|
உளவறியும் திகைப்புக் கட்டுரை. டென்மார்க்கில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒரு சோமாலிய தம்பதியர் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் கைது செய்யப்பட பொஸ்னிய சரஜீவா நகரில் நடைபெற்ற இரண்டு கைதுகளே காரணமாக இருந்துள்ளன. இந்த கைதுகளின் பின்னணியில் நடைபெற்றது என்ன பொஸ்னிய தலைநகர் சரஜீவாவில் இருந்து இந்தத் தேடல் பயணத்தை ஆரம்பிப்போம்.
திகைப்பு 01... பொஸ்னிய தலைசகர் சரஜீவாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த சில வாரங்களாக பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகப் போகிறது என்ற அநாமதேய மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன... பொஸ்னிய போலீசார் இது குறித்து கண்களில் எண்ணெய் ஊற்றியபடியே அலைந்து திரிந்தனர்... தடயங்கள் கிடைக்கவில்லை. சென்ற மாதம் 19 ம் திகதி அந்தத் தடயங்களில் ஒன்று எதிர்பாராத விதமாக அவர்களின் கைக்குக் கிடைத்ததும் திகைப்படடைந்தனர். திகைப்பு 02.. இந்தத் தேடுதல் வேட்டையில் இரண்டு நபர்கள் பொஸ்னிய சரஜீவா நகருக்கு 20 கி.மீ தொலைவில் உள்ள லிட்சா நகரில் கைதானார்கள். இந்த நகரில் உள்ள மூன்று வீடுகளில் இவர்கள் மறைத்து வைத்திருந்த பொருட்கள் பிடிபட்டன. தற்கொலைக் குண்டை கட்டிச்செல்லும் இடுப்புப் பட்டிகள், வெடி மருந்துகள், சைலன்சர் பூட்டிய துப்பாக்கிகள் என்பன அவற்றில் அடங்கும்... இந்த இருவரும் 20 வயது மதிக்கத்தக்கவர்கள் ...இருவர்களில் ஒருவர் சுவீடனைச் சேர்ந்தவர், மற்றவர் டென்மார்க்கைச் சோந்தவர். இவர்களை விசாரிக்க விசாரிக்க போலீசாருக்கு பல அதிர்ச்சித்தகவல்கள் கிடைக்க ஆரம்பித்தன...
திகைப்பு 03.. இவர்கள் கைதான வீட்டில் ஓர் ஒளிநாடா அகப்படுகிறது. அதைப் பார்த்தபோது போலீஸ் ஆடாமல் ஆடிவிட்டது. சம்மந்தப்பட்ட இருவருமே சாதாரண பேர்வழிகள் இல்லை என்ற உண்மை அப்போதூன் பொஸ்னிய போலீசிற்கு தெரியவந்தது.. அந்த இருவரும் தாம் தற்கொலைத் தாக்குதலை செய்யப் போவதாகவும் அல்லாவின் பேரில் அதைச் செய்வதாகவும் கூறி விடைபெறும் காட்சியை அங்கு பதிவு செய்து வைத்திருந்தார்கள். திகைப்பு 04.. இவர்கள் இருவருமே ஐரோப்பிய குடியுரிமை பெற்ற இளைஞர்கள். ஒருவர் சுவீடனில் வாழ்ந்தாலும் அவர் மொன்ரனிகோ எல்லைப் பகுதியில் உள்ள ஸன்பாஸ்கில் பிறந்தவர், இஸ்லாமிய பின்னணி கொண்டவர். மற்றவர் டென்மார்க்கில் உள்ள துருக்கிய பின்னணி கொண்ட இளைஞராகும். ஐரோப்பாவில் வாழும் இந்த இளைஞர்களின் கொள்கை என்ன இவர்களை மூளைச்சலவை செய்தது யார் ? இது அடுத்த கேள்வியானது. இவர்கள் வகாபிஸம் என்னும் கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்ததும் பொஸ்னிய போலீசார் மேலும் மிரட்சியடைகிறார்கள். திகைப்பு 05.. வகாபிஸம் என்றால் என்ன ? அறிய அறிய மேலும் பல உண்மைகள் வெளிவரத் தொடங்கின. முகமட் வகாப் என்பவர் 1703 - 1792 வரை மத்திய கிழக்கில் வாழ்ந்த கடும்போக்கு இஸ்லாமிய மதகுரு. இவருடைய கொள்கைப்படி மத்திய கிழக்கு வட்டகையில் இருந்து கிறீஸ்தவர், யூதர், சன்னி முஸ்லீம்கள் அனைவரும் அடியோடு துடைத்தெறியப்பட வேண்டும் என்பதாகும். இதே கொள்கையை கடைப்பிடிப்பவர் வேறுயாருமல்ல சர்வதேச பயங்கரவாதி என்று வர்ணிக்கப்படும் ஒஸாமா பின்லாடன்தான். வகாபிஸம் என்றதும் விவகாரம் அதல பாதாளத்திற்குள் இறங்கி விட்டதை போலீசார் கண்டுகொள்கிறார்கள். இவர்களிடம் மேலும் தீவிர விசாரணைகள் தொடர்ந்தன. இவர்களை எங்கே வைத்திருக்கிறோம், என்ன நடைபெறுகிறது என்ற விடயங்களை எல்லாம் பொஸ்னிய போலீசார் அடியோடு மறைத்துவிட்டனர். பொஸ்னியாவில் உள்ள டேனிஸ் துர்துவர் மட்டும் அவசர அவசரமாக இவர்களை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலைக்கு விரைகிறார். துருக்கிய பின்னணி கொண்ட இளைஞனை விசாரிக்கிறார். திகைப்பு 06... அதைத் தொடர்ந்து இவர்களுடன் தொடர்புடைய பல இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்ட நிலையில் இதுபோன்ற தாக்குதலுக்கு தயாரான நிலையில் சன்னத ஏற்றத்துடன் காத்திருக்கும் செய்தி வந்தது. தகவல் வந்த வேகத்தில் டேனிஸ் போலீஸ் தலைநகர் கொப்பன்கேகனை அண்டிய குடியிருப்பினுள் பாய்ந்தனர். மின்னல் வேகத்தில் இரு இளைஞர்கள் கைதாகிறார்கள். இவர்களிடம் 2.00.000 பெறுமதியான கரன்சி நோட்டுக்களும் அகப்படுகின்றன. அவர்களிடம் பெற்ற தகவலில் இருந்து மேலும் இருவர் கைதாக அதைத் தொடர்ந்து ஒரு சோமாலிய தம்பதியும் சரணடைகிறார்கள். அறுவர் மீதும் விசாரணைகள் தொடர்ந்தன. அது சரி இந்தப் பணம் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது... போதை வஸ்த்து கடத்தல், ஆயுதக்கடத்தல் போன்றவற்றின் மூலம் பெறப்படும் பணம் ஐரோப்பாவின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுகிறதா சந்தேகம் மேலும் வலுவடைந்து சென்றதை பத்திரிகைச் செய்திகள் விளக்கின....
திகைப்பு 07... கைதானவர்கள் 16 வயது முதல் 20 வயதுடைய இளைஞர்கள். அனைவரும் இஸ்லாமிய பின்னணி கொண்டவர்கள். சமுதாயத்தில் நல்ல மதிப்பும், ஒழுக்கமும், பணிவும் உள்ள இளைஞர்கள். கல்வியில் நல்ல கெட்டிக்காரர், இவர்களா இத்தகைய செயல்களுக்கு தயாரானார்கள் என்பதை டேனிஸ் மக்களும், மற்றவர்களும் நம்ப முடியாது தவித்தனர். இதில் 16 வயதுடைய இளைஞன் கறுப்புப் பட்டிக்காக கராத்தே பழகுபவர். இவருடைய ஆசிரியர் மிகவும் கடமையுணர்வுள்ள மாணவர் என்று இவரைப்பற்றிக் கூறுகிறார். ரமராடான் விரதமிருக்கும் மத அபிமானிகளான இவர்களா பயங்கரவாதத் தாக்குதலை ஐரோப்பாவில்; கட்டவிழ்த்துவிட தீர்மானித்தவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம். ஆனால் போலீஸ் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மீதான சந்தேகம் மேலும் மேலும் வலுவடைகிறது. தொடரும் விசாரணைகளுக்காக 16 நவம்பர் வரை இவர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்படுகிறார்கள். திகைப்பு 08.. துருவல் தொடர்ந்தது...ஐரோப்பாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கு திறவுகோலாக இருக்கும் இடம் எது இதுதான் அடுத்த கேள்வி. சந்தேகமே இல்லை பொஸ்னியாவில்தான் அந்த மையம் இருக்கிறது. இதை உளவுப்பிரிவு முன்னரே ஊகித்து தனது கண்காணிப்பை தொடங்கியிருந்தது. முக்கிய நபர்கள் மீது உளவுப் பிரிவு ஒரு வருடகாலமாக ஒரு கண் பார்வையை வைத்திருந்தது. சில மாதங்களுக்கு முன் பொஸ்னியாவில் இருந்து சுவீடன் சென்ற ஒரு பஸ் வண்டியில் வெடி மருந்து கடத்தப்பட்டது, அது சிக்குப்பட்டபோதே போலீசாருக்கு இந்த சந்தேகம் விழுந்திருக்க இடமிருக்கிறது... திகைப்பு 09.. இனி நாம் பொஸ்னியாவிற்குள் நுழைய வேண்டும். அங்கு தற்கொலைதாரிகள் கைதான சிறிய நகரத்திற்குள் போகிறோம். டென்மார்க்கில் பேசப்படுவதைப் போல அங்கு யாருமே இந்த விடயத்தை பெரிதாகப் பேசவில்லை. ஒரு நபர் கார் காரேஜ் ஒன்றில் திருத்த வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரிடம் கேட்டபோது இப்படியான கைதுகள் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறுகிறார். தினசரி இரவு வேளைகளில் அங்கு போலீஸ் வருவதும், யாரையாவது கைது செய்து செல்வதும் வழமை என்று கூறுகிறார். அப்படியானால் இங்கு வாழும் மக்கள் யார், அவர்களுடைய வாழ்வு எப்படியிருக்கிறது என்று அறிய ஆவல் பிறக்கிறது. திகைப்பு 10 ... மக்களை அறிய முயல்கிறோம்.... இந்த மக்கள் யுகோசுலாவிய போரில் சேர்பியர்களினால் துன்புறுத்தி அழிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள். இன்றுவரை போர்க்கால மனோநிலை மாறாமலே 50 வீதமானவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்குள்ளவர்களில் பெருந்தொகையானவர்கள் அல்ஜீரியர்கள். செப் 11 அமெரிக்கத் தாக்குதலின் பின் பெருந்தொகையானவர்கள் இங்கிருந்து அள்ளிச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இப்போது கியூபாவில் உள்ள குவான்ரநோமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அங்குள்ள வீடுகளின் வெளிச் சுவர்கள் முழுவதுமே துப்பாக்கிச் சன்னங்களால் சல்லடை போடப்பட்டுக் காணப்படுகிறது. இங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதானால் 100 யூரோ மாத வாடகை சொல்கிறார்கள். அவ்விடத்தில் ஒரு பிள்ளைகள் பராமரிப்பு நிலையம் காணப்படுகிறது. ஒரு சுவரில் அல்லாவிற்கு வணக்கம் சொல்லி ஒரு சுலோகம் இருக்கிறது. கீழே வேறு யாரோ பிரேக்டான்ஸ் என்று வேறொரு நிறத்தில் எழதியிருக்கிறார்கள். இஸ்லாமிய கடும் போக்குடையோர் நிறைந்துள்ள அப்பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து அதிக கேள்வி கேட்பது அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.
திகைப்பும் ஆட்களின் கணக்கும். டென்மார்க்கில் கைதான ஆறு நபர்கள் பற்றிய விபரம்.... நபர்.01. 20 வயது நபர் புறொண்ட் புய் நகரில் வாழ்பவர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நபர்.02. 16 வயது இளைஞன் புறொண்ட் புய் நகரில் கைது. இவருக்கு 10 சகோதரங்கள் உண்டு. நபர்.03. 17 வயது இளைஞர் நன்றாக டேனிஸ் கதைக்கக் கூடியவர். கும்நாசியம் முதலாம் ஆண்டு படிக்கிறார். நபர்.04 19 வயது நபர் பிறக்றிக்ஸ்பியாவை சேர்ந்தவர் ரி.டி.சியில் வேலை செய்கிறார். டேனிஸ் பெண்ணுடன் வாழ்கிறார். நபர்.05 20 வயது சோமாலிய பெண் ஸ்ரோவ கொப்பன்கேகனில் வாழ்பவர். டேனிசை இரண்டாவது மொழியாக பேசுபவர். நபர்.06 20 வயது சோமாலியர் கடுமையான மத நம்பிக்கை உடையவர். டேனிசை இரண்டாவது மொழியாக பேசுபவர். இவர்களே இதுவரை கைதானவர்கள். திகைப்பின் முடிவுதான் என்ன ? இவர்கள் மீதான விசாரணைகள் தொடர்கின்றன. பொஸ்னிய போலீசார் மேலதிக விபரங்களை வெளியிட மறுக்கிறார்கள். ஆனால் ஐரோப்பாவில் உள்ள இரண்டாவது தலைமுறை இஸ்லாமிய இளைஞர்களிடம் பின்லாடனால் வாலாயம் பண்ணப்படும் கடும் போக்கு வகாபிஸம் புகுந்துவிட்டதா? இதற்கு பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள் யார்? அது சரி.... உங்களுக்கு N22ஐளுபு என்றால் என்ன தெரியுமா ? அதுதான் பயங்கரவாதிகளை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கொத்திச் செல்லும் விமானம். உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் அமெரிக்க உளவு விமானத்தின் மூக்கில் உள்ள பதிவு இலக்கம். இந்த அமெரிக்காவின் ஆட்களை கடத்தும் உளவு விமானம் கடந்த மார்ச் 7ம் திகதி டென்மார்க்கிலும் தரித்து சென்றுள்ளதாக டேனிஸ் பாராளுமன்றம் நேற்று முன்தினம் தகவல் வெளியிட்டுள்ளது. தலை வியர்க்கிறது....அது ஏன் டென்மார்க் வந்தது? அதில் யாராவது ஏற்றிச் செல்லப்பட்டார்களா? இது முக்கிய கேள்வி. அப்படியானால் அந்த விமானம் மறுபடியும் இங்கு வரவேண்டிய நிலை வருமா.... நினைத்தால் எல்லாமே திகைப்பாக உள்ளது. சர்வதேசப் பயங்கர வாதத்திற்கு நாடுகளின் எல்லைகள் இல்லை... உலகின் மூலை முடுக்கெல்லாம் கைதாவோரை ஏற்றிச் செல்லும் உளவு விமானத்திற்கும் நாடுகளின் எல்லைகள் இல்லை... ஆக....குற்றங்கள் செய்வோர் மட்டும் உலக மக்களுக்கு திகைப்பை தரப்போவதில்லை.... அதை அடக்கும் வழிமுறைகளும் உலக மக்களுக்கு திகைப்பைத்தான் தரப்போகிறது.... திகைப்பு..... திகைப்பு ...... திகைப்பு..... இதுதான் வருங்கால உலகம்.... alalaikal
|