|
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள் பொங்கிப்பிரவாகித்த இனவெறியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. போட்ட வேடத்தைக் களையாமல் இருக்க முடியவில்லை. இறுதியில் தமது சுயரூபத்தையும் தமது கடந்த கால நடவடிக்கைகள் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியினர் அளித்துவிட்டனர்.முன்னாள் ஐ.தே.கட்சி தலைவர்களில் ஒருவரான காமினி திசாநாயக்கவின் மகன் நவீன் திசாநாயக்க ஐக்கிய தேசியக்கட்சிக் காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை என்ற ரீதியில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பகிரங்கப்படுத்திய இரு தினங்களுக்குள் ஐ.தே.கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான மிலிந்த மொறகொடவும் அவற்றை ஊர்ஜிதம் செய்யும் வகையில் பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ளார்.
அப்பேட்டியில் நவீன் திசாநாயக்க போன்றே அமைதிப் பேச்சுவார்த்தைக் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அதாவது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராக அரசியல், இராணுவ ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பட்டியல் இட்டுள்ளதோடு இவை ரணில் விக்கிரமசிங்கவின் சாதனை எனவும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவாகச் செயற்படுவதாக எதிர்த்;தரப்பினர் தம்மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஐ.தே. கட்சியினர் அமைதிக் காலத்துத் தமது சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கியுள்ளனர். அது மாத்திரமன்றி ஏனைய கட்சிகள் தம்மீது சுமத்தியது போன்று விடுதலைப் புலிகளுக்கும் மற்றைய சிங்களக் கட்சிகளுக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு உண்டு என்பது போன்றும் பேசத் தலைப்பட்டுள்ளனர். இந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறிய கருத்தின் சிறு பகுதி சுட்டிக்கட்டத்தக்கது. இதில் அவர் விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பி யினருக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு இருக்கிறது எனத் தெரிவித்ததோடு ஜே.வி.பி; யின் தலைவர் இராணுவத்தைக் கலைத்து விடுமாறு கோருவதும் அதன் அடிப்படையிலேயே ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் பேச்சுக்கள் ஒரு வகையில் ஒப்புதல் வாக்குமூலம் போன்றவையே. நாட்டை விடுதலைப் புலிகளுக்கு ஐ.தே.க காட்டிக்கொடுத்துவிட்டது, நாட்டைப் புலிகளிடம் பிரித்துக்கொடுக்க ரணில் தயாராகி விட்டார் என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சியினர் சுமத்திய குற்றச்சாட்டுக்களைப் பொறுக்க முடியாமலே சமாதானத்தின் பெயரில் தாம் செய்த சாதனைகளைப் பட்டியல் இடத் தொடங்கியுள்ளனர். ஆனால், ஐக்கிய தேசியக்கட்சியின் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படாததாகவோ புரியக்கூடாததாகவோ இருந்ததில்லை. விடுதலைப் புலிகள் இயக்கமும், தமிழ்மக்களும் இதனை நன்கு புரிந்து கொண்டே இருந்தனர். அவசர அடிப்படை மனிதாபிமான உதவிகளை வழங்கக் கூடத் தயாராக இல்லாத கட்சியிடம் இருந்து எதனையும் எதிர்பார்க்க புலிகளோ, தமிழ் மக்களோ ஏமாளிகள் அல்ல. சமாதான முயற்சிகளுக்கு விடுதலைப் புலிகள் தயாரான போதும்; பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டபோதும் ஐக்கிய தேசியக்கட்சி ஆயுதப்படையினரைப் பலப்படுத்துவதிலும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சர்வதேச நாடுகளுடன் பாதுகாப்பு வலைப்பின்னல் ஒன்றை உருவாக்குவதிலுமே அக்கறை காட்டிவந்தது. அதுமட்டுமன்றி ஐ.தே.கட்சியின் கடந்த கால அரசியல் வரலாறும் தெரியாததொன்றல்ல. ஆகையினால் விடுதலைப் புலிகளையும், தமிழ் மக்களையும் ஏமாற்றி விட்டதாக ஆனந்தமோ பெருமிதமோ கொள்வதற்கு எதுவுமே இல்லை. ஆனால் ஒன்று ஐக்கிய தேசியக்கட்சி அமைதி விரும்பிய அனைவரையும் ஏமாற்றியுள்ளது என்பதே பொருத்தப்பாடானதாகும். அது மட்டுமன்றித் தன்னைதானே ஐ.தே. கட்சி ஏமாற்றிக் கொண்டுள்ளது என்றும் கூறலாம். ஏனெனில் அமைதி முயற்சியின் தோல்வி என்பது தமிழ் மக்களுக்கோ அன்றி விடுதலைப் புலிகளுக்கோ கிடைத்த தோல்வி என ஐக்கிய தேசியக்கட்சியினரோ அன்றி வேறு யாராவதோ எண்ணுவார்களேயானால் அதில் அவர்கள் ஏமாற்றமே அடைவார்கள். ஏனெனில் அமைதி முயற்சியின் தோல்வியானது இலங்கையில் பெரும் நெருக்கடி ஒன்றிற்கு வித்திடுவதாகவே இருக்கும் ஆகையினால் இத்தோல்வியானது இலங்கை அரசினுடைய தோல்வியாகவே இருக்கும். சிலவேளை மிலிந்த மொறகொடவும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் தாம் ஏற்படுத்தியுள்ள சர்வதேச வலைப்பின்னலானது இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்குப் பெரும் துணையாக இருக்கும் எனக்கருதலாம். ஆனால் உலக வரலாற்றில் உரிமைக்காகப் போராடிய, போராடும் எந்தவொரு மக்கள் கூட்டமும் ஒடுக்குமுறையாளரின் அடக்குமுறைக்கு உட்பட்டு அமைதி காத்ததாக வரலாறு இல்லை. இது தமிழருக்கும் பொருந்தும் ஈழநாதம்
|