பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow தேர்தலுக்குப் பின்…..
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தேர்தலுக்குப் பின்….. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 04 November 2005

எதிர்வரும் 17ம் திகதியை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமானது. தமிழ் சமூகமும் 17ம் திகதி நடைபெறும் தேர்தலும் அதன் பின் ஏற்படப் போகும் நிகழ்வுகளையும் எதிர்பார்க்கின்றது.

போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டு மூன்றரை வருடங்கள் கடந்து விட்டன. இன்னும் நம்பிக்கையை அது கொண்டுவரவில்லை. போர் நிறுத்தம் பலவீனப் பட்டுள்ளது. தமிழ் மக்கள்மீது சிங்களப் படைப்புலனாய்வுப் பிரிவும், அதனோடு இணைந்து செயற்படுகின்ற தேசவிரோத ஆயுதக்கும்பலும் நிழல் யுத்தமொன்றைத் திணித்துள்ளன.

நிழல் யுத்தம் தீவிரமடையும் பட்சத்தில் அது நிஜயுத்தமாகிவிடும் சாத்தியக் கூறுகளே அதிகம் தென்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் சிங்கள தேசத்து தலைமைக்கான தேர்தல் கடுமையாகச் சூடுபிடித்துள்ளது.

பேரினவாதம் அணிதிரண்டு கொண்டிருக்கின்றது. தமிழினத்திற்குக் கடுகளவேனும் உரிமையைக் கொடுக்கக் கூடாது என்ற உறுதி மொழியை மகிந்த ராஜபக்ஷவிடம் வாங்கிக் கொண்டு இனவாதிகள் அணிதிரண்டு நிற்கின்றனர்.

மறுமுனையில் சமாதானம் என்ற வேடமிட்டுக் கொண்டு ரணில் விக்கிரமசிங்க தேர்தல் வாக்கு அறுவடைக்காகப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றார். இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்குப் பின்னராக சமாதானச் சூழலை ஏற்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளைக் கையாளாவிடத்து தமிழர் தரப்பு இன்னும் இலவு காத்த கிளிகளாக ஏமாறுவதற்குத் தயாராக இல்லை.

தமிழினம் பலத்தோடு நிற்கின்றது. சமாதான வாயிலை பேரினவாதம் பூட்டி அதன் சாவியை மகிந்தவிடம் ஒப்படைக்குமாக இருந்தால் விளைவுகள் விபரீதமாகவிருக்கும். கடந்த மூன்றரை வருட காலமாக இரத்தத்தையும், தசையையும் போராளிகள் கொடுத்து பொறுமை காக்கும் போர் நிறுத்த உடன்பாட்டை மீளவும் பலப்படுத்த வேண்டியது ஆட்சிக்கு வரும் அரசியல் தலைமையின் கடமையாகும். அதுமட்டுமின்றி தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்கின்ற சமாதான தீர்வு முயற்சிகளை முன்கொண்டு செல்ல வேண்டும்.

இவை நல்ல முறையில் கையாளப்படுமிடத்து சமாதான முயற்சி வெற்றியளிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அத்தகைய சூழலை சிங்களப் பேரினவாதம் ஏற்படுத்த இடமளிக்குமா? என்பது கேள்விக்குறி. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடந்த உக்கிரமான போரினால் தமிழர் தாயகம் சிதைக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் சிங்கள இராணுவம் தமிழர் வாழ்விடங்களை ஆக்கிரமித்திருக்கின்றது. கடந்த வருடம் இடம் பெற்ற சுனாமிப் பேரழிவினாலும் தமிழர் தாயகம் சிதைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகள் அவசியமானது. இதனை சிங்கள தேசம் ஒரு போதும் செய்யப் போவதில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளது நிர்வாகக் கட்டமைப்பினூடாகவே இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மேற்படி பணிகளை மேற்கொள்ள முடியும்.

எனவே இதற்கான சூழல் உருவாக்க வேண்டியது அவசியம். தற்போது இருபிரதான கட்சிகளின் தேர்தல் கொள்கைகள் தமிழ் மக்கள் சமாதானத்தின் மீது நம்பிக்கை வைக்கும் எத்தகைய கொள்கைகளையும் கொண்டிருக்கவில்லை.

மேலும், மேலும் போர் நிறுத்தத்தை வலுவிழக்கச் செய்து தமிழர் தரப்பை யுத்தத்துக்குத் தள்ளிவிடுவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் தேர்தலின் முடிவையும் வெற்றி பெறப் போகும் வேட்பாளரின் அணுகுமுறைகளையும் தமிழ் மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். நவம்பர் 17ஆம் திகதிக்குப் பின் தேர்தல் முடிவு வெளியான பின்பு சிங்கள தேசத்தின் தலை விதியைத் தீர்மானிக்கப் போகின்ற முடிவு சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது. தமிழ் மக்களது நம்பிக்கை சிதறடிக்கப்பட்டு போரைப் பிரகடனப்படுத்துவதற்கான சூழல் உருவாகுமானால் விளைவு விபரீதமாகவே அமைய இடமுண்டு.


eelanatham
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..