|
சிறிலங்கா அரசின் உண்மைக்குப் புறம்பான பிரசார நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது தற்காலிக பயணத்தடை விதிக்க நேர்ந்தது. அந்தப்; பயணத்தடை விவகாரம் சிறிலங்கா அரசுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருதிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் ஒன்றின் மேல் ஒன்றாக தொடர் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டு செல்வது சிங்கள அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீது விதித்திருக்கும் தற்காலிகத் தடையை தமக்குக் கிடைத்த பெரும் வெற்றியாக பேரினவாதச் சக்திகளும், சிறிலங்கா அரசும் அகமகிழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதன் மீது சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தமது விசனத்தைத் தெரிவித்துள்ள சூழலில் தமிழர் தாயகத்தில் நடந்த மனிதப் படுகொலைகளை சர்வதேச சமூகத்திடம் ஒப்புவிப்பது மனித உரிமை அமைப்புக்களிடம் முறையிடுவதும் காலத்திற்குப் பொருத்தமானதாக அமைய இடமுண்டு. சிறிலங்காவின் பொலிஸ் துறையானது பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த காடையர்கள் அல்லது ரவுடிக் கும்பல்களைப் போல் செயற்படுவதாக ஆசிய மனித உரிமைகள் அமைப்பு அண்மையில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் கொடூரங்களைத் தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வமைப்பு காட்டமாக தமது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஹொங்ஹொங்கை தலைமையகமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் அமைப்பு சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 180 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றையும் தயாரித்துள்ளது. இந்த அறிக்கை எதிர்வரும் நவம்பர் 7ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை மீறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. சிறிலங்காப் பொலிசாரினால் உடல், மற்றும் உளரீதியான சித்திரவதைகளுக் குள்ளானோருக்கு உதவும் வகையில் செயற்படப்போவதாகக் கூறும் மேற்படி அமைப்பு இது தொடர்பாக ஐ.நா.அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைப்பின் பேச்சாளர் பசில் பெர்னாண்டோ சிறிலங்காப் பொலிசாரின் சித்திரவதையையும், அதிகாரத் துஷ்பிரயோகம் என்பவற்றை தங்களது அமைப்பு முதன்மைப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை மனித உரிமைகளைப் பாதுகாத்தல், சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், சித்திரவதைகள் தொடர்பான நிரந்தர விசாரணை ஆணைக்குழு அலுவலகத்தை சிறிலங்காவில் அமைக்கவேண்டுமெனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதேவேளை பிந்துனுவௌப் படுகொலையைக் கடுமையாகச் சாடியுள்ள ஆசிய மனித உரிமைகள் மையம் அது தொடர்பான விசாரணை அறிக்கையைக் கடந்த 25ஆம் திகதி புதுடில்லியில் வெளியிட்டு சிறிலங்கா அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு பிந்துனுவௌ தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்த 28 தமிழ் இளைஞர்கள் ஒக்டோபர் 25ம் திகதி வெட்டியும்,அடித்தும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். தடுப்பு முகாமைச் சுற்றியுள்ள வீடுகளையும் சிங்களக் காடையர் கும்பல்கள் ,கத்திகள், பொல்லுகள், தடிகளுடன் முகாமிற்குள் புகுந்து தமிழ் இளைஞர்களைக் கொலை செய்தபோது முகாம் பாதுகாப்பில் இருந்த படைத்தரப்போ அல்லது சிறைச்சாலை அதிகாரிகளோ அந்தக் காடையர் கும்பலை விரட்டி அடித்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை காப்பாற்றமுடியவில்லை. மாறாக அவர்களும் தாக்குதலுக்கு ஒத்தாசை புரிந்தனர். இது தொடர்பான விசாரணை, கைது நடவடிக்கைகள் என்பன வெறும் கண்துடைப்பிற்கு நடைபெற்றனர் பின்னர் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளும் நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டனர். இதேவேளை படுகொலை தொடர்பாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் நீதிபதி குலதிலக தலைமையில் விசாரணை ஆணைக்குழுவை அமைத்தார். இருவருட காலத்துக்குள் விசாரணையை மேற்கொண்ட ஆணைக்குழு கடந்த இரண்டாயிரத்து இரண்டாமாண்டு பெப்ரவரி மாதம் தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. ஆனால் அறிக்கை கிடைத்து இரு வருடங்களாகியும் அதனை வெளிக் கொணர்வதற்கு ஜனாதிபதி அக்கறைகாட்டவில்லை. கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய ஆசிய மனித உரிமை மையத்தின் இயக்குனர் சுகாஸ் சர்மா அவர்கள் மிகவும் திட்டமிடப்பட்டு இந்தப் படுகொலை நடந்திருப்பதாகத் தெரிவிக்கும் அவர் காவல் நிலையத்தில் இருந்தவர்களை வெளியில் இருந்து அழைத்துவரப்பட்ட ஒருகும்பல் தாக்கியபோது பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படடுள்ளதாகவும் கூறியிருக்கிறார். மேலும் கருத்துரைத்த சுகஸ் சர்மா பாரபட்சமாக நடந்து கொண்ட எட்டுப் பொலிஸ்; அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அறிக்கை உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். இதேவேளை நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக் குற்றவாளிகளைத் தப்பவைக்க வேண்டும் என்ற நோக்குடனேயே நடத்தப்பட்டதாக புகார் கூறிய சுகாஸ்சர்மா உயிரிழந்தவர்களின் சடலங்களை அகற்றி சாட்சிகளைத் அழிப்பதற்குப் பொலிசாரே காரணம் என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்த போதிலும் அந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் நியாயப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். சமாதான சூழல் மறைந்து சர்வதேச சமூகத்தில் போரைத் திணிப்பதற்கான நியாயப்பாடுகளை சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்டுவரும் நிலையில் ஆசிய மனித உரிமைகள் மையம் அம்பலமாக்கியுள்ள விவகாரமும் அடுத்த கட்ட நகர்வும் சிங்கள அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் தவறில்லை. இந்தத் தருணத்தில் தமிழர் தாயகத்தில் செய்யவேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன. கடந்த 25 வருடத்திற்கு மேலாக நடந்த போரில் தமிழர் தாயகத்தில் சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலைகள், பாலியல் வன்புணர்வு, கொலை, கொள்ளை, சித்திரவதை, விசாரணையின்றி தடுத்து வைத்துத் துன்புறுத்துவது போன்ற பல்வேறு இம்சைப்படுத்தலுக்கும் தமிழினம் உள்ளாக்கப்பட்டுள்ளனர். கிழக்கில் வந்தாறுமூலை பல்கலைக்கழக அகதி முகாமில் இருந்த தமிழர்கள் 158 பேர் படையினரால் கொண்டு செல்லப்பட்டார்கள். இதுவரை அவர்கள் எங்கே கொலை செய்யப்பட்டார்கள் என்பது புரியாத புதிராகவேயுள்ளது. இதே போன்று சத்துருக்கொண்டான் படுகொலை, மகிழடித்தீவு படுகொலை, புல்லுமலைப் படுகொலை, மைலந்தனைப் படுகொலை, வீரமுனை, தங்கவேலாயுதபுரம், வடக்கில் செம்மணிப் புதைகுழி, மிருசிவில் படுகொலை, ...... எனப் பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம். இதுவரை இப்படுகொலைகளுக்கான குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்படவில்லை. விசாரணைகள் கண்துடைப்பிற்கே நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் அரச பயங்கரவாதத்தின் இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்த விடயங்கள் சர்வதேச சமூகத்தின் மத்தியில் வெளிக்கொணர வேண்டும். இக்கொலைகளுக்கு வன்புணர்வு நடவடிக்கைகளுடன் சம்மந்தப்பட்ட படைத்தரப்பினரை இனங்காட்டிய போதும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது போன்ற விடயங்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் ஐ.நா சபைக்கும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தமிழினம் சுதந்திரமாக வாழ்வதாயின் தமிழர் தாயகத்தில் இருந்து படைகள் வெளியே ற்றப்பட வேண்டும் எனத் தாயக மக்கள் அண் மைக் காலமாக மாவட்டம் தோறும் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வுகளில் வெளிப்படு த்தியுள்ளனர். ஆனால் சிங்கள அரசும் சிங்கள சக்தி களும் நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் நாடு துண்டாகாத வகையில் தீர்வு காணப்போவதாகத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை மனிதப் படுகொலை செய்த சிங்களப் படைகள் தமிழ் மண்ணை தொடர்ந்து ஆக்கிரமித்திருக்கும் போது இவர்களின் ஆக்கிரமிப்புக்குள் சமாதானத்தைக் கொண்டு வருவது என்பது இயலாத காரியம். அது தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்வுரிமையை வழங்காது. எனவே கடந்த போர்க்காலத்தில் சிங்களப் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், வன்புணர்வு முயற்சிகள் என்பவற்றைப் பட்டியலிட்டு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுடாக வெளிக்கொணர்ந்து சர்வதேசத்தில் சிறிலங்கா அரசின் முகத்திரையைக் கிழித்தெறிய வேண்டும். அதன் போதுதான் சர்வதேச சமூகம் சரியான தெளிவான விளக்கத்தை உணரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இவை தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ர தேர்தல் கண்காணிப்பாளர் ஜோன் குஷ்ணகான் தெரிவித்துள்ள கருத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியனவாகும். அதாவது கடந்த தேர்தலில் தாம் முன் வைத்த யோசனைகளை சிறிலங்கா அரசு சரியான முறையில் கடைப் பிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். சுயாதீன தேர்தல் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும.; பொலிசாரின் துஷ்பிரயோகத்தைக் கண்காணிப்பதற்கு விசேட குழுவொன்று நிறுவப்பட வேண்டும் போன்ற யோசனைகள் கடந்த தேர்தலில் முன்வைத்ததாக சுட்டிக்காட்டிய ஜோன்குஷ்ணகான் அவற்றைக் கடைப்பிடிக்க அரசு தவறிவிட்டதாகவும் தெரிவித்தார். இவ்வாறான கருத்துக்களைக் கடைப்பிடிக்காது சிறிலங்கா அரசு உதாசீனப்படுத்துமானால் எதிர் காலத்தை தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதில்லை எனவும் ஜோன் குஷ்ணகான் குறிப்பிட்டுள்ளார். ஒரு பக்கம் தென்னிலங்கையில் பேரினவாதம் தேர்தல் பிரசாரமாக சூடு பிடித்து வரும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்காலிக பயணத்தடையை தமக்குச் சாதகமான அறுவடையாக கருதியிருந்த சிறிலங்கா அரசுக்கு இப்போது தன் தலையில் தானே மண்ணினை வைத்தது போல் மனித உரிமை மீறல் விவகாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்பட்டு வருவது பாரிய பிரச்சினையை தோற்றிவிக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே நாமும் தமிழர் தாயகத்தில் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட, மேற்கொண்டு வருகின்ற மனித மீறல்களை சர்வதேச அரங்கிற்கு அவசரமாக வெளிப்படுத்துவது பொருத்தமாயிருக்கும் பிரவீனா
|