பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow மெல்ல வெளிப்படும் பூதம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மெல்ல வெளிப்படும் பூதம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 08 November 2005

பெரும்பான்மைச் சிங்களவர்களின் வாக்குகளை அள்ளிக் குவிப்பதற்காகப் பௌத்த சிங்களப் பேரினவாதிகளுடன் அணி சேர்ந்திருக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி தான். எப்படியும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்ற குறுகிய அரசியல் லாப நோக்கத்துக்காகத் தமது கட்சியினதும், கட்சித் தலைவியினதும் கொள்கைகளையும் பேரினவாதிகளிடம் அடமானம் வைத்தார் பிரதமர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தம்மைச் சிறுபான்மையினரின் ஆபத்பாந்தவராகக் காட்டுவதன் மூலம் சிறுபான்மை மக்களின் தமிழர், மலையக மக்கள், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினரின் வாக்குகளைத் திரட்டும் தந்திரோபாயத்தில் உத்தியில் ஈடுபட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

ஆனாலும், அவரையும் மீறி, அவரது கட்சிக்குள் இருந்து அதன் உண்மையான முகத்தை சுயரூபத்தை அம்பலப்படுத்துமாற்போலக் கருத்துகள் வெளிவந்து விடுகின்றன. ஹட்டன், கினிகத்தேனையில் கடந்த வியாழனன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சருமான காமினி திஸநாயக்காவின் மகனும், எம்.பியுமான நவீன் திஸநாயக்காவின் உரை. அவர் ஐ.தே. கட்சியின் பிரதித் தலைவர் கருஜெயசூரியாவின் மருமகனும் (மகளை முடித்தவரும்) கூட . ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கத்தில் இனவாதக் கருத்துகளை வெளியிட்டு வருபவர்களில் அவருக்கும் ஒரு தனி இடம் உண்டு.

"போர் என்றால் போருக்கும் நாம் தயார்" என்ற சாரப்படக் கடந்த மாதம் அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் சூளுரைத்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 1983 ஜூலை வன்செயல்களை அடுத்துத் தமிழர் தேசத்தைப்பார்த்து, அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா" போர் என்றால் போர்; சமாதானம் என்றால் சமாதானம்" என்று முழங்கியதற்கு ஒப்பானதாகும் நவீன் திஸநாயக்கவின் அந்தப் பேச்சு.

அவர் இரண்டு உண்மைகளை இப்போது கினிகத்தேனையில் நடைபெற்ற கூட்டத்தில் வெளியிட்டிருக்கின்றார். தமிழர் தரப்பு நோக்க வேண்டிய முக்கிய கருத்துகள் இவை.

* விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து சென்று கருணா குழு உருவாகக் காரணமாக இருந்தவர் ஐ.தே. கட்சித் தலைவர் ரணில்தான்.

* ரணில் ஜனாதிபதியான பின்னர் புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்துக்குப் போகவே முடியாது. மீறி அவர் யுத்தத்துக்குப் போனால் அந்த யுத்தத்துக்கு எங்கள் (இலங்கை) இராணுவத்தை அனுப்பத் தேவையில்லை. இலங்கை இராணுவத்துக்குப் பதிலாக இந்திய இராணுவமும், அமெரிக்க இராணுவமும் தான் புலிகளுடன் மோதும். இதற்கான ஒப்பந்த ஏற்பாடுகளை இந்தியக் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியுடனும், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் உடனும் ரணில் செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு குட்டைப் போட்டு உடைத்திருக்கிறார் நவீன் திஸநாயக்கா.

உண்மையான பூதம் இப்போது தான் மெல்ல, மெல்ல வெளிக் கிளம்ப ஆரம்பித்திருக்கின்றது. ஏற்கனவே, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த சமயம் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிகளின் போது, அமெரிக்கா போன்ற மேற்குலக வல்லரசுகளையும் அயலில் உள்ள வல்லாதிக்க நாடான இந்தியா போன்றவற்றையும் தமிழர் தரப்புக்கு எதிராகத் திருப்பி, சர்வதேச வலைப் பின்னல் ஒன்றை உருவாக்கி, தமிழர்களுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களையும், அமுக்கங்களையும், நெருக்குவாரங்களையும் போட வைத்தவர் ரணில் என்ற கசப்புணர்வு பட்டறிவு தமிழர்களுக்கு உண்டு.

நிறைவேற்று அதிகாரம் இல்லாமல் வெறும் பிரதமராக இருக்கும்போதே அத்தகைய சர்வதேச வலையமைப்பு என்ற பொறியைத் தமிழர் தரப்புக்கு எதிராகக் கொண்டு வந்து செருகியவர், இனி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற மிடுக்கோடும் வலுவோடும் ஆட்சிப்பீடம் ஏறும் போது எப்படியெல்லாம் மோசமாக நடந்து கொள்வார் என்ற அச்சம் பீதி பயம் தமிழர்களுக்கு ஏற்கனவே நன்கு இருக்கிறது. அதை உறுதிப்படுத்துவது போல அவரது கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரான நவீன் திஸாநாயக்கா எம்.பி யின் தற்போதைய பேச்சு அமைந்துள்ளது. தமிழரைப் பெரும் விசனத்துக்குள்ளும், எரிச்சலுக்குள்ளும், ஆழ்ந்த குழப்பத்துக்குள்ளும் ஆழ்த்தியிருக்கின்றன , இந்த உரையில் கூறப்பட்ட தகவல்கள்.

கட்சியின் முக்கிய பிரபலமான ஒரு தலைவரால் வெளியிடப்பட்ட இந்தக் கருத்துகள் குறித்து உண்மை நிலையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ஐயம் திரிபுபட மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் நவீன் திஸாநாயக்கா வெளியிட்ட தகவல் உண்மை என்றே கருதப்படும்; ஐ.தே. கட்சியின் மீதும் அதன் தலைவர் மீதும் தமிழர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து விடும்.


உதயன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..