அவசியமாகும். பல்வேறு சந்தர்ப்பங்களில் போதைவஸ்து கடத்தலின் பொருட்டு பெருந்தொகைப் பணம் கைமாறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. போதைப்பொருட்கள் நாட்டுக்குள் ஊடுருவுவதை தடுக்க சகல தரப்பினரும் மிகுந்த விசுவாசத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்ற முன்வர வேண்டும். இன்றேல் அது இளம் வயதினரையும், சமுதாயத்தையும் அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்று நிறுத்துவதாக இருக்கும். அரசாங்கமும் இவ்விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது இன்றியமையாதது. சாதாரண விடயங்களுக்கெல்லாம் கூப்பாடு போடும் அரசியல்வாதிகள், இந்த விடயத்தில் மாத்திரம் மிகுந்த மௌனத்தைக் கடைப்பிடிப்பது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியுள்ளது. எவ்வாறெனினும் நாட்டையும் மக்களையும் இதன் பிடியிலிருந்து காக்க விரும்பினால், போதைவஸ்துக்களை நாட்டுக்குள் கொண்டு வருவோருக்கு எதிராக சட்ட திட்டங்களை அதிகரிப்பதும், உயர்ந்த தண்டனை வழங்குவதும் இன்றியமையாதது.
virakesari
|